2014ஆம் ஆண்டில் முதல் முறையாக மார்பகப் புற்றுநோயை முறி
யடிக்க எதிர்நீச்சல் போட்ட திருமதி சண்முகப்பிரியாவுக்கு ஒன்றரை ஆண்டு இடைவெளியில் மீண்டும் அந்நோய் ஏற்பட்டது.
"வாழ்வில் மிகச் சவாலானதொரு கிணற்றைத் தாண்டிவிட்டதாக எண்ணினேன். மீண்டும் அவர் பாதிக்கப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக இருந்தாலும், அவருக்குப் பக்கபலமாக இருக்கஎன்னைத் திடப்படுத்திக்கொண்டேன்," என்று நெகிழ்ந்தார் அவரது கணவரான கா. ரமேஷ் பாபு, 46.
21 நாள்களுக்கு ஒரு முறை சிகிச்சை எடுத்து வரும் திருமதி சண்முகப்பிரியாவுக்கு மனதளவிலும் வீட்டு வேலையிலும் துணைநின்றார் திரு ரமேஷ். வாழ்க்கை தொடரும் என்ற நம்பிக்கையை உணர்ந்தார் திருமதி சண்முகப்
பிரியா.
"இந்த நோயே எங்களது 18 ஆண்டுகால மணவாழ்க்கையில் நாங்கள் எதிர்நோக்கிய பெரிய சவால். அது எங்களைப் பிரிப்பதற்குப் பதில் அதிக அளவு பிணைத்துள்ளது என்பதே உண்மை," என்றார் திருமதி கு. சண்முகப்பிரியா, 41. மருத்துவச் செலவுகள், உடல் பலவீனத்துக்கு மத்தியிலும் இரு பிள்ளைகளின் பள்ளிப் படிப்பு தடையின்றி தொடர இருவரும் ஆதரவு அளித்தனர். திருமதி சண்முகப்
பிரியா தீவிர புற்றுநோய் சிகிச்சையில் இருந்தபோதும், மகனின் கூடைப்பந்தாட்டங்களில் கணவருடன் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும் மறக்கமுடியாத நன்னாளாக இருக்கும் வண்ணம் வாழ்க்கையை நடத்திச்செல்வதாகக் கூறி புன்னகைக்கின்றனர் இந்தத் தம்பதியினர். (படம் இடம்பெற வேண்டாம் என்பது இவர்களது விருப்பம்)

