சக்தி மேகனா, கி. ஜனார்த்தனன்
கொவிட்-19 என்ற இருட்டுச் சுரங்கத்தைக் கடப்பதற்காக சிங்கப்பூர் சமுதாயத்திற்கு கடந்த ஈராண்டுகளாகப் பலமுறை அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்கள் கைகொடுத்துள்ளன.
கொவிட்-19 ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து நிலைமை தேறி வருவது போல காணப்படும் இந்நேரத்தில் நீண்டகால குறிக்கோள்களுடன் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் வரையப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருள் சேவை வரி(ஜிஎஸ்டி) தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் ேததி முதல் 8% ஆகவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் ேததி முதல் 9%ஆகவும் 'ஜிஎஸ்டி' அதிகரிக்கும்.
மக்களிடம் இந்த வரிச் சுமையைக் குறைக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கான சலுகைகள், ஊழியர் திறன் மேம்பாடு, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி, வருமானத்திற்கு ஏற்ற வரி உயர்வு, ஊழியர்களின் சம்பளத்தைப் படிப்படியாக உயர்த்துதல், ஓய்வுகாலச் சேமிப்பு உள்ளிட்டவற்றில் இந்த வரவுச் செலவுத் திட்டம் கவனம் செலுத்து கிறது.
இந்த நிலையில் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் பற்றிய தங்களுடைய கருத்துகளை தமிழ் முரசிடம் பலர் பகிர்ந்துகொண்டனர்.
புதிய எம்பிளாய்மண்ட் மற்றும் எஸ்- பாஸ் விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளங்கள் இவ்வாண்டு செப்டம்பர் முதல் 500 வெள்ளி கூடுதலாக உயர்த்தப்படும் என வரவுச்செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தத்தி லிருந்து மீண்டுவரும் நிலையில் இந்த உயர்வு வர்த்தகச் செலவை கணிசமாக அதிகரிப்பதாக காயத்ரி உணவகத்தின் உரிமையாளர் திரு ச. மகேந்திரன் தெரிவித்தார்.
"எங்களிடம் குறைந்தது 150 பணியாளர்கள் இருக்கின்றனர்.இவர்களில் 10 விழுக்காட்டினர் எஸ்-பாஸ் வைத்திருப்போர்," என்று அவர் குறிப்பிட்டார். "நாங்கள் இந்திய உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்றதால், இந்திய உணவுகளைத் தயாரிக்க, இந்தியாவில் இருந்து வரும் இந்திய சமையல்காரர்களை நம்பியுள்ளோம். சேவைத் துறையின் கீழ் செயல்படும் எஸ்-பாஸ் ஒதுக்கீடு, தனித்திறன் பெற்ற எங்களுடைய பணியாளர்களை எங்களுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கிறது."
"இருப்பினும், அடிப்படை தகுதிக்கான சம்பள உயர்வு, உணவகத்தின் செலவுகளை அதிகரிக்கும். உள்ளூரில் சரியான திறன்களைக் கொண்ட பொருத்தமானவர்களைக் கண் டறிய முடியாததால், தற்போது வெளிநாட்டு திறனாளர்களை சார்ந்து இருக்கும் உச்ச வரம்பை 10%ஆக உயர்த்தியுள்ளோம். அதே சமயத்தில் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த எங்களால் இயன்ற அளவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். "குறைந்தபட்ச சம்பளத் தேவை அதிகரிப்பதைத் தவிர, 2025 ஆம் ஆண்டுவாக்கில் ஊழியர் களுக்கான தீர்வை $330ல் இருந்து $650 ஆக அதிகரிக்க விருப்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் செலவுகள் கூடும் என்றார்.
மின்னிலக்கமயமாதலுக்கும் புத்தாக்கத்திற்கும் அரசாங்கம் கூடுதலாக முதலீடு செய்துள்ளதை வரவேற்பதாக என்டியுசி லர்னிங்ஹப் அமைப்பின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார். மின்னிலக்க முறைகளின் மூலம் நேரத்தைச் சேமித்து அதிக மதிப்பு உள்ள வேலைகளுக்காகப் பயன்படுத்த முதலாளிகள் முற்படுவதாக அவர் கூறினார்.
"மின்னிலக்கச் சந்தை, வர்த்தக செயல்முறை தானியக்கமயம், 'யூஎக்ஸ்' வடிவமைப்பு, தரவு ஆய்வு ஆகிய தகவல் தொழில் நுட்பங்களைப் புதியவர்களும் கற்றுக்கொள்ளலாம்.
"இந்தத் திறன்களை பல்வேறு துறைகளிலும் வேலைகளிலும் பயன்படுத்தலாம்.
"எனவே, வரவுசெலவுத் திட்டம் நல்கியுள்ள ஆதரவை ஊழியர்களும் வேலையிடங்களும் பயன் படுத்துவது நல்லது," என்று திரு செந்தில் குமார் சொன்னார்.
சுற்றுச்சூழலுக்கு ஆதரவான அரசாங்க அணுகுமுறைகளை வரவேற்பதாக எரிபொருள் நிர்வாக நிபுணர் கவிக்குமார்
முருகானந்தன் கூறினார்.
பொதுமக்கள் தங்கள் பங்கிற்கு எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இது குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
இதற்கான எரிபொருள் தேவை அதிகரிப்பதால் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கிறது.
இந்தக் கட்டணங்களை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தற்போதைய வரவுசெலவுத்திட்டத்தின் வழி கைகொடுக்கிறது.
ஆயினும், பயனீட்டாளர்களாகிய நாம், எரிசக்தியின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள முற்படவேண்டும்.
குறைந்த அளவு எரிபொருளைப் பயன்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்துவதுடன் குளிரூட்ட மாற்று வழிகளைத் தேடவேண்டும்," என்று அவர் கூறினார்.
பொருள் சேவை வரி உயர்வால் உணவுப் பொருள்களின் விலையை ஏற்ற வேண்டிய சூழல் வரலாம் என்று கணேசன் விலாஸ் உரிமை யாளர் திரு சுகுமாரன் எதிர்பார்க் கிறார்.
"பொருள் சேவை வரி கூடும்போது, மூலப் பொருள் களின் விலையும் கூடும். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகம் காசு கொடுத்து உணவை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இது வாடிக்கை யாளர்களுக்கும் எங்களைப் போன்ற நிர்வாகங்களுக்கும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும்," என்றார் அவர்.
தமது உணவகப் பணியாளர்களில் இரண்டு விழுக்காட்டினர் எஸ்-பாஸ் அனுமதி வைத்திருப்பவர்கள் என்று கூறிய அவர், சில பேர் என்றாலும் அவர்களை வேலையில் வைத்திருப்பதற்கான செலவு அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று திரு சுகுமாரன் மேலும் கூறினார்.
"எஸ்-பாஸ் வைத்திருப்போரின் குறைந்தபட்ச சம்பளம் 500 வெள்ளி அதிகரிக்கவுள்ளது.
"இதனால் எங்கள் செலவுகள் உயரும். பெரும்பாலும், இந்தியாவில் இருந்து வருவோரைத்தான் சமையல் வல்லுநர்களாக பணியில் அமர்த்த முடிகிறது.
இந்திய இனிப்பு வகைகளை செய்ய உள்ளூரில் அதிகமான ஆட்கள் இல்லை," என்று திரு சுகுமாறன் சுட்டிக்காட்டினார்.
மருத்துவச் செலவு அதிகரிப்பால் பணி ஓய்வுக்கான மத்திய சேமநிதி அடிப்படைத் தொகை ஐந்தாண்டுகளுக்கு ஆண்டிற்கு 3.5 விழுக்காடு உயர்வு நியாயமே என்று பயண முகவர் ராஜ்குமார் பெருமாள், 50, தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டில் ஐம்பத்தைந்து வயதை எட்டப்போகும் தமக்கு, இந்தத் தொகை பிற் காலத்தில் பாதுகாப்பு அரணாகத் திகழப் போவதாக அவர் சொன்னார்.
"நான் 65 வயது ஆனதற்குப் பிறகு பணவீக்கம் உயரும் என எதிர்பார்க்கிறேன்.
எனவே வாழ்நாள் முழுவதற்கும் பெறப்போகும் 1,000 வெள்ளி மாதாந்திரத் தொகை அந்தத் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்யும்," என்று மேலும் தெரிவித்தார் ராஜ்குமார் பெருமாள்.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன் பாட்டிற்கு கூடுதல் எரிபொருள் வரியை விதிக்காமல் இருந்தது தங்களுக்கு நிம்மதியை அளிப்பதாக பீடுபீ தளவாட உரிமையாளர்கள் திரு ரமேஷ் இளங்கோவனும், 32, திரு சதீஷ்குமாரும், 33, தெரிவித்தனர்.
"எங்களின் செயல்பாட்டுச் செலவு குறைவாக இருந்தால் மட்டுமே எங்களைப் போன்ற சிறிய தளவாட நிறுவனங்கள் போட்டித் திறனுடன் இருக்க முடியும்," என்று தமிழ் முரசிடம் திரு ரமேஷ் தெரிவித்தார்.
"பொருள் சேவை வரியால் பாதிப்பு நிச்சயம் ஏற்படும். இவ்வாண்டும் எரிபொருள் விலையில் ஏதேனும் அதிகரிப்பு இருந்திருந்தால் அது எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும். வர்த்தகச் செயல்பாடு செலவுகள் அதிகரிக்க, நம் சேவைக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டிவரும். எங்கள் துறையில் கட்டண மாற்றம் சிறிதாக இருந்தாலும் விளைவுகள் பெரியது. கட்டணங்களை எங்களால் கட்டுப்படியாகக்கூடிய வகையில் வைத்திருப்பது இன்னும் கடினமாக இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.

