பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை அறிவிப்புகள்
வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களில் சிங்கப்பூரர்களுக்கு குறைந்தபட்சமாக $1,400 மாத ஊதியம், படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவாக்கம், வேலையிடப் பாகுபாட்டை ஒழிக்க முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டுதல்களைச் சட்டமாக்குதல், எஸ்-பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் தகுதிவிதிகளைக் கடுமையாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளைப் பிரதமர் லீ சியன் லூங் அண்மையில் தமது தேசிய தினப் பேரணி உரையின்போது வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிந்து வந்தது தமிழ் முரசு.
இர்ஷாத் முஹம்மது
எஸ்.வெங்கடேஷ்வரன்
கி.ஜனார்த்தனன்
கொவிட்-19 பரவலால் கடந்த ஆண்டு இடம்பெறாத நிலையிலும் அந்தப் பெருந்தொற்றுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும் இவ்வாண்டு பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, கொரோனா தொற்றுச் சூழலில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவரும் தொழில்துறையினரும் வணிகர்களும் பிரதமரின் உரையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
இத்தகைய சூழலில், நாட்டில் புதிய வளர்ச்சி, வேலைகள், செழிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியத்தைப் படிப்படியாக உயர்த்துவதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார். அதன்படி, வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களில் வேலைசெய்யும் உள்ளூர் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக $1,400 வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
அடுத்த ஆண்டு சில்லறை விற்பனைத் துறையிலும் அதன்பின் உணவு சேவைகள், கழிவு மேலாண்மைத் துறைகளிலும் படிப்படியான சம்பள உயர்வு முறை கட்டாயமாக்கப்படவுள்ளது.
வேலை அனுமதிச்சீட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது வாய்ப்புகளைப் பறிப்பதாக சிங்கப்பூரர்கள் இடையே அமைதியற்ற நிலை நிலவி வருவதை அடுத்து, எஸ்-பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் தகுதிவிதிகள் காலப்போக்கில் கடுமையாக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
வேலையிடப் பாகுபாட்டைக் களைய, நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்பு வழிகாட்டுதல்கள் (டஃபெப்) சட்டமாக்கப்படும் என்றும் அவ்விவகாரங்களைக் கையாள்வதற்கென ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்படும் என்றும் திரு லீ அறிவித்தார்.
இதையடுத்து, சிங்கப்பூரர்களின் வேலையை, வருமானத்தை, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதில் அரசாங்கம் வகுக்கும் கொள்கைகளையும் திட்டங்களையும் பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
'குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்தும் அறிவிப்பு'
உள்ளூர் ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச தகுதி ஊதியமாக $1,400 வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு, எந்த வேலை செய்தாலும் உள்ளூர் ஊழியர்கள் அனைவர்க்கும் வருமானமாக ஒரு குறைந்தபட்சத் தொகை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் என்று சிங்கப்பூர் வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) தலைவர் டி.சந்துரு தெரிவித்துள்ளார்.
அதுபோல, காலிப் பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டவர்களைத் தேர்வு செய்யுமுன், தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் அந்த வேலைகளுக்குச் சமமாகவும் நியாயமாகவும் பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்த புதிய வேலைவாய்ப்புத் தீர்ப்பாயமும் சட்டமும் உதவும் என்று 'சிக்கி' கருதுவதாக அவர் சொன்னார்.
"அந்நடைமுறைகளைத் தழுவும்போது, வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து தேர்ச்சிகளையும் நிபுணத்துவத்தையும் உள்ளூர் ஊழியர்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்படும். அதன்மூலம் வலுவான சிங்கப்பூர் ஊழியரணியும் உருவாக்கப்படும்.
"சிங்கப்பூரின் நெறிமுறைகளுக்கு இணங்கும்படியான மனிதவளக் கொள்கைகளைக் கட்டமைக்க நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பயிலரங்குகளை நடத்திட, தொழிற்சபைகளுக்கும் வர்த்தகச் சங்கங்களுக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம்.
"மனிதவளத் தணிக்கைக்கு முன்வரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பது பயன்தரலாம். மிக முக்கியமாக, நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உன்னதத்தை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கவும் தங்களது வேலைவாய்ப்பு நடைமுறைகளை மறுவடிவமைக்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்," என்றார் டாக்டர் சந்துரு.
அதே நேரத்தில், வேலையிடப் பாகுபாட்டுச் சட்டத்தை ஒரு பீடத்தின்மீது வைத்துவிடாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
"வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்படவுள்ளன. இது, சிங்கப்பூரில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், குறிப்பிட்ட சில துறைகளிலும் நிறுவனங்களிலும் ஊழியர் செலவு அதிகரிக்கலாம். அவை வெளிநாட்டு ஊழியர்கள் சிலரைச் சொந்த ஊருக்குத் திருப்பியனுப்பி, அவர்களது வேலைகளை சிறிய அளவிலான உள்ளூர்க் குழுவிடம் மாற்ற நேரிடலாம்," என்றும் டாக்டர் சந்துரு சொன்னார்.
இதனிடையே, வேலையிடத்தில் இனப் பாகுபாட்டைக் களைய அரசாங்கம் எடுக்கும் முயற்சியை வரவேற்பதாகக் கூறினார் ஓய்வு பெற்ற கணக்கியல் துறை ஊழியரான திருவாட்டி தேன்மொழி சங்கர், 56.
'தகுதிக்கேற்ற ஊதியம்'
ஊழியர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அதனால் படிப்படியான சம்பள உயர்வு முறை நடப்பிற்கு வரும் முன்னரே நாங்கள் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டதாகவும் கூறினார் 'கிளீனிங் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் அஜீஸ் யூசோஃப்.
"துப்புரவு, நிலவனப்புத் துறைகளில் உள்ள எங்கள் ஊழியர்கள் சம்பள உயர்வாலும் திறன் பயிற்சியாலும் பயன்பெற்றுள்ளனர். எங்கள் ஊழியர்கள் மிகுந்த பயிற்சி பெறும்போது, குறிப்பாக பாதுகாப்பு போன்ற அம்சங்களில் பயிற்சி பெறும்போது, எங்களின் வாடிக்கையாளர்களும் மேம்பட்ட சேவையைப் பெற முடிகிறது; உற்பத்தித்திறனும் கூடுகிறது," என்றார் திரு அப்துல்.
இதனால், உரிய பங்காளிகள், தொழில்துறை என இருதரப்பினருமே பயனடைகின்றனர் என்றும் மற்ற துறைகளுக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவுபடுத்தப்பட இருப்பது நேர்மறையான, தெளிவான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"முதலாளிகளாக, சிங்கப்பூர் ஊழியரணியின் நலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். தொழில் நடைமுறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் ஆதரவு அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், உள்ளூர் ஊழியர்களை ஈர்ப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்.
"சரியான ஆள்களை வேலையில் சேர்த்தல், சரியான ஊதியத்தை வழங்குதல் என்பன போன்ற சரியான செயல்களைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று என்னைப் போன்ற முதலாளிகளைப் பிரதமர் ஊக்குவித்துள்ளார்," என்று திரு அப்துல் கூறினார்.
புதிய படிப்படியான சம்பள உயர்வு முத்திரை, தொழில் நிறுவனங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்து, முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய நடைமுறைகளைப் பின்பற்றும்படி வலியுறுத்தும் என்றும் அவர் சொன்னார்.
'சரியான நோக்கம்,
சரியான கொள்கை'
படிப்படியான சம்பள உயர்வு முறையின் நோக்கம் சரியானது என்பதாலும் அது சரியான கொள்கை என்பதாலும் தாம் அதனை வரவேற்பதாகச் சொன்னார் 'ஸ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ்' நிர்வாக இயக்குநர் ஜோதி மாணிக்கவாசகம்.
அந்த முறை, பணவீக்கத்தின் தாக்கத்தைச் சரிக்கட்டி, ஊழியர்களின் சம்பளம் கூடுவதற்கு உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
மெத்தனமாக இராது, திறனை வளர்த்து, தங்களை மேம்படுத்திக்கொண்டால் மேலும் சம்பள உயர்வு பெறலாம் என்ற உந்துதலையும் அது ஊழியர்களுக்கு அளிப்பதாக இருக்கும் என்று திரு ஜோதி மாணிக்கவாசகம் குறிப்பிட்டார்.
அத்துடன், "வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்கள், உள்ளூர் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளமாக $1,400 வழங்குவதைக் கட்டாயமாக்குவது சரியானது என்றே சொல்வேன். அத்தகைய நிலையில்தான் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை நிறுவனங்கள் சரிவரப் பின்பற்ற முடியும்," என்றும் அவர் சொன்னார்.
'எஸ்-பாஸ் குறைப்பால் பாதிப்பு'
வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கு குறையவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கொள்கை அளவில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்பதாகக் கூறினார் சிறிய நிறுவனமொன்றின் உரிமையாளரான திரு வி.ரமணன், 48.
"எம்பிளாய்மண்ட் பாஸ் அனுமதி அட்டை வழங்கப்படுவதைக் குறைப்பது பற்றித்தான் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். எஸ்-பாஸ் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்வது உள்ளூர் வர்த்தகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எஸ்-பாஸ் அட்டையில் வேலைக்கு அமர்த்துவதற்கு, அந்த வேலைகளை சிங்கப்பூரர்கள் செய்யத் தயங்குவதே காரணம்," என்றார் அவர்.
திறன், வேலைத் தகுதி சார்ந்துதான் வெளிநாட்டு ஊழியர் தேவையை நாம் அளவிட வேண்டும் என்ற திரு ரமணன், சிங்கப்பூரர்கள் ஆர்வம் காட்டாத வேலைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைத் தேர்வு செய்யும் வசதி இருக்கலாம் என்றும் சொன்னார்.
சிங்கப்பூரர்களின் நலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை முழுமனத்துடன் வரவேற்கும் அதே வேளையில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் கடுமையாக்கப்படவுள்ள கட்டுப்பாடுகளை எண்ணி நிறுவனங்கள் கவலைகொள்வதை மறுப்பதற்கில்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றியபின், சென்ற ஆறு மாதங்களாக 'சென்னை டிரேடிங்' நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். இப்போது எனக்கு மூன்றாம் நிலை ஒட்டுநர் உரிமம் உள்ளது. நான்காம் நிலை ஓட்டுநர் உரிமம் எடுத்தால் இன்னும் பெரிய லாரிகளை என்னால் ஓட்ட முடியும். எனக்கு எப்போதுமே முறையாக ஆங்கிலம் கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. படிப்படியான சம்பள உயர்வுத் திட்டத்தின்மூலம் இந்த ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடிந்தால் சிறப்பாக இருக்கும்.
- கே.சுகுமாரன், 59, லாரி ஓட்டுநர்
செயல்முறைகளை மின்னலக்கமயமாக்கவும் எளிமைப்படுத்தவும் உதவும் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படும் என்று நம்புகிறேன். விளம்பரச் சுவரொட்டிகளைத் தயாரிப்பது, தரவுகளைச் சேகரிப்பது, இருமொழித்திறன் போன்ற பலவகையான திறன்கள் ஊழியர்களுக்கு கிடைத்தால் அது நிர்வாகத்திற்கு உதவும்.
- அருணாச்சலம் அழகு, 57,
ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தின் நிர்வாக மேலாளர்,
அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச தகுதி ஊதியத்தை அதிகரித்தது வரவேற்கத் தக்கது. எங்கள் கடையில் குறைந்தபட்சமாக $1,800 சம்பளம் வழங்குகிறோம். நாள்தோறும் கிட்டத்தட்ட 10 மணி நேரம் துடிப்புடன் வேலை செய்யவேண்டியிருப்பதால் சம்பளமும் அதற்கு இணையாக இருக்கவேண்டும். மொழித்திறன், கணினி அறிவு, விற்பனை ஆற்றல் போன்ற திறன்களைப் படிப்படியான சம்பள உயர்வுத் திட்டத்தின்மூலம் ஊழியர்கள் பெற முடிந்தால் நம் தொழிலுக்கு அது பேரளவில் பயனளிக்கும்.
- 'மஹிஷா கலெக் ஷன்ஸ்' கடை உரிமையாளர்
முருகையன் இளங்கோ, 48
வெளிநாட்டு ஊழியர்களைப் பெரிதும் சார்ந்திருக்கும் லிட்டில் இந்தியா கடைகள்
ஊழியரின் திறனை மேம்படுத்துவது நிச்சயமாக நல்ல விஷயம். அது, தனிப்பட்ட ஊழியர்க்கும் அவரது நிறுவனத்திற்கும் பயன்தரும். கூடுதல் திறன்பெற்ற ஊழியர்கள், தங்கள் நிறுவனத்திற்காக பல பணிகளையும் செய்ய வாய்ப்பு உள்ளது என்கிறார் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) மகளிர் பிரிவுத் தலைவி ஜாய்ஸ் கிங்ஸ்லி (படம்).
அதனால், நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்பட முடியும். திறனை மேம்படுத்திக்கொண்டவர்களால் கூடுதல் அல்லது நிபுணத்துவ வேலையைச் செய்ய முடியும் என்பதால் ஊழியர்கள் அதிக ஊதியம் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது இவரது கருத்து.
"இருப்பினும், பொதுவாகவே லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மனிதவளப் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், ஊழியர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வேளையில் கடைகளை நிர்வகிக்க முதலாளிகள் சிரமப்பட வேண்டியிருக்கலாம்.
"லிட்டில் இந்தியாவில் சில்லறை வணிகர்களின் செயல்பாட்டு முறை சற்றே வேறுபட்டது.
"இங்கு சிங்கப்பூரர்களை வேலைக்கு ஈர்ப்பது பொதுவாகவே சிரமமாக இருக்கிறது. அதனால், லிட்டில் இந்தியா கடைகள் பெரும்பாலும் எஸ்-பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் ஊழியர்களைச் சார்ந்துள்ளன.
"சிங்கப்பூரர்கள் எழுவரை வேலைக்கு வைத்திருந்தால் மட்டுமே ஒரு எஸ்-பாஸ் ஊழியரை வைத்திருக்கலாம் என்று இருந்தபோதே நாங்கள் சிரமப்பட்டோம்.
"இந்நிலையில், இவ்வாண்டு ஜனவரி முதல் அந்த விகிதம் 9:1 என்றாகிவிட்டது. இப்போது, உள்ளூர் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக $1,400 அறிவிக்கப்பட்டது.
"அதிக வாடகை, மேற்செலவுகள் காரணமாக சிறிய சில்லறை விற்பனைக் கடைகள் மனிதவளப் பற்றாக்குறையுடன் சமாளிக்க வேண்டியிருக்கலாம். தொழிலை விரிவுபடுத்துவது என்ற எண்ணத்தையும் நிறுத்திவைக்கும் நிலை ஏற்படலாம்.
"கொவிட்-19 தொற்று, கடை முதலாளிகளின் கையிருப்பைக் கரைத்து வருகிறது. சம்பளம், தீர்வை, வாடகைக் கழிவு போன்ற வழிகளில் அரசாங்கம் தனது பங்கை ஆற்றி, கைகொடுத்து வருவதை மெச்சுகிறோம்," என்றார் திருவாட்டி ஜாய்ஸ்.
சில்லறை விற்பனைக் கடைக்காரர்கள் ஏற்கெனவே சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஊழியர்களுக்கான தகுதி விதிமுறைகளில் சற்று மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அல்லது ஒட்டுமொத்த வேலை அனுமதி அட்டை முறையையும் திருத்தி அமைப்பது, லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இருப்பது போன்ற வணிகங்கள் தாக்குப்பிடிக்க பேருதவியாய் இருக்கும் என்பது இவரது வேண்டுகோளாக இருக்கிறது.
'வேலையிடப் பாகுபாடு குறித்து துணிந்து புகாரளிக்க வேண்டும்'
சிறுபான்மையினர் எதிர்நோக்கும் வேலையிடப் பாகுபாட்டை ஒழிப்பது மிகக் கடினம். என்றாலும், அச்சமின்றி வேலையிட முரண்பாடுகள் குறித்துப் புகார் செய்யும் துணிச்சல் ஊழியர்களுக்குத் தேவை என்கிறார் முன்னாள் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் துணைத் தலைவரும் 'யுனைடெட் வொர்க்கர்ஸ் ஆஃப் பெட்ரோலியம் இண்டஸ்ட்ரி' நிர்வாகச் செயலாளருமான கார்த்திகேயன் கிருஷ்ணமூர்த்தி, 62.
"நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைளுக்கான முத்தரப்பு வழிகாட்டுதல்கள் (டஃபெப்) முதன்முதலில் ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஆலோசனை வழங்குவதற்கு அமைக்கப்பட்டது. நாளடைவில் ஊழியர்களின் சார்பாக செயலாற்ற முடிந்தது.
"எடுத்துக்காட்டாக, இனப் பாகுபாட்டுடன் கூடிய வேலை விளம்பரத்தை 'டஃபெப்' தடுக்க முடியும். அரசாங்கம் இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்துவது வேலையிடப் பாகுபாட்டைக் குறைப்பதில் பெரும்பயன் அளிக்கும்.
"அதுபோக, உதவி தேவைப்படும் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி போன்ற மற்ற அமைப்புகளிடமிருந்தும் உதவி நாடலாம்," என்று திரு கார்த்திகேயன் கூறினார்.