முத்தமிழில் எளிதில் எல்லாரையும் ஈர்ப்பது இசைத் தமிழ். இறைவனையும் மயக்கும் இசைத் தமிழ் வழியாக தமிழ் மொழியின் வளத்தைப் பெருக்குவதிலும் ஆர்வத்தையும் அடையாளத்தைப் பேணுவதிலும் முனைந்துள்ளனர் இவர்கள் உள்ளிட்ட சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் பலர்.
கி.ஜனார்த்தனன்
தமிழிசை தொகுப்பும்
கச்சேரிகளும்
பல்வேறு இந்திய மொழிகளில் கர்நாடக சங்கீதப் பாடல்களை புதிய பாணிகளில் பாடும் உள்ளூர் கலைஞரான சுஷ்மா சோமசேகர், மனதிற்கு நெருக்கமான உணர்வுகளைப் பாடுவது தமிழில்தான்.
சிங்கப்பூர் இசையில் தமிழ் இசை முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறும் சுஷ்மா, பிற இனத்தவரும் தமிழைப் பயன்படுத்துவதைச் சுட்டினார். உலக நடப்புகள் சார்ந்த கருத்துகளையும் உணர்வுகளையும் தமிழ் இசை வழியாக வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
'ஹோம்' எனும் சுஷ்மாவின் இசைத்தொகுப்பு சுற்றுச்சூழலுடனான அவரது உறவை விளக்கு கிறது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மேதை நீலகண்ட சிவனின் பாடல் ஒன்றில் இடம்பெறும் "கன்றின் குரல் கேட்டு கனிந்து வரும் பசுபோல், ஒன்றுக்கும் அஞ்சாத உள்ளத் துயரம் தீர" என்ற வரிகளைத் தமது கற்பனை நயத்தால் இயற்கை தொடர்பான பிரச்சினைகளுடன் இணைத்திருக்கிறார் சுஷ்மா.
ஈராண்டுகளுக்கு முன்னர் கேளராவில் கருவுற்ற யானை ஒன்றுக்கு பட்டாசுகள் திணிக்கப்பட்ட அண்ணாசிப் பழம் கொடுக்கப்பட்டு, அது கொடூரமாக உயிரிழந்த சம்பவத்தால் மனதில் ஏற்பட்ட வடு, இந்தத் தொகுப்பின் 'எலிபண்ட்ஸ் ஃபியூனரல்' பாடலாக வெளிப் பட்டதை அவர் குறிப்பிட்டார்.
தமிழின் தொன்மைச் சிறப்புகளைக் கற்பனைத்திறனால் புதிய இசைப்படைப்புகளுடன் இணைத்து வருகிறார் சுஷ்மா. ஆன்மிகம் முதல் சமூகம்வரை, சுஷ்மாவின் இசைப்படைப்புகளுடன் தமிழ்மொழி கைகோத்து வருகிறது.
"கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியிட்ட தாயுமானவர் பாடல் தொகுப்பு, கடந்தாண்டு வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' ஆகியவை என் மனதிற்கு நெருக்கமான படைப்புகள்," என்றார் அவர்.
டாக்டர் பாக்யா மூர்த்தியிடம் நான்கு வயதில் இசைப் பயணத்தைத் தொடங்கிய சுஷ்மா, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் 2004ஆம் ஆண்டுவரை பயின்று இசைத் துறையில் பட்டயம் பெற்றார். பின்னர், பொதுக்கல்விச் சான்றிதழ் மேல் நிலைத் தேர்வை முடித்ததும், சென்னையில் இசைத் துறையில் மேற்படிப்பை மேற்கொண்டார். அங்கு பிரபல பாடகி நித்யஸ்ரீயின் தாயார் லலிதா சிவகுமார், ஆர் கே ஸ்ரீராம் குமார் ஆகியோரிடம் இசை பயின்றார்.
உலகின் பல்வேறு மாற்றங் களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் இசை தொடர்ந்து முன்னேறும் என நம்புகிறார் சிங்கப்பூர் இளங்கலைஞர் விருதை 2020ல் வென்ற இக்கலைஞர்.
இசையால் கதை சொல்பவர்
கர்நாடக இசை முதல் 'ப்ளூஸ்' இசை வரையில் பல்வேறு இசைகளில் திறன் பெற்ற நிரஞ்சன், இசையாகக் கதைகள் சொல்கிறார்.
"இசைக்கும் கதைக்கும் உள்ள நுட்பமான தொடர்பை வெளிப்படுத்த மொழி பாலமாகத் திகழ்கிறது. இசையின் ஓசை அதிர்வுகளுடனான கவிதையின் தனித்துவமான உறவு பல இசைகளுக்கான அடித்தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது," என்றார் திரு நிரஞ்சன்.
நிரஞ்சன் கடந்த மூன்று ஆண்டுகளில் 17 இசைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவற்றில் 15 படைப்புகளை திரைப்படங்கள், நடன, நாடகத் தயாரிப்புகள், தனிப்பாடல்கள், இசைத்தொகுப்புகள் போன்றவற்றில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்மொழி மூலம் தன் அடையாளத்தைத் தேட முடிவதாகக் கூறிய நிரஞ்சன், இசையமைப்பதன் வழி, தமிழ் மொழிக்கூறுகளை மேலும் ரசிக்க முடிகிறது என்றார்.
காஞ்சென்ற கவிஞர் பிறைசூடனுடன் 'ஒளி ஒருவன்' என்ற பாடலுக்காக இணைந்து பணியாற்றியதை மறக்க முடியாத அனுபவமாக நினைவுகூர்ந்தார்.
தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்த பாரதியார் நூற்றாண்டு நினைவு விழாவுக்கென 'சுட்டும் விழி' பாடலுக்குப் பணியாற்றியதன் மூலம் தமிழின் அழகை நுட்பமாக ரசிக்க முடிந்தது என்றார் திரு நிரஞ்சன்.
தமிழ் இசையை தொடர்ந்து விரிவுபடுத்த சுயமான படைப்புகளின் உருவாக்கம் முக்கியம் எனக் கருதும் நிரஞ்சன், தமிழ் இசைத்துறை, பிற இனக்கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.
"இது ஒரு நீண்டகால இயக்கம். தமிழ் இசையின் செயல் பரப்பு விரிவடைய, நிகழ்ச்சிகளிலும் ஊடகத் தயாரிப்புகளிலும் இசைக்கான தேவையும் அதிகரிக்கும்," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் பல கலாசார சூழல் இங்குள்ள அனைத்து கலைஞர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார் நிரஞ்சன்.
"தமிழ்ச் சொற்களின் ஓசை நயத்துடன் இசை இரண்டறக் கலப்பதை பல்வேறு பாரதியார் பாடல்களில் காணலாம். பாடல் எழுவதற்கும் இசை அமைப்பதற்கும் உள்ள பிணைப்பு முக்கியம். ஒன்று சரியாக அமைக்கப்படாவிட்டால் மற்றொன்று பாதிப்படையும் என்றார் திரு நிரஞ்ஜன். பாடல் என்பது கதை சொல்லும் ஒரு வழிமுறை," என்றார் நிரஞ்சன்.
பறையிசையின்
பெருமையும் பண்பாடும்
அடுக்குமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பறையை 17 வயதில் வேடிக்கையாக அடித்து மகிழ்ந்த அக்ஷரா திரு இன்று பறை இசை பயிற்றுவிப்பாளராக உள்ளார். இவரது பறை இசைப்பள்ளியில் வரும் ஜூன் மாதம் மாணவர்கள் அரங்கேற்றம் செய்கின்றனர்.
தமிழ்ப் பண்பாடு என்பது காலங்காலமாக ஒரே மாதிரி இருப்பதாக எண்ணுவது தவறு என்றார் பறை இசைக் கலைஞரும் ஆசிரியருமான அக்ஷரா திரு, 34.
இந்திய சமூகத்தின், ஏற்ற தாழ்வுகள் இசைக்கருவிகளுடன் பிணைந்து இருப்பதாகக் கூறிய அவர், தமிழர் பண்பாட்டில் ஆதியில் இருந்த இசைக்கூறுகள் பறை இசையில் இன்றும் காணப்படு வதாகக் கூறினார்.
கர்நாடாக இசையை புதிய கலை வடிவங்களுடன் இணைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதுபோல பறை இசையிலும் அத்தகைய பரிணாமத்தை மேற்கொள்ள முடியும் எனக் கூறினார்.
"தற்போது வழக்கத்தில் இருக்கும் மிருதங்கம் தமிழர்களின் வாத்தியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது மகாராஷ்டிர தாள வாத்தியம் ஒன்றிலிருந்து மருவியது. எனவே அந்தக் காலத்திலும் பண்பாடு மாறிக்கொண்டுதான் வந்தது," என்று அவர் கூறினார்.
மறைந்த ஆனந்தக்கண்ணனின் ஏகேடி கலை நிறுவனத்தினருடன் 2017ஆம் ஆண்டு இந்தியா சென்றிருந்த அக்ஷரா, திண்டுக்கல் கலைஞர் ராஜ்குமாரிடமும் ராஜேந்திரனிடமும் பறை இசைக்கருவியையும் வேறு பல கிராமிய இசைக்கருவிகளையும் பழகினார். பின்னர் 2020ல் சென்னையில் புத்தர் கலைக்குழுவினரிடமும் பயிற்சி பெற்றார்.
அமெரிக்க ஆய்வாளர் ஸோயி ஷெரினியனிடம் பறை இசையைப் பற்றிய சமூகவியலைப் பற்றியும் கற்றுக்கொண்டார். தொடர்ந்து, தேசியக் கல்விக் கழகத்தில் பறை இசையை ஆய்வுத் தலைப்பாக எடுத்துக்கொண்டார்.
உள்ளெழுந்து வரும் உணர்வுகளைத் தமிழில்தான் சொல்ல முடிகிறது என்றும் ஆங்கிலத்தில் அதுபோல வருவதில்லை என்றும் தமது இசைக்கு பாடல்களையும் எழுதும் அக்ஷரா கூறினார்.
"தமிழில் எழுதும்போது வரிகள் இயல்பாக வருகின்றன. என்னை வருத்திக்கொண்டு எழுதவேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை," என்றார்.
"தமிழ்ச் சமூகத்தில் முன்பு இருந்த ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யப்படும் முறையில் பறை இசையின் ஏற்றம் உள்ளது," என்றார் அக்ஷரா திரு.
ராப் இசையில் தமிழ்
ஆங்கிலத்திலும் தமிழிலும் ராப் செய்யும் உள்ளூர் இசைக்கலைஞர் பிரசாத் வரதராஜன், 33, தொடக்கத்தில் தமிழ் முரசின் மாணவர் மணிமன்ற மலரில் கவிதைகளை எழுதியவர். அப்போது மனதில் விதைக்கப்பட்ட தமிழ் ஆர்வம், இப்போது நவீன இசைக்கலை விருட்சமாக வளர்ந்துள்ளது.
பிரபலம் பெறும் அளவுக்கு நம் படைப்பு தரமாக உள்ளதா என்பதை பாடல்களை உருவாக்கும் கலைஞர்கள் தன்னைத்தானே தொடர்ந்து கேட்கவேண்டும் என்று அவர் கூறினார்.
நவீன இசையில் தமிழ் எளிமையாக இருந்தாலும் பாடல் வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும். அதிலும் ராப் இசைக்காக எழுதும்போது அந்தத் தாக்கம் வார்த்தைகளில் மட்டுமின்றி ஓசையிலும் இருக்கவேண்டும் என்று இதுவரை கிட்டத்தட்ட 60 பாடல்களைத் தயாரித்துள்ள பிரசாத் கூறினார்.
எட்டு வயது முதல் நடனக் கலைஞர் அரவிந்த நாயுடுவின் வழிகாட்டுதலில் நவீன நடனம் ஆடத் தொடங்கிய திரு பிரசாத், 17 ஆம் வயதில் ராப் இசையில் ஈடுபடத் தொடங்கினார்.
தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட பிரசாத், சிங்கப்பூரில் தமிழ் பாடல்களை உருவாக்க விரும்பும் வளரும் கலைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டிகள் தேவைப்படுவதாகக் கூறினார்.
"வளரும் கலைஞர்கள் குறைகூறல்களைக் காதில் வாங்கிக் கொள்ள வேண்டி உள்ளது. குறைகூறல்கள் யாரிடம் இருந்து வருகின்றன என்பதை உற்றுக் கவனிக்கவேண்டும். தரமானவர்களைத் தங்களது வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்து அவர்கள் கூறுவதைக் கருத்தில் கொள்ளவேண்டும்," என்று அவர் கூறினார்.
சேலையும் பாடலும்
இசையையும் தமிழையும் தமது ஆடை வர்த்தகத்தின் முகமாகப் பயன்படுத்துகிறார் தமிழ் ஆர்வலரும் பட்டிமன்றப் பேச்சாளருமான அகிலா ராமு, 40.
தமது இணைய ஆடை வர்த்தகத்திற்காக, தமிழ் எழுத்துகளைக் கொண்ட சேலையைக் காண்பிக்கும் 'அகமே புறமே' என்ற பாடல் காணொளியை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டுள்ளார் திருமதி அகிலா.
பாடல் காணொளியில் இடம்பெறும் ஆரஞ்சு, பச்சை நிறமான கைத்தரி பட்டுப் புடவையில் கையால் தமிழ் எழுத்துகள் சாயத்தால் வரையப்பட்டுள்ளன.
திருமதி அகிலா இந்தச் சேலையை இரண்டு வாரங்களில் தயாரித்தார். 'லக்ஷனா ஸ்டூடியோஸ்' என்ற அவரது இணைய ஆடை வர்த்தகத்தில் இச்சேலை 90 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.
இச்சேலையைப் பிரபலப்படுத்தும் காணொளியை நல்ல, பழந்தமிழ் சொற்களைக் கொண்ட பாடலுடன் வெளியிடவேண்டும் என நினைத்து செயல்பட்டார்.
நற்றிணை, கலித்தொகை, சொற்சுணை போன்ற பழஞ்சொற்களை இளையர்களுக்கும் அறிமுகம் செய்யவேண்டும் என்பது இவரின் அவா.
இத்தகைய பொருள்பொதிந்த அழகு தமிழ் வார்த்தைகள் பாடலில் வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தமது நண்பரும் பட்டிமன்றப் பேச்சாளருமான பானு சுரேஷை திருமதி அகிலா அணுகினார்.
பாடல் காணொளிகளுக்கான பணிகள் ஏப்ரல் 2ஆம் தேதியன்று தொடங்கியது. பின்னர் அந்தக் காணொளி இரண்டு வாரங்களில் வெளியீடு கண்டது.
"கர்நாடக இசையையோ மேற்கத்திய பாணியையோ அதிகம் பின்பற்றாமல் மக்களுக்கு எளிதில் சேரக்கூடிய, எளிதில் பாடக்கூடிய விதத்தில் பாடல் இருக்கவேண்டும் என விரும்பினேன். இசைக்கலைஞர் பரசு கல்யாண் இப்பாடலுக்கு இசையமைத்து அவரே பாடியுள்ளார்," என்றார் திருமதி அகிலா.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இசையும் தமிழும் கலந்த புத்தாக்கங்களைச் செய்ய விருப்பம் கொண்டுள்ளார் திருமதி அகிலா.

