1984 பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 64.8 விழுக்காட்டு வாக்குகளுடன் 79 இடங்களில் 77ஐ பிடித்தது. புதுமுகமாக திரு லீ சியன் லூங் களம் கண்டார்.
அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி டாக்டர் டோனி டானின் வீட்டில் கூடிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 12 பேர், திரு கோ சோக் டோங் அடுத்த துணைப் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். திரு கோ அடுத்த பிரதமர் என்பது அவர்களுக்குத் தெரியும்.
புதிய அமைச்சரவையில் முதல் துணைப் பிரதமராக 1985 ஜனவரி 2ஆம் தேதி திரு கோ நியமிக்கப்பட்டார். 1988 செப்டம்பர் 3ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் மசெக 63.2% வாக்குகளுடன் 81 இடங்களில் 80 இடங்களைக் கைப்பற்றியது. அதுவே திரு லீ குவான் இயூ தலைமையிலான கடைசித் தேர்தலாக இருந்தது.
பிறகு 1990 நவம்பர் 28ல் திரு கோ, 49, பிரதமர் பொறுப்பை ஏற்றார். அப்போது வர்த்தக, தொழில் அமைச்சராக இருந்த லீ சியன் லூங், 38, துணைப் பிரதமரானார்.
1991 ஆகஸ்ட் 31ல் திரு கோ திடீர்த் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மசெக அதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக 61% வாக்குகளுடன் வென்றது. நான்கு இடங்களை எதிர்த்தரப்பிடம் பறிகொடுத்தது. பிறகு 1997 ஜனவரி 2ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் 65% வாக்குகளுடன் திரு கோ தலைமையிலான மசெக வெற்றி பெற்றது.
பிறகு, மசெக, 1980 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதுவரை இல்லாத அளவுக்கு 2001 நவம்பர் 3ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், 75.3% வாக்குகளுடன் வெற்றி பெற்றது. அதுவே திரு கோ தலைமையிலான கடைசி தேர்தலாக இருந்தது.

