வரும் முன் காப்போம்; முற்றிய, நெடுநாள் நோய்களைத் தவிர்ப்போம்

வரும் முன் காப்போம்; முற்றிய, நெடுநாள் நோய்களைத் தவிர்ப்போம்

4 mins read

முரசொலி

நோய்­நொடி இல்­லா வாழ்க்­கை­தான் மனநிறை­வான, முழுமையான வாழ்க்கை. நம் எல்­லா­ரின் மிகப்­பெ­ரிய சொத்­தும் அது­தான். ஆனால் பர­ப­ரப்­பான இந்­தக் காலச் சூழ­லில் பெரும்பாலான­வர்­கள் பொருள் நல­னில் காட்­டும் அள­வுக்கு உடல் நல­னில் அக்கறை­ கொள்­வது இல்லை.

நாடு முன்­னே­றிய நாடு என்­றா­லும் உண்டு மகிழ, உடுத்தி மகிழ, கண்டு மகிழ, களித்து மகிழ அனுபவித்து வாழ வசதி­ வாய்ப்­பு­கள்­ அ­தி­கம் என்றா­லும் உடல் நலன் இல்லை என்­றால், எது இருந்து என்ன பயன் என்ற ஏக்கம்தான் மிஞ்­சும்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பொறுத்­த­வரை பெரும்­பாலா­ன­வர்­கள் இதை உணர்ந்து இதற்கு ஏற்ப அன்­றாட பழக்கவழக்­கங்­களை அமைத்­துக்­கொள்­கி­றார்­கள்.

உடற்­ப­யிற்சி, மனநலன், நல்ல உணவு போன்­ற­வற்­றில் கவனம் செலுத்தி விவே­க­மாக நடந்துகொள்­கிறார்கள். இதன் கார­ண­மா­க­வும் மக்­க­ளின் உடல் நல­னுக்கு உகந்த சூழலை அர­சாங்­கம் இடை­விடாது அமைத்து தரு­வ­தன் விளை­வா­க­வும் சிங்­கப்­பூ­ரர்­களின் ஆயுள் உலகிலேயே அதி­க­மாக இருக்­கிறது.

ஆனால் நீரி­ழிவு, உயர் இரத்த அழுத்­தம், இதய நோய் போன்ற முற்­றி­விட்ட நெடு­நாள் நோய்­களைப் பார்க்கையில், தொடர்ந்து ஒரு­மித்த கவ­னம் செலுத்த வேண்டிய ஒரு நிலை இருந்துவருகிறது. சிங்­கப்­பூர் ஏற்கெனவே நீரி­ழிவு நோய்க்கு எதி­ராக பெரும் போரையே தொடங்கி இருக்­கிறது.

நீரி­ழிவு கார­ண­மாக சிறு­நீ­ர­கம் செயல் இழந்­து­வி­டும் நிலைக்கு ஆளா­கும் நோயா­ளி­கள் உலகிலேயே சிங்­கப்­பூ­ரில் அ­தி­கம் என்­பது கவ­லை தருகிறது. அன்­றா­டம் ஏறக்­கு­றைய புதி­தாக ஆறு பேர் இந்த நோய்க்கு ஆளா­கி­றார்­கள்.

இது ஒரு­பு­றம் இருக்க, உண­வில் உப்பை அதிகம் சேர்த்­துக்கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­களும் இருக்கிறார்­கள். ஒரு­வர் நாள் ஒன்­றுக்கு இவ்­வ­ளவு அளவு உப்­பை­த்தான் சாப்­பாட்­டில் சேர்த்­துக்கொள்­ள­வேண்டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் ஓர் அளவை நிர்­ண­யித்­துள்­ளது. ஆனால் அதைப் போல் கிட்டத்­தட்ட இரண்டு மடங்கு உப்பை சேர்த்­துக்­கொள்­வதால் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளா­கும் சிங்கப்பூரர்கள் அதிகமாக உள்ளனர்.

இத்­த­கைய பாதிப்பு ஏற்­பட்­ட­வர்­க­ளின் அளவு 2017ல் 24.2% ஆக இருந்­தது. அது 2019 ஜூலை முதல் 2020 மார்ச் வரை கிட்­டத்­தட்ட 35.5% ஆகக் கூடி­விட்­டது. மக்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய இப்­ப­டிப்­பட்ட முற்­றிய நோய்­க­ளைத் தவிர்­த்துக்கொள்­ள­வும் தடுத்­துக்­கொள்­ள­வும் அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் இடை­வி­டா­மல் முயற்­சி­கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. என்­றா­லும் கடந்த இரண்டு ஆண்­டு­கள் அந்த முயற்சிகளைப் பாதித்துவிட்டன.

கொரோனா கிருமிப் பர­வல் கார­ண­மாக அதிலேயே ஒருமித்த கவ­னம் செலுத்­த­வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தால் இத்­த­கைய நோயா­ளி­கள், நோய்­கள் மீது முன்பு காட்­டப்­பட்ட அதே அளவு கவனத்தை தொடர இய­லாத ஒரு சூழல் ஏற்­பட்­டது. மக்­களும் வீட்­டி­லேயே அடை­பட்டு கிடந்­த­தால் உடற்­ப­யிற்சி போன்­ற­வற்­றில் அவர்­க­ளால் அதி­கம் ஈடு­பட இய­ல­வில்லை. சாப்­பாட்டு பழக்­கமும் மாறி­விட்­டது.

இவை கார­ண­மாக பொது­மக்­க­ளின் உடல் நல­னில் வேண்­டாத விளை­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன. இப்­போது கொவிட்-19 தொற்று வீரி­யம் ஒடுங்­கி­விட்டதை அடுத்து இத்­த­கைய நெடு­நாள் நோய்­களில் மீண்டும் ஒரு­மித்த கவ­னம் முழு­மூச்­சாக இப்போது திரும்பி இருக்­கிறது.

பொது­மக்­களில் ஒவ்­வொ­ரு­வ­ரும் உடல் நலனுடன் வாழ வேண்­டும்; நோய்­களை முன்­ன­தா­கவே கண்டறிந்து அவற்றை வள­ர­வி­டா­மல் எடுத்த எடுப்­பி­லேயே தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும்; இதைச் சாதிக்க ஒன்­று­வி­டா­மல் அனைத்து முயற்சிக­ளை­யும் எடுக்க வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் 'நல­மிக்க எஸ்ஜி' என்ற இயக்­கம் இடம்­பெ­று­கிறது.

ஒவ்­வொருவரிடத்திலும் ஏதா­வது நோய் இருக்­கிறதா என்­பதை முன்­ன­தா­கவே கண்­ட­றி­ய­வேண்டும். இதில் மருத்­து­வர்­களும் சமூ­க­மும் பெரும்­ பங்­காற்ற வேண்­டும் என்­பதே நல­மிக்க எஸ்ஜி இயக்­கத்­தின் குறிக்­கோ­ளாக உள்­ளது.

அதா­வது சிகிச்­சைக்கு மருத்­து­வ­மனை என்ற அணு­கு­மு­றையை மாற்றி அதற்­குப் பதி­லாக நோயாளி­களை மைய­மா­கக் கொண்ட முன்­த­டுப்பு முன்­மாதிரி அணு­கு­மு­றை­யைக் கைக்கொள்­வது இந்த இயக்­கத்­தின் மூல நோக்­க­மா­கும்.

இதையொட்டி அடுத்த ஆண்டு நடுப்­பகு­தி­யில் 40 வய­தும் அதற்­கும் அதிக வய­துள்ள மக்­க­ளுக்குச் சுகா­தார அமைச்சு அழைப்பு விடுக்­க­வி­ருக்­கிறது.

அவர்­கள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான தனி­யார் மருத்­து­வர் ஒரு­வ­ரைப் பார்க்க உறுதி தெரி­விக்­கும் ஒரு தேசிய செயல்­திட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­லாம்.

அந்­தத் திட்­டத்­தில் கலந்­து­கொண்டு தங்­கள் உடல்­ந­ல­னில் மக்­கள் தொடர்ந்து கவ­னம் செலுத்தி வர­வேண்­டும் என்­ப­தற்­காக ஊக்­கு­விப்­பு­களும் இடம்­பெ­றும் என்பதும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

காலக்­கி­ரம முறைப்­படி மருத்­து­வ­ரைப் பார்த்து உடல்­ந­லப் பரா­ம­ரிப்பு பற்­றிய ஆலோ­ச­னை­க­ளைப் பெறு­வது ஒரு­பு­றம் இருக்க, உடல்­ந­ல­னுக்கு உகந்த மேலும் சிறந்த பழக்­க­வ­ழக்­கங்­களை, வாழ்க்கைப் பாணி­யை மக்கள் கைக்­கொள்ள ஏது­வாக சமூகத்தை யும் இந்த இயக்­கம் செம்­மை­யாக ஈடு­ப­டுத்­திக் கொள்­ளும். இந்த அணு­கு­முறை சரி­யான ஒரு நேரத்­தில் இடம்­பெ­றும் ஒன்­றாக இருக்­கிறது.

சிங்கப்பூரில் கொவிட்-19 கார­ண­மாக நீரி­ழி­வு உள்ளிட்ட முற்றிய நோய்களுக்கு எதி­ரான முயற்சி­களில் கொஞ்­சம் தேக்கம் ஏற்­பட்டு இருந்­தா­லும் நிலைமை கைந­ழுவிப் போய்­வி­ட­வில்லை.

மக்­களில் ஒவ்­வொ­ரு­வ­ரின் வாழ்க்கை முழு­வ­திலும் அவரின் உடல்­ந­ல­னில் கவ­னம் இடம்­பெ­றும் அள­விற்குப் பெரி­தும் ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு இயக்­கம் இடம்­பெ­றப்போகிறது என்­பதால் நல்ல விளை­வு­களை நாடும் சமூ­க­மும் மக்­களும் எதிர்­பார்க்­க­லாம் என்­பது திண்­ணம்.

தர­மான சுகாதாரப் பரா­ம­ரிப்பு, நல­மிக்க வாழ்க்கைப் பாணி, நல்ல பழக்­க­வ­ழக்­கங்­கள், சிகிச்­சைக்கு குறைந்த செலவு முத­லான பல­வற்­றை­யும் நல­மிக்க எஸ்ஜி இயக்­கம் சாதிக்­கும்.

அந்த இயக்­கம், நோய்­வாய்­ப்படும்போது மட்­டும் சிகிச்சை அளிப்­ப­தற்குப் பதி­லாக எப்­போ­துமே சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நலனைக் கருத்­தில்­கொண்டு உடல்­ந­ல­னோடு, மன­ந­ல­னோடு நீண்ட ஆயுளோடு அவர்­கள் வாழ தேவை­யான அனைத்து விதமான ஆதரவையும் இடை­வி­டா­மல் வழங்­கும்.

என்­றா­லும் ஒருவரின் உடல்­ந­லம் என்­பது அவரையே சார்ந்­தது. ஆகையால் மக்கள் முதலில் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். அதோடு, அரசாங்கம் நீட்டும் உதவிக்கரத்தை நன்கு பற்றிக்கொண்டு, நோய் வருமுன்பே அதைத் தவிர்த்துக்கொண்டு நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ அவர்கள் உறுதிகொள்ள வேண்டும்.