பெட்ரா பிராங்கா விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் மலேசியா
பெட்ரா பிராங்கா தீவு சிங்கப்பூருக்குச் சொந்தம் என்று அனைத்துலக நீதிமன்றம் கடந்த 2008ல் அளித்த தீர்ப்பு குறித்து தான் இனி செய்யக்கூடியவை பற்றி மலேசியா ஆராயும் என்று அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார். அத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் அளிக்கும் முடிவை மலேசியா கைவிட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது அந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
அது குறித்த மூன்று சிறப்புச் செயல்குழுக்களை அமைப்பதற்கு மலேசிய அமைச்சரவை நேற்று முன்தினம் முடிவு செய்ததாக திரு இஸ்மாயில் சப்ரி நேற்று விடுத்த அறிக்கை கூறியது. மூன்று முக்கிய பிரச்சினைகளை ஆராய அக்குழுக்கள் ஆறு மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.
அது குறித்து அனைத்துலக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றார் திரு இஸ்மாயில் சப்ரி.
தோட்டக்கலை விரும்பிகளுக்கு 400,000 கீரை, காய்கறி விதைகள்
தேசிய பூங்காக்கள் கழகம், காய்கறி, கீரை விதைகள் கொண்ட 400,000 பொட்டலங்களை 'கார்டனிங் வித் எடிபல்ஸ்' திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளது. இவற்றைப் பெற விரும்புவோர், இன்று காலை 10 மணியிலிருந்து அதற்காக பதிந்துகொள்ளலாம்.
இந்த நடவடிக்கையையும் சேர்த்து திட்டத்தின் மூலம் மொத்தம் சுமார் 860,00 விதைகள் வழங்கப்படுகின்றன நேற்று நடைபெற்ற இவ்வாண்டின் சிங்கப்பூர் தோட்டக்கலை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இது பற்றி அறிவிக்கப்பட்டது. பொதுமக்களிடையே தோட்டக்கலை ஆர்வத்தை வளர்க்க இத்திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் 30% சத்துணவுத் தேவைககளை வரும் 2030க்குள் உள்ளூரில் தயாரிக்கும் இலக்கை அடையும் வகையில் திட்டம் செயல்படுகிறது.
கத்தி வைத்திருந்தவர் கைது
கிளிமெண்டி அவென்யூ ஒன்றில் உள்ள ஒரு காப்பிக்கடையில் கத்தி ஒன்றை வைத்திருந்ததாகக் கூறப்பட்ட 58 வயது ஆடவர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.10 மணிக்கு அது குறித்து அழைப்பு வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
போலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த ஆடவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். பொது இடத்தில் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஆயுதம் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்றாண்டு வரையிலான சிறையும் அதிகபட்சம் ஆறு பிறம்படிகளும் விதிக்கப்படலாம்.

