ஜப்பானியர்கள் படையெடுத்த அதே ஆண்டில் வேலுப்பிள்ளை நீலாம்பாள், புதுமணப் பெண்ணாக சிங்கப்பூருக்குள் அடியெடுத்து வைத்திருந்தார். தாய் தந்தையர், உற்றார் உறவினர்களை விட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நேரத்தில் சிங்கப்பூரில் போர்மூண்டது. ரயில் வண்டியில் சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்தபோது ஜோகூர் பாலத்தில் நடப்பட்ட கழிகளின் மீது சீனர்களின் தலைகள் வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ந்ததாக திருமதி நீலாம்பாள் நினைவுகூர்ந்தார்.
ஜோகூர் பாருவில் இரும்புப் பட்டறையில் வேலை செய்த வேலுப்பிள்ளைக்கும் மாரியம்மாவுக்கும் 1931ஆம் ஆண்டு பிறந்த நீலாம்பாள், தமது 12வது வயதில் ரயில்வே துறையில் பாரந்தூக்கியாக இருந்த வெள்ளைசாமியை மணம் புரிந்தார். கம்போங் பாருவிலுள்ள ரயில்வே குவாட்டர்ஸ் வீட்டில் இருவரும் தங்கினர். "அந்த வீடு மூன்று மாடிகளைக் கொண்டிருந்தது," என்று நினைவுகூர்ந்தார் திருமதி நீலாம்பாள்.
ஜப்பானியரின் தொல்லைகளை விவரித்த அவர், "எங்கள் வீட்டிற்குள் ஜப்பானியர்கள் நுழைந்து பைகளைத் திறந்து சோதனை செய்வர். என் கைக்கடிகாரத்தையும் வீட்டில் இருந்த சர்க்கரையையும்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை," என்று அவர் கூறினார். ஆயினும், காலப்போக்கில் ஜப்பானிய வீரர்கள் தமிழர்களிடம் பிரியத்துடன் பேசியதாகக் கூறினார். சிங்கப்பூரில் தமக்குத் தோழிகளாக இருந்த மீனாட்சி, லோகாம்பாள் என்ற இரண்டு 13 வயது பெண்கள், இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்ததாக நினைவுகூர்ந்தார்.
உணவு பெரும்பாலும் மரவள்ளிக் கிழங்காக இருந்தாலும் தமது கணவர் வேலை செய்த ரயில்வே நிலையத்தில் ஜப்பானிய வீரர்கள் சோற்று உருண்டைகளை தமது கணவருக்குத் தந்ததாகக் கூறினார். உணவுக்குத் தட்டுப்பாடுகள் இருந்தபோதும் இந்தியத் துணிகளைத் தம்மால் வாங்க முடிந்ததாக திருமதி நீலாம்பாள் கூறினார். தற்போது 91 வயதாகும் இவருக்கு எட்டுப் பிள்ளைகள், 22 பேரப்பிள்ளைகள், 26 கொள்ளுப் பேரப்பிள்ளைகள்.

