சமையல்காரர் பற்றாக்குறையினால் ஃபேரர் பார்க் வட்டார சிராங்கூன் சாலையில் 18 ஆண்டுகளுக்கு இயங்கி வந்த கோமளாஸ் உணவகக் கிளை நாளை மார்ச் 14ஆம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
"உணவகங்களின் அடித்தளமே சமையல்காரர்கள்தான். கூட்டமும் வியாபாரமும் இருந்தாலும் சமைப்பதற்கு ஆள் இல்லாததால் கடையை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது," என்று வருத்தத்துடன் கூறினார் கடையின் உரிமையாளர் திரு ஆர் தனசேகர், 63.
"1995ஆம் ஆண்டு வர்த்தகம் தொடங்கினோம். 2004ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து சிரமங்கள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டு
களாக உணவகத்தை நடத்துவது மிகவும் சிரமமாகி விட்டது," என்று அவர் கூறினார்.
"12 கிளைகளை நடத்திவந்த எங்களிடம் சமையற்காரர்களின் பற்றாக்குறையால் அந்த எண்ணி க்கை நான்காகக் குறைந்துவிட்டது. இப்போது இந்தக் கிளையையும் மூடுகிறோம்.," என்றார் திரு தனசேகர்.
"அசைவ உணவகங்களைவிட, சைவ உணவகங்களில் உணவுத் தெரிவுகள் அதிகம் என்பதால் அதிக சமையற்காரர்கள் தேவைப்படுகின்றனர். எங்களது உணவகத்திற்குக் கைதேர்ந்த இந்திய சமையற்காரர்களே பொருத்தமாக இருப்பார்கள். உள்ளூர் இந்திய சமையற்
காரர்கள் பரோட்டா, மீ கோரேங் போன்ற பதார்த்தங்களைச் செய்வார்கள். அசைவ உணவுகளைச் சமைப்பர். பாரம்பரிய சைவ உணவு சமைக்க இங்கு போதிய மனித
வளம் இல்லை," என்றார் அவர்.
திறமையான சிங்கப்பூர் இந்திய சமையல்காரர்கள் இந்திய உணவகங்களில் வேலை பார்ப்பதைக் காட்டிலும் நட்சத்திர உணவகங்களில் வேலை செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் பெரும்பாலும் குழம்புகள், கறிவகைகளைச் சமைக்க உதவும். எனினும், தோசை, பூரி போன்ற பதார்த்தங்களுக்கு ஆள் தேவை. சில கிளைகளைக் காப்பாற்றுவதற்காக உணவுத் தெரிவுகளை வெகுவாகக் குறைத்திருக்கிறோம்.
"ஓர் அளவுக்கு மேல் அவற்றைக் குறைத்தால் வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்துவிடும்," என தொழில் சிரமங்களை விளக்கினார் திரு தனசேகர்.

