சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு. எனவே பொதுமக்கள் டெங்கியைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மார்ச் மாதம் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் 2,400 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகியிருப்பதை அமைப்பு சுட்டியது.
சிங்கப்பூரில் வழக்கமாக ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில்தான் டெங்கிப் பரவல் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது ஆண்டின் முதல் நான்கு மாதங்கள்கூட முழுமை அடையாத நிலையில் 4,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக அமைப்பு தெரிவித்தது.
சென்ற ஆண்டு முழுவதும் பதிவான மொத்த டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 5,258 என்பதை அமைப்பு சுட்டியது.
இம்மாதம் 9ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 643 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்தைய வாரத்தைவிட இந்த எண்ணிக்கை 134 அதிகம்.
சென்ற வியாழக்கிழமை நிலவரப்படி, 164 இடங்கள் டெங்கி பரவும் அபாயமிக்கவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஆகப் பெரியவை ஹாலந்து, புக்கிட் தீமா, புக்கிட் பாத்தோக், உட்லண்ட்ஸ் அவென்யூ 1, உட்லண்ட்ஸ் டிரைவ் ஆகிய பகுதிகளில் உள்ளன.
தேசிய சுற்றுப்புற அமைப்பு, மார்ச் 30ஆம் தேதி டெங்கித் தடுப்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கியது. தற்போதைய சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணப் பதாகைகளுடன் ஏடிஸ் கொசுக்கள் மிக அதிகமாகக் காணப்படும் பகுதிகள் என்று உணர்த்துவதற்காக ஊதா வண்ணப் பதாகையை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

