வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுக்களில் சிங்கப்பூர் தொடர்ந்து தடம்பதித்து வருகிறது. பல பதக்கங்களை நம் விளையாட்டாளர்கள் வென்று வரும் நிலையில், மேலும் சாதனைகளைப் படைக்க தயாராகியுள்ளனர் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள். தேசத்தைப் பிரதிநிதித்து விளையாடும் நால்வர், இதுவரை பெற்ற வெற்றிகளையும் அவர்கள் தொட நினைக்கும் உச்சங்களையும் கேட்டறிந்தது தமிழ் முரசு.
தேசிய அளவில் சாதனை புரிந்து வரும் ஓட்டப்பந்தய வீரர் திரூபன் தனராஜன் தென்கிழக்காசிய விளையாட்டுக்களில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் இன்று சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவிருக்கிறார். தனது சொந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே இரண்டாம் முறையாக தென்கிழக்கா சிய விளையாட்டுக்களில் கலந்து கொள்ளும் திரூபனின் இலக்கு.
இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளை ஆவலுடன் எதிர்நோக்கி கடுமையாக பயிற்சி செய்து கொண்டிருந்த திரூபனுக்கு, பிப்ரவரியில் கால்விரலில் ஏற்பட்ட காயமும் கொவிட்-19 நோய்த்தொற்றும் தடைகளாய் விளங்கின. பல பயிற்சிகளில் கலந்துகொள்ள முடியாத போதிலும், திரூபன் மனந்தளரவில்லை.
"என் குறிக்கோள்களை மாற்றி அமைக்க வேண்டியநிலை இருந்தாலும், நான் அதிகபட்ச அளவில் உழைத்துள்ளேன். நாட்டைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. பெருமளவு நன்றிக் கடன்பட்டுள்ளேன்," என்றார் டீக்கின் பல்கலைக்கழகத்தில் வணிகம் (விளையாட்டு நிர்வாகம்) பயிலும் 22 வயது திரூபன்.
வரும் புதன்கிழமையன்று நடைபெறவிருக்கும் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்திலும் பங்குபெறுவார் திரூபன். அவரும், அவரது மூன்று சக தேசிய ஓட்டப்பந்தய வீரர்களும், 48 ஆண்டு களாக இன்னும் முறியடிக்கப்படாத தேசிய சாதனையை முறியடிக்க குறிக்கோள் கொண்டுள்ளனர்.
ஏறக்குறைய ஒன்பதாண்டு காலமாக ஓட்டப் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் திரூபன், பள்ளிக்காலத்திலிருந்தே ஓட்டத்தில் பெயர் பதித்து வருபவர்.
2017ஆம் ஆண்டில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளோருக்கான ஆண்களுக்கான உலகப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 47.91 வினாடிகளில் ஓடி முடித்து தேசிய சாதனையை முறியடித்த திரூபன், சிங்கப்பூர் வரலாற்றில் இடம்பிடித்தார். திட்ட மிடாமல் திடல்தட விளையாட்டுகளில் ஈடுபட நேர்ந்த அவர், தனது பயணம் தன்னை இத்தனை தூரம் உந்தும் என்று எதிர்பார்க்கவில்லை
"என்னை மேம்படுத்திக்கொள்வதற்கு தடகளம் பெரிதும் உதவியுள்ளது. எனது வளர்ச்சியில் மேலும் கவனம் செலுத்த அண்மைய காலத்தில் முற்பட்டுள்ளேன்," என்றார் திரூபன்.
இச்சாதனைகளின் பின்னணி யில் திரூபனின் பல தியாகங்கள் உள்ளன. தொடக்கக்கல்லூரி முதல் ஆண்டில் திடல்தடப் போட்டிகளில் அதிகம் ஈடுபட்டிருந்ததால் 'ஏ' நிலை தேர்வுகளில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், தேசிய சேவையின்போது மீண்டும் 'ஏ' நிலைத் தேர்வை எழுதினார்.
"ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரை பிரதிநிதித்து ஓட வேண் டும் என்பதே எனது இலட்சியம். அது நிறைவேறும் வரை நான் ஓயமாட்டேன்," என்றார் திரூபன்.