1942 பிப்ரவரி 15. நினைத்தாலே துயர நினைவுகள் நெஞ்சைத் துளைக்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்த நாள். சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானியர், இங்கு மூன்றாண்டுகள் ஆட்சி நடத்தியபோது தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை நமது மூத்தோர் பகிர்ந்து வருகிறார்கள். இது 3வது வாரத் தொடர்ச்சி.
இருண்ட காலம் உருண்டாலும் இன்னும் வருத்தும் நினைவுகள்
சிங்கப்பூரின் ஜப்பானியப் படையெடுப்புக்கு முன்னதாக போர்விமானங்கள் குண்டு பொழிந்தபோது தமது தாத்தா, சொந்த உயிரைப் பணயம் வைத்து தமக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் உணவு தேடித் தந்ததாக வீ. பிச்சையம்மா நினைவுகூர்ந்தார். நன்டா பால்மரத்தோட்டத்தில் உள்ள ஒரு குகை ஒன்றில் குடும்பத்தினருடனும் அண்டை வீட்டார் சிலருடனும் ஒதுங்கியபோது தாமும் சில பிள்ளைகளும் பசியால் அழுததை நினைவுகூர்ந்தார். "பெரியவர்கள் தண்ணீரை மட்டும் அருந்தி அமர்ந்திருந்தனர். ஆனால் பிள்ளைகளோ பசி, பசி என அழுது கொண்டிருந்தனர்,"
"நாங்கள் அழுததைக் கண்ட என் தாயாரின் தகப்பனார் எங்கள் மீது இறக்கப்பட்டு உயிரைப் பணயம் வைத்து எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றார். சில காய்
கறிகளைப் பறித்து சட்டி, உப்பு முதலிய சமையல் பொருட்களை எடுத்து மீண்டும் அந்தப் பெரிய குகைக்குத் திரும்பினார். எங்களுக்காக அவர் வெண்டைக்காய்க் குழம்பு சமைத்து சோற்றுடன் பிசைந்து பந்துகளாக உருட்டி சின்னப் பிள்ளைகளுக்குத் தந்தார். அதுவே என் வாழ்நாளில் சுவைத்த ஆக ருசியான உணவு," என்று அவர் கூறினார்.
1938ல் வீரமலை-முருகம்மா தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்த திருமதி பிச்சையம்மா, இரண்டு சகோதரர்களுடனும் இரண்டு சகோதரிகளுடனும் வளர்ந்தார். தற்போதைய நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் போர்க்காலத்தின்போது தாங்கள் வளர்ந்த வீடு இருந்ததாகக் கூறினார். "நாங்கள் வாழ்ந்த இடத்தை 15ஆம் கல் என அழைப்போம்," என்றார் அவர்.
ஜப்பானியப் போர்வீரர்களை நினைவுகூர்ந்த பிச்சையம்மா, இந்தியத் தலைவர்களை அவர்கள் பெரிதும் மதித்ததாகக் குறிப்பிட்டார். "நேரு, நேதாஜி படங்களை இந்தியர்கள் வேண்டுமென்றே வைத்திருப்பர். ஜப்பானியர்கள் அந்தப் படங்களைக் கண்டால் கையெடுத்து வணங்குவர். வீட்டுக்குள் வரமாட்டார்கள்," என்றார் அவர்.
"ஜப்பானியர்கள் சீனப் பெண்
களைப் பாலியல் பலாத்காரம் செய் வதை அறிந்து தப்பிக்க முயன்ற சீனப் பெண்கள், எங்கள் வீட்டுக்கு வந்து இந்தியப் பெண்களைப்போல வேடமிட்டு ஒளிந்துகொள்வார்கள். நாங்கள் அணியும் பொட்டும் கைலி சட்டையையும் அணிந்துகொண்டு எங்கள் வீட்டில் பதுங்கி இருப்பார் கள்," என்று அவர் கூறினார்.
குற்றம் செய்ததாகக் கூறப்படும் சீனர்களைக் குழி தோண்ட வைத்து அவர்களை வரிசையில் நிற்க வைத்து அவர்களது தலைகளை வெட்டிச் சீவியதை ஒளிந்திருந்து பார்த்ததாகவும் திருமதி பிச்சையம்மா நினைவுகூர்ந்தார்.
ஆனாலும் தமிழர் சமூகம் அனுபவத்த துயரம் வேறுவிதமாக இருந்ததை திருமதி பிச்சையம்மா சுட்டினார். "சயாமில் ரயில் பாதையை அமைப்பதற்காக ரப்பர் தோட்ட ஆண் ஊழியர்களை ஜப்பானியர்கள் பிடித்துச் சென்றனர். என் அப்பாவும் மாமாவும் அவர்களால் பிடிக்கப்பட்டனர்."
ஜப்பானியப் படையிடம் சமையல்காரராக வேலை செய்த தமிழர் ஒருவரின் உதவியால் ஜப்பானியர்களின் கண்களில் படாமல் இருவரும் தாய்லாந்திலிருந்து தரை வழியாக சிங்கப்பூருக்குத் திரும்பினர். வாழைமரத் தண்டால் செய்த மிதவைகள் மூலமாக சிங்கப்பூர் நீரிணையைக் கடந்து வீடு திரும்பினர்.
1945ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் சிங்கப்பூரைவிட்டுச் சென்றாலும் தம் குடும்பத்திற்குத் தெரிந்த ஜப்பானிய வீரர் ஒருவர் பின்னர் வர்த்தக முதலாளியாக மாறி 1970களில் தங்களது குடும்பத்தைக் காண மீண்டும் வந்தது எதிர்பாராதவிதமாக இருந்தது என்றார் அவர்.
"படையெடுப்பின்போது பதின்ம வயது வீரரான அவர், அடிக்கடி ஒளிந்து இருப்பார். ஆனால் என் குடும்பத்தினருடன் பழகுவார், சாப்பாட்டையும் சிகரெட்டையும் கேட்பார். போருக்குப் பின்னர், அவர் வர்த்தகராக வளர்ந்து மலேசியாவில் சொந்தத் தொழில் தொடங்கினார். சிங்கப்பூருக்கு வந்து நாங்கள் இருந்த இடத்தைக் கண்டு
பிடித்தார். எங்கள் குடும்பத்திற்கு அவர் நன்றி தெரிவித்தோடு எங்களைப் படம் எடுத்தார். அந்தப் படத்தை இன்னும் வைத்திருக்கிறேன்," என்று திருமதி பிச்சையம்மா கூறினார்.
1955ஆம் ஆண்டில் தமது 17வது வயதில் உறவினரான வீரநந்தகோபாலைத் திருமணம் செய்தார் இவர். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் 10 பேரப்பிள்ளைகள் (இரு வர் அமரர்கள்), இரண்டு கொள்ளுப்பேரப்பிள்ளைகள் ஆகியோர் உள்ளனர்.
வாழ்க்கையில் எது நேர்ந்தாலும் அதனைச் சமாளிக்க முடியும் என்ற துணிச்சலை ஜப்பானியப் படையெடுப்பு தமது தலைமுறையினருக்குத் தந்ததாகக் கூறிய திருமதி பிச்சையம்மா, இந்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை இளையர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.

