ஜப்பானியர்கள் வருகிறார்கள், ஜப்பானியர்கள் வருகிறார்கள்," எனப் பலர் கூச்சலிட்டு அங்குமிங்கும் ஓடினார்கள். ஜப்பானியர்கள் சுற்றியிருந்தவர்களைக் கையில் இருந்த தடியால் அடித்தார்கள்," என்று கூறிய 93 வயது ராமச்சந்திரன் கண்ணப்பனுக்கு இப்போது நினைத்துப் பார்க்கும்போதும் உடல் நடுங்குகிறது.
"மக்கள் மிகவும் பயந்துபோனார்கள். வெள்ளைக்காரர்களுடன் நானும் என் தாத்தாவும் ஒரு மாதம் தென்னந்தோட்டத்தில் தங்கியிருந்தோம்.
"தோட்டத் தொழிலாளி ஒருவரை மரத்தில் ஏறவிட்டு, அந்த மரத்தின் அடியை வெட்டினர். மரத்துடன் ஊழியர் விழுந்து இறப்பதை கண்டு அவர்கள் சிரித்ததை நான் பார்த்தேன். இந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை," என்றபோது அவர் கண்கள் கலங்கின.
"விலங்குகளையும் அவர்கள் வதைத்தனர். ஓர் ஆட்டைப் பிடித்தவர்கள், அதன் கழுத்தை முதலில் வெட்டாமல் உயிரோடு அதன் உடற்பாகங்களை வெட்டிச் சாப்பிட்டார்கள்," என்றபோது அவர் கண்கள் கலங்கின.
ஜப்பானியர்களால் அதிகம் சிரமப்பட்டது சீனர்கள் என்றாலும் தமிழர்களும் பாதிக்கப்பட்டனர். சுபாஷ் சந்திரபோஸினால் ஜப்பானியர்கள் இந்தியர்களை மதித்தாலும் எளிய தமிழ் மக்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள்," என்று அவர் கூறினார்.
"ஜப்பானியர்கள் லாரிகளில் வருவார்கள். சாலைகளையும் பர்மா ரயில் பாதையையும் அமைப்பதற்காக தமிழர்கள் உள்பட பல இளையர்களைப் பிடித்துச் செல்வார்கள். குற்றுயிரும் கொலையுயிருமாக அங்கிருந்து தப்பித்து வந்த இரண்டு பேரைப் பார்த்தேன்.
"தாத்தா இந்தியாவிலிருந்து இவர்களை மலாயாவுக்கு அழைத்து வந்து நல்ல சம்பளம் அளித்திருந்த நிலையில் இப்படி ஆனது," என்ற திரு ராமச்சந்திரனின் வருத்தம் அதிகரித்தது.
சாரணர் படையில் இருந்தபோது, 12 வயதுச் சிறுவனாக காயமடைந்த பிரிட்டிஷ் வீரர்களுக்கு முதல் உதவி அளித்ததை நினைவுகூர்ந்தார்.
1929ல் பிறந்த ராமச்சந்திரன் ஈப்போ அருகிலுள்ள பாகான் டத்தோ பகுதியில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பிரிட்டிஷ்ஷாருக்குச் சொந்தமான தென்னந்தோப்புகளில் அவரது தாத்தா தலைமை கணக்கராக இருந்தார். இரண்டு வயதில் தாயார் இறந்தார், அப்பாவும் குடும்பத்தை விட்டுப் போய்விட்டார். பதினேழு வயதில்தான் தமது பெற்றோர் பற்றி அவருக்குத் தெரியவந்தது.
படையெடுப்பின்போது கற்றுக்கொண்ட ஜப்பானிய மொழி பிற்காலத்தில் ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த திரு ராமச்சந்திரனுக்குக் கைகொடுத்தது. ஜப்பானிய சகாக்களுடன் பணியாற்றியபோது ஜப்பானியர்களின் மீது தமக்கு முன்னர் இருந்த வெறுப்பு காலப்போக்கில் மறைந்ததாகக் கூறினார்.
போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு நான் கண்ட புதிய தலைமுறை ஜப்பானியர்கள் முற்றிலும் மாறுப்பட்டவர்கள். ஜப்பானிய போர்வீரர்களின் அட்டூழியங்கள் தங்களுக்கும் வருத்தம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்," என்று அவர் கூறினார்.
1950ல் சிங்கப்பூருக்கு வந்த திரு ராமச்சந்திரன், தம் மூன்று மகன்களுக்காக ஆங்கில மொழிப் படிப்பை விரும்பி சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டார்.
"துன்பத்தின் அர்த்தத்தைக் கற்பிக்கவே ஜப்பானியப் படைகள் வந்ததாக நினைக்கிறேன். அந்நாட்களை முற்றிலும் மறக்க விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை. நான் இதுகுறித்து இளைய தலைமுறையினரிடம் அதிகம் பேசுவதில்லை. எதிர்காலம் மிகப் பிரகாசமானது. கொவிட்-19 கிருமிப்பரவல் மத்தியிலும் வாழ்க்கையும் கல்வியும் தொடர்கிறது அல்லவா? இதுதான் நாம் அடைந்துள்ள முன்னேற்றம்," என்று ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசியான திரு ராமச்சந்திரன் கூறினார்.

