கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களில் கொவிட்-19 பாதிப்புகளைக் கடந்து வருவதற்காக தனிப்பட்டவர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம், வித்தியாசமாக நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தலாம்.
மக்கள்தொகையில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர். பொதுச் சுகாதாரத்துக்காக பொருளியல் ஆதாயங்களை இழக்க விருப்பமில்லை. இந்த நிலையில் உலகின் மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூர் அரசாங்கமும் கொள்ளைநோய் பாதிப்புகளைச் சமாளிக்கும் திட்டங்களைத் தொடரலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதே சமயத்தில் வர்த்தகங்கள் மற்றும் ஊழியர்களின் செயல்திறனை மாற்றியமைக்கும் நடைமுறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் நிபுணரான வால்டர் தெசைரா வலியுறுத்தியுள்ளார்.
கிருமிப்பரவல் காலத்தில் சிங்கப்பூரின் பிறப்பு விகிதமும் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
2019ஆம் ஆண்டின் அது, 1.4லிருந்து 2020ல் 1.1க்கு குறைந்தது. கடந்த மாதம் வெளியான வரவு செலவுத் திட்ட முன்னோட்ட கணிப்பில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் சாத்தியமான ஊக்குவிப்பு திட்டங்கள் இடம்பெறலாம் என அரசாங்கம் கோடிகாட்டியிருந்தது.

