1936ஆம் ஆண்டு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்த ஜோதியம்மா, தமது ஆறாவது வயதில் ஜோகூரின் லாபிஸ் பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். ரப்பர் தோட்ட ஊழியர்களான தம் பெற்றோர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
"மாரியப்பன் என்ற என் அண்ணன் ஆங்கிலம் தெரிந்தவர். மிகவும் கெட்டிக்காரர். படையெடுப்புக்கு முன்னதாக அவர் வாகன ஓட்டுநராக வேலை செய்துகொண்டே கல்வி கற்றார். ஆனால் எலி திருடியதாக அவரை ஜப்பானியர்கள் பிடித்தனர்.
"பள்ளிக்கூடத்திலுள்ள ஒரு திடலின் நடுவே என் அண்ணனை நிற்கவைத்து சுடத் தயாராக இருந் தனர்.
"ஆனால் துப்பாக்கி சுட்டபோது என் அண்ணன் உடனே குனிந்து தப்பி ஓடினார். அருகிலிருந்த தேவாலய மணிக்கூண்டில் சிறிது நேரம் மறைந்திருந்த பின்னர் வீடு திரும்பினார்," என்று விவரித்தார் திருமதி ஜோதியம்மா.
சிங்கப்பூரில் படையெடுப்பு முடியும் வேளையில் திருமதி ஜோதியம்மாவின் குடும்பம் தஞ்சோங் பகார் வந்து சேர்ந்தது.
ஈப்போவிலிருந்து திரும்பிய தம் அண்ணனுக்கு ரயில்வேயில் வேலை கிடைத்த பிறகு அவர், தமது குடும்பத்தினரை சிங்கப்பூருக்கு அழைத்ததாக திருமதி ஜோதியம்மா கூறினார்.

