சிங்கப்பூரில் செழிக்கும் தமிழர் பண்பாடு

ஆ. விஷ்ணு வர்தினி

மாதங்கி இளங்கோவன்

திரைகடலோடி திரவியம் தேட சிங்கப்பூருக்கு வந்த நம்மோடு நமது பண்பாடும் சேர்ந்தே வந்தது. அதுவே, அன்றாட வாழ்க்கையில் நம் கையைப் பிடித்தும் அரவணைத்தும் நம்மை வழிநடத்திச் செல்கிறது. தமிழராக நம் அடையாளத்தின் ஆணிவேராகத் திகழும் நமது வரலாற்றை, பாரம்பரியத்தை, அரும்பெரும் மரபைக் கண்டறிய உள்நோக்கித் தேடியவர்களையும் வெளியுலகில் பயணம் செய்தோரையும் கண்டு வந்தது தமிழ் முரசு.

அந்தாதி - ஆதியும் அந்தமும் இல்லா வரலாறு

சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­றை­யாக தெற்காசிய வர­லாற்று ஆய்வு, அரும்­பொ­ரு­ள­கம் குறித்த ஆலோ­ச­னை­க­ளை­யும் வழி­காட்­ட­லை­யும் வழங்­கும் சேவை­யைத் தொடங்கி­யுள்­ளார் அத்­து­றை­யில் கல்­வி அறி­வும் 18 ஆண்­டு­கள் அனு­ப­வ­மும் பெற்­றுள்ள குமாரி நளினா கோபால் (படம்).

'அந்­தாதி' எனும் வர­லாற்று ஆய்வு, அரும்­பொ­ரு­ளக ஆலோ­சனை நிறு­வ­னம் தெற்­கா­சி­யா­வின் புலம்­பெ­யர்ந்­தோர் வர­லாறு குறித்து ஆலோ­சனை வழங்­கு­கிறது.

சர் ஸ்டாம்­ஃபர்ட் ராஃபிள்­சு­டன் சிங்கப்­பூ­ரில் காலடி வைத்த நாரா­யண பிள்ளை பற்றி எல்­லா­ருக்­கும் தெரி­யும். ஆனால், எப்­படி இருப்­பார் என்று தெரி­யாது. கற்­பனை கலந்த சிற்­பங்­க­ளால் மட்­டுமே அவ­ரைக் கண்­ட­றி­கி­றோம். இத்­த­கைய முக்­கிய மனி­தர்­க­ளின் விவ­ரங்­கள் கிடைக்­கா­மல்­போ­னது எத­னால், தங்­களது வர­லாற்றை அவர்­கள் எவ்­வாறு எழு­தி­ இ­ருப்­பார்­கள் எனப் பல கேள்­வி­கள் குமாரி நளி­னா­வி­டத்­தில் உள்­ளன. அவை, இவ­ரது வர­லாற்று ஆய்­வுப் பய­ணத்­திற்கு உர­ம­ளித்து வரு­கின்­றன.

"வர­லாற்­றில் ஆதி­யும் இல்லை, அந்­த­மும் இல்லை. 'அந்­தாதி' என்ற கவிதை வடி­வத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய காரைக்­கால் அம்­மை­யா­ரும் தெற்காசிய வர­லாற்­றில் முக்­கிய இடம்­பெ­று­கி­றார். என்­றும் நின்­று­வி­டாத வர­லாற்­றுப் பய­ணத்­தின் இயல்பு கருதி, 'அந்­தாதி' எனப் பெயர் சூட்டி, வர­லாறு குறித்த ஆலோ­சனை நிறு­வ­னத்­தைத் தொடங்கியுள்­ளேன்," என்­றார் தன்­னார்வ ஆய்­வா­ள­ரான 38 வயது குமாரி நளினா.

வர­லாற்­றுப் பாடத்­தில் இளங்­க­லைப் பட்­ட­மும் அனைத்­து­ல­கக் கல்­வி­யில் முது­க­லைப் பட்­ட­மும் பெற்­றுள்ள குமாரி நளினா, இந்­தி­யா­வில் ஓர் அரும்­பொரு­ள­கத்­தில் பணி­யைத் தொடங்­கி­னார். சிங்­கப்­பூ­ருக்கு இவர் வந்­த­போது இந்­திய மர­பு­டை­மைக் கழ­கம் அமைக்­கப்­பட்டு வந்­தது. அதனை வடி­வ­மைப்­ப­தி­லும் பொருள்­கள் மற்­றும் தக­வல்­க­ளைத் தேடித் திரட்­டு­வ­தி­லும் தொடக்­க­கால ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்­றிய இவர், சிங்­கை­வாழ் தமி­ழர்­கள் வர­லாற்றை மீட்­டெ­டுப்­ப­தில் குறிப்­பி­டத்­தக்க பங்­காற்­றி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் இந்­தி­யர்­கள், தமி­ழர்­க­ளது வர­லாற்­றைப் பற்­றிய பல அரிய தக­வல்­களை இவர் கண்­ட­றிந்­துள்­ளார்.

வள­மிகு தமி­ழர் வர­லாற்றை முழு­மை­யாக ஆவ­ணப்­ப­டுத்­தத் தேவை­யான பதிவு­கள் பல அழிந்­தும் வீசி­யெ­றி­யப்­பட்டும் கைக்­கெட்­டா­மல் போய்­விட்­டது வேதனை அளிப்­ப­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார் குமாரி நளினா.

தென்­கி­ழக்­கா­சியா மற்­றும் சிங்­கப்­பூர்­வாழ் தமி­ழர்­க­ளின் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்­தும் 'ஊர் திரும்­பி­ய­வர் வேர் ஊன்­றி­ய­வர்: தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் தமி­ழர் (Sojourners to Settlers)' நூலின் இணை ஆசி­ரி­ய­ரான குமாரி நளினா, அந்­நூ­லில் 'தமி­ழர்­க­ளின் நீள்­ப­ய­ணம்: சோழ­மண்­ட­லக் கரைப் பூர்­வீக மக்­க­ளின் வர­லாற்­றுக் குறிப்­பு­கள்' என்ற கட்­டு­ரையை எழு­தி­யுள்­ளார்.

15 முதல் 19ஆம் நூற்­றாண்டு வரை­யி­லான கால­கட்­டத்­தில் 'நீரி­ணை வட்டார (Straits region)' பகுதி தமி­ழர்­க­ளின் வர­லாற்றை அறி­வ­தற்­கான ஆவ­ணங்­களைத் தேட, அடுத்த நான்கு ஆண்­டு­களை அர்ப்­ப­ணிக்­க­வுள்­ள­தாக இவர் குறிப்­பிட்­டார்.

'அந்­தாதி' பற்றி மேலும் அறிய www.specialistsatantati.com எனும் இணை­யத்­தளத்தை நாட­லாம்.

பாரம்பரிய உணவுகளை இணையம்வழி பிரபலப்படுத்த முயற்சி

திரு­வி­ழாக் காலங்­களில் முத்­தாய்ப்­பாக அமை­கின்­றது தமி­ழர் உணவு. ஒவ்­வொரு பண்­டி­கைக்­கு­மென தனிச்­சிறப்பு­மிக்க உணவு வகைகள் உண்டு. தம்­மைப் போன்ற இல்­லத்­த­ர­சி­க­ளுக்­கும் புது­ம­ணத் தம்­ப­தி­ய­ருக்­கும் இளம் வய­தி­ன­ருக்­கும் ஏற்ற வகையில், அவற்­றின் செய்­மு­றை­களை இணை­யத்­தில் அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கி­றார் திரு­மதி ராஜேஸ்­வரி விஜ­யா­னந்த், 40 (படம்).

'ராக்ஸ் கிச்­சன்' எனும் பெய­ரில் 14 ஆண்­டு­கா­ல­மாக தமிழ், ஆங்­கி­லம் என இரு மொழி­களி­லும் இணை­யத்­த­ளங்­களை இவர் நடத்தி வரு­கி­றார்.

தமிழ்ப் புத்­தாண்டு நாளன்று அறு­சுவை உணவு வகைகளை உண்டு வளர்ந்­தவர் திருமதி ராஜேஸ்­வரி. இளம் வய­தில், அந்­நன்­னா­ளில் சமைக்­கப்­படும் வேப்­பம்பூ ரச­மா­னது இவ­ருக்கு அறவே பிடிக்­காது. அண்­மைக் காலத்­தில்­தான், அது உடல்­நலத்­திற்­கும் பெரி­தும் கைகொ­டுப்­பதை உணர்ந்து, அதன் செய்­மு­றையை இணை­யத்­த­ளத்­தில் பதி­விட்­டார்.

தமி­ழர் உணவை நாளும் உண்­ணும்­போது அதன் பெரு­மை­களை மறந்தே விடு­கி­றோம் என்­கி­றார் இவர்.

மூத்த உற­வி­னர்­கள் வாயி­லா­கக் கண்­ட­றிந்து அவர் பதி­வி­டும் தமிழ்ப் புத்­தாண்டு, கார்த்­தி­கைத் திரு­நாள் முத­லிய பண்­டி­கைகளின்போது செய்­யப்­படும் உணவுவகை­க­ளின் செய்­முறை­களுக்கு அதிக வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாக இவர் கூறி­னார்.

"திரு­ம­ண­மான பிறகு என் மாமி­யா­ரி­டம் சமை­யல் கற்­றுக்­கொண்­டேன். பின்­னர், அம்மா, மூத்த உற­வி­னர்­கள் என்று பல­ரி­ட­மும் பாரம்­ப­ரிய உண­வு­வகை­க­ளின் செய்­மு­றை­க­ளைக் கற்­ற­றிந்­தேன். 'ஒரு கைப்­பிடி' என்­றெல்­லாம் அவர்­கள் சொல்­லும் அள­வு­களை நவீன அள­வு­க­ளுக்கு மாற்­றி­ய­மைக்க முயற்சி செய்­துள்­ளேன்," என்­றார் திரு­மதி ராஜேஸ்­வரி.

அள­வுக் கரண்­டி­கள், மின்­ச­மை­யற்­கலன் என மாறி­விட்ட இக்­கால சமை­யல் முறைக்­கேற்ப பாரம்­ப­ரிய உணவு செய்­மு­றை­களை மாற்­றி­ய­மைப்­ப­தில் சிக்­கல்­கள் உண்டு. பல­முறை சுய­மாக சமைத்­துப் பார்த்த பின்­னரே அச்­செய்­மு­றை­க­ளைத் தெளி­வாக எழு­திப் பார்க்­கி­றார் இவர்.

புகழ்­பெற்ற உண­வு­க­ளைச் சிறு­தானியங்­கள் கொண்டு செய்­வது எப்படி என்­றும் இவர் ஆலோ­சனை செய்து, பதி­விட்டு வரு­கி­றார்.

தமி­ழ­ரின் அடை­யா­ள­மாக விளங்­கும் பாரம்­ப­ரிய உணவு வகைகள், உணவு வலைப் பதி­வா­ள­ரா­கத் தமக்­கும் ஓர் அடை­யா­ளத்­தைக் கொடுத்­துள்­ள­தில் பெரி­தும் மகிழ்ச்சி கொள்­கி­றார் திரு­மதி ராஜேஸ்­வரி.

குறிப்­பாக, சைவ உண­வு­மு­றை­யிலும் தமி­ழர்­க­ளுக்கு பல்­வேறு தனித்­துவ உண­வு­வ­கை­கள் இருப்­ப­தைப் பிர­ப­லப்­படுத்த இவர் முயன்று வரு­கி­றார்.

கதைகள்வழி அடையாளம் தேடும் கலாசார ஆர்வலர்கள்

கதை கேட்­ப­தில் குமாரி கீர்த்­திகா ரவீந்­தி­ர­னுக்குக் கொள்ளை ஆர்­வம். அப்பா கூறிய பண்­பாட்­டுக் கதை­க­ளைக் கேட்டு பிர­மித்­துப்­போ­வார். தன்னை வளர்த்த கதை­கள் மற்­ற­வர்­க­ளுக்­கும் பய­ன­ளிக்க வேண்­டும் என்று எண்­ணிய குமாரி கீர்த்திகா, கடந்த மூன்­றாண்­டு­க­ளாக சமூக ஊட­கங்­க­ளின்­வழி தமி­ழர் பண்­பாட்­டைக் கொண்டு சேர்க்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளார்.

வலைப்­பூ­வில் தொன்­மக் கதை­கள், தமி­ழர் திரு­விழா குறித்த வர­லாற்றுக் கதை­கள் என பதி­விட்டு வரு­கி­றார். ஆங்­கி­லம், தமிழ் என இரு மொழி­க­ளி­லும் எழு­தப்­படும் பதி­வு­கள் தமி­ழர்­க­ளை­யும் மற்ற இனத்­த­வ­ரை­யும் ஈர்க்­கின்­றன.

இரு­மாத கால ஆராய்ச்­சி­யின் பய­னாக விளைந்­தது, பல­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்த குமாரி கீர்த்­தி­கா­வின் 'திரௌ­பதி­யின் தீமிதி' என்ற தொடர்.

சிங்­கப்­பூ­ரில் தீமி­தித் திரு­விழா தொடக்க காலத்­தி­லி­ருந்து நடை­பெற்று வரு­கின்­றது. அதன் வர­லாற்றை ஆவ­ணங்­கள், வாய்­வ­ழிக் கதை­கள்­மூ­லம் அவர் பதி­வு­செய்­துள்­ளார்.

"யாருக்­குத்­தான் கதை கேட்­கப் பிடிக்­காது? ஈர்ப்­புத்­தன்­மை­யு­டன் கதை­களை எழு­தும்­போது மக்­கள் ஆர்­வத்­து­டன் படிக்­கின்­ற­னர். மர­பு­டை­மை­யை மேலும் மேலும் அறிந்­து­கொள்­ளும்­போது நமது அடை­யா­ளம் குறித்த விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டு­கிறது," என்­கி­றார் இந்த 26 வயது நங்கை.

தமி­ழர் பண்­பாடு, பாரம்­ப­ரி­யம், சடங்கு­கள் குறித்த இவ­ரது பதி­வு­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் வாச­கர்­கள் உள்­ள­னர்.

பாலர் பள்ளி முதல் தொடக்­கப் பள்ளி வரை­யி­லான மாண­வர்­க­ளுக்கு தமிழ், ஆங்­கில மொழிச் செறி­வூட்­டல் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரும் குமாரி கீர்த்­திகா, சிறா­ருக்­கும் தமி­ழர் மர­பு­சார்ந்த கதை­களை எளி­மை­யா­கச் சொல்லி, வேரி­லேயே தமி­ழை­யும் பண்­பாட்­டை­யும் விதைக்க முயற்சி செய்து வரு­கி­றார்.

உல­கெங்­கும் உள்ள தமி­ழர்­க­ளுக்­குத் தமிழ்க் கலா­சா­ரத்­தை­யும் வர­லாற்­றை­யும் தொகுத்து வழங்­கும் நோக்­கத்­தில் பிறந்த முயற்சி, 'தமிழ்­டேல்ஸ்'. தமி­ழர் எனும் ஒற்றை அடை­யா­ளம் இருந்­தா­லும், ஒவ்­வொரு நாட்­டி­லும் தமி­ழர்­க­ளின் மாறு­பட்ட வாழ்க்கை அனு­ப­வங்­களை அறிய உத­வு­கி­றார் இந்த இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­திற்கு உரி­ய­வ­ரான குமாரி கபிலா தியா­க­ராஜ், 28.

சிங்­கப்­பூர், கனடா, அமெ­ரிக்கா, பிரிட்­டன், சிங்­கப்­பூர் என பல்­வேறு நாடு­களில் வாழும் தமி­ழர்­க­ளோடு உரை­யா­டும் வாய்ப்பைப் பெற்ற குமாரி கபி­லா­விற்­குத் தமிழ் பண்­பாட்­டின் அடி­யா­ழத்­தைக் கற்­றுக்­கொள்ள மிகுந்த ஆவல்.

தனிப்­பட்­ட­வர்­க­ளின் கதை­களை மட்­டும் பகிர்ந்­து­கொள்­ளா­மல் தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தின் வாயி­லாக தமிழ்ப் பண்­பாட்­டுக் கூறு­க­ளின், வெவ்­வேறு தமிழ்ச் சமூ­கங்­க­ளின் வர­லாற்­றைப் பற்றிய தக­வல்­க­ளை­யும் தேடித் தேடி எல்லா­ருக்­கும் புரி­யும் வண்­ணம் தொகுத்து வழங்கி வரு­கி­றார் இவர்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொறி­யி­யல் பட்­டம் பெற்ற குமாரி கபிலா, இப்­போது வங்­கி­யில் வர்த்­தக ஆய்­வா­ள­ராக பணி­பு­ரி­கி­றார். சிறு வய­தி­லி­ருந்தே ஆவ­ணப்­ப­டங்­களை விரும்­பிப் பார்க்­கும் இவ­ருக்கு தமிழ்ச் சமூ­கங்­க­ளின் பின்­ன­ணி­யைப் பற்றி அறிந்து­கொள்ள ஆர்­வம் ஏற்­பட்­டது. தமிழ் இலக்­கி­யங்­கள், உண­வு­வ­கை­கள், கலை­கள், விழாக்­கள் போன்­ற­வற்­றைப் பற்றி இவர் படிக்­கத் தொடங்­கி­னார்.

தமி­ழ­கத்­தில் கீழடி அக­ழாய்­வில் கண்டு­பி­டிக்­கப்­பட்ட மனி­தர்­க­ளின், விலங்கு­க­ளின் எலும்­புக்­கூ­டு­கள், சுடு­மண் குழாய்­கள், செங்­கற்­கள் போன்­றவை குறித்து தம் பக்­கத்­தில் விவ­ர­மாக பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தார் குமாரி கபிலா. இவ்­வாறு இந்­தி­யா­வின் தமி­ழ­கத்­தின், தமிழ்ச் சமூ­கத்­தின் பல்­லா­யி­ரம் ஆண்டுத் தொன்­மையை, வர­லாற்றை உல­கி­லுள்ள அனை­வ­ருக்­கும் தெரி­யப்­ப­டுத்­தும் இவ­ரது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கம், ஒரு மின்­னி­லக்க அருங்­காட்­சி­ய­கம்­போல விளங்­கு­கின்­றது.

பச்­சைக் குத்­து­த­லைப் பற்றி இவர் பதி­வேற்­றம் செய்த வர­லாற்­றுத் தக­வல்­கள் இளை­யர்­களை ஈர்த்­தன. அந்தக் ­க­லைக்­குத் தொன்­மை­யான வர­லாறு இருப்­ப­தை­ய­றிந்து அவர்­கள் வியப்­புற்­ற­னர். ஆய்வுக்­கட்­டு­ரை­க­ளை­யும் இணை­யம்­வழி கிட்­டிய சான்­று­க­ளை­யும் பயன்­படுத்தி, தமக்­குக் கிடைத்த தக­வல்­களை இவர் ஒப்­பிட்­டுப் பார்ப்­பார்.

மேலும், வாச­கர்­களை ஈர்க்க, குறிப்­பிட்ட தமிழ்ச் சொற்­க­ளைத் தேர்ந்­து எடுத்து அவற்­றின் பொரு­ளை­யும் அவை தமிழ்த் திரைப்­ப­டப் பாடல்­களில் எவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­தை­யும் இவர் விளக்­கு­கி­றார்.

ஒவ்­வொரு நாட்­டி­லும் தமி­ழர்­க­ளின் தமிழ்க் கல்­வி­முறை பற்­றி­யும் அன்­றாட வாழ்­வில் அவர்­கள் தமிழ்­மொ­ழியை எவ்­வாறு பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­ப­தை­யும் நேர்­கா­ணல்­கள்­வழி அறிந்­த­தா­கக் கூறிய திரு கபிலா, பிரான்­சில் வசிக்­கும் இளம் பெண் ஒரு­வ­ரின் கதை தம் மனத்­தைத் தொட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

"அவர் பிரெஞ்சு மொழி­யும் ஆங்­கி­ல­மும் சர­ள­மா­கப் பேசு­ப­வர். அவ­ரின் பெற்­றோர் பெரும்­பா­லும் தமி­ழி­லேயே பேசு­வார்­கள். இத­னால், பெற்­றோ­ரு­ட­னான அவ­ரது உரை­யா­டல்­கள் குறைந்­தன. புரிந்­து­ணர்­வும் அவ்­வ­ள­வாக இல்லை. குடும்­பத்­தி­ன­ரி­டையே உறவை வலுப்­படுத்த தீர்­மா­னித்த அப்­பெண், தமது தமிழ்­மொ­ழித் திறனை வளர்க்க உறு­தி­பூண்­டார். தமிழ்த் திரைப்­ப­டங்­க­ளைப் பார்த்­தார்; பாடல்­க­ளைக் கேட்­டார்; பல்­கலைக்­க­ழ­கத்­தின் இந்­தி­யத் துறை­யில் ஈடு­பட்­டார். தமிழை மெல்ல மெல்­லப் புழங்­கத் தொடங்­கிய அவர், பெற்­றோ­ர் உ­ட­னான தமது உறவை வலுப்­ப­டுத்­தி­னார். மொழி­யால் பிள்­ளைக்­கும் பெற்­றோ­ருக்­கும் இடையே இருக்­கும் உறவு வலு­வ­டை­ய­லாம் என்­பது அற்­பு­த­மான ஒன்­று­தானே!" என்று நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார் இந்­தப் பண்பாட்டு ஆர்வலர்.

தமிழ்ப் பண்­பாட்­டின் அரு­மை­யை­யும் தமிழ்­மொ­ழி­யின் தனிச்­சி­றப்­பை­யும் 'தமிழ்­டேல்ஸ்' மூலம் எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும் என்­பதே இவ­ரது பெரு­வி­ருப்­பம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!