செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

பீச் ரோடு தாக்குதல்: ஆடவர்மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு

பீச் ரோட்டில் மனைவியை வெட்டுக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர்மீது நேற்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சென்ற வியாழக்கிழமை 41 வயது திருவாட்டி ஹான் ஹோங் லியை சீன நாட்டவரான அவரது 46 வயதுக் கணவர் செங் குவோயுவான் வெட்டுக்கத்தியால் தாக்கியதாகவும் சம்பவத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செங் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு மனநல மதிப்பீட்டிற்காக அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பார். விசாரணை மே 6ஆம் தேதி தொடரும்.

ஜோகூர் பாருவில் சூடுபிடிக்கும் மின்-சிகரெட் வர்த்தகம்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் 'வேப்' என்றழைக்கப்படும் மின்-சிகரெட்டுகளின் வர்த்தகம் ஜோகூர் பாருவில் சூடுபிடித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் பாரு செல்லும் பல சிங்கப்பூரர்கள் முதலில் பெட்ரோல் நிலையத்துக்கும் அதையடுத்து மின்-சிகரெட் விற்கப்படும் கடைகளுக்கும் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் சிங்கப்பூரர்கள் சிலர் இவ்வாறு மின்-சிகரெட் வாங்குவதைக் காணமுடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.