வாடிக்கையாளர்களுக்குப் பதில் வரிசையாக வந்த சிரமங்கள்

வாடிக்கையாளர்களுக்குப் பதில் வரிசையாக வந்த சிரமங்கள்

2 mins read

அடுத்தடுத்து மூடப்பட்ட இந்திய உணவகங்கள்

சரியான சமையல்காரர்கள் கிடைக்காமல் திண்டாடுவது இந்திய உணவகங்களின் நீண்டநாள் நிலை. அந்தத் திண்டாட்டக் காயத்தில் தேள் கொட்டியதுபோல வந்து சேர்ந்து துன்பத்தைத் தூக்கிப் பிடித்தது கொரோனா என்னும் கொள்ளைநோய்.

பட்ட சிரமம் போதாது என்று இதுவும் தொற்றிக்கொண்டது.

பயணக் கட்டுப்பாடு சமையல்காரர் பற்றாக்குறையை அதிக மாக்கியது. அதன் காரணமாக இங்கு மூடப்பட்ட இந்திய உண வகங்களின் பட்டியல் நீள்கிறது. சமையல் ருசிக்காததால் வாடிக்கை யாளர் வரத்து குறைந்து உணவகத்தை மூடவேண்டிய நிர்ப்பந்தம் தொடர்ந்தது.

 புக்கிட் தீமா ஆறாம் அவென்யூ கிளையை கடந்த மாதம் தற்காலிகமாக மூடியது பனானா லீஃப் அப்பல்லோ உணவகம். காரணம், ஆள்பற்றாக்குறை.

 ரிவர் வாக் தந்தூர் உணவகத்தின் கிளார்க் கீ கிளை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மூடப்பட்டது. தற்போது தங்கள் கைவசம் இருப்பது ஃபேரர் பார்க் வட்டார உணவகம் மட்டுமே என ரிவர்வாக் தந்தூர் உரிமையாளர் திரு ஜகீர் சிங், 37, கூறினார்.

 முத்து'ஸ் கறி உணவகத்தின் டெம்சி கிளையும் ஜெம் கிளையும் கொரோனா கொடூரம் மிகுந்த 2020ஆம் ஆண்டு இழுத்து மூடப்பட்டன.

 ரேஸ் கோர்ஸ் ரோட்டில் பிரபலமாக விளங்கும் ஜக்கிஸ் உணவகத்தின் ஷெண்டன் வே கிளையும் 2020 மார்ச் மாதம் மூடப்பட்டது. ஊழியர் பற்றாக்குறை, குறிப்பாக சமையல்காரர்கள் இல்லாததால் இந்தக் கிளையை மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜக்கிஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு குருசரண் சிங் வேதனையுடன் தெரிவித்தார்.

-இந்தப் பட்டியல் இப்படி நீள்கிறது. பட்டியலில் ஆகக் கடைசி யாக இணைந்திருப்பது கோமளாஸின் ஃபேரர் பார்க் வட்டாரக் கிளை உணவகம்.

புதிய கிளைகளைத் திறந்து வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருந்த பல உணவக உரிமையாளர்களின் கனவு ஆள் பற்றாக்குறை காரணமாக நிறைவேறாமல் நின்றுவிட்டது. மேலும், கைவசம் இருந்த கிளைகளையும் படிப்படியாக கைவிடவேண்டிய நிலையும் இவர்களுக்கு ஏற்பட்டது.

வேதனையில் முடங்கிய இந்திய உணவக உரிமையாளர் களுக்கு, அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்கள் புதிய தெம்பைக் கொடுக்கும் என்று நம்பலாம்.