சிங்கப்பூரை இரண்டாம் முறையாக தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பிரதிநிதித்த ஜீவனீஷ் சௌந்தரராஜா வியட்னாமின் ஹனோய் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 5,000 மீட்டர் நெட்டோட பந்தயத்தில் பங்குபெற்றிருந்த ஜீவனீஷ், எட்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
சோலார்ஜி நிறுவனத்தில் சூரிய ஆற்றல் பொறியியலாளராகப் பணிபுரியும் ஜீவனீஷை பொதுமக்களிடத்தில் பிரபலப்படுத்தியது, ஜனவரியில் நடைபெற்ற போக்காரி சுவெட் பந்தயம். முன்னர் இருந்த சாதனைகளை முறியடிக்கும் வண்ணம், 2,400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 6 நிமிடம் 52.97 விநாடிகளில் ஓடி வெற்றிகண்டார் அவர்.
வாரத்துக்குக் குறைந்தபட்சம் நான்கு முறை பயிற்சி மேற்கொள்ளும் ஜீவனீஷ், 2019ஆம் ஆண்டிலிருந்து தனது முழுநேரப் பணியையும் சமாளித்து வருகின்றார்.
முக்கியமாக, 1,500 மீட்டர் பந்தயத்துக்கான பயிற்சியையும் கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றார்.
இடையில் பணி குறுக்கீடுகளினால் பல மாதங்களுக்குப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், முழு உழைப்பினை முதலீடு செய்திருப்பதில் நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
"நாட்டைப் பிரதிநிதிப்பதில் நானும் என் குடும்பத்தாரும் அலாதி மகிழ்ச்சி அடைந்தோம். சிங்கப்பூர் தடகள வரலாற்றில் இடம் பிடிப்பதும், நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதும் எனது நீண்டநாள் கனவுகள்," என்றார் 28 வயது ஜீவனீஷ்.
சிறு வயதில், நண்பர்கள் கணினி விளையாட்டுகளில் மூழ்கியிருந்த வேளையில் ஜீவனீஷ் வெளிப்புறத்தில் இயற்கையில் விளையாடுவதையே விரும்பினார்.
காலப்போக்கில், ஓடுவது தனது திறன் என உணர்ந்த அவர், பள்ளி வாழ்க்கை முழுவதிலும் தொடர்ந்து திடல்தடப் போட்டிகளில் ஈடுபட்டார்.
"விளையாட்டுப் பயணத்தை மேற்கொள்ள ஆசைப்பட்டபோது எனது குடும்பத்தினர் அதற்கான சுதந்திரத்தை அளித்தனர்.
இதனால், எனது கனவுகளை நனவாக்கக்கூடிய வாய்ப்புகளை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது," என்றார் ஜீவனீஷ்.
பொறியியலாளராக தான் சந்தித்த சிக்கல்களின்மூலம், அவற்றை நேருக்கு நேர் சமாளிக்கும் மன உறுதியைப் பெற்ற ஜீவனீஷ் அந்த மனப்பான்மையைத் தனது திடல்தடப் பயணத்தில் காட்டுகிறார்.
அதேபோல, ஓட்டப் பந்தய வீரராக தான் வளர்த்துக்கொண்ட ஒழுக்கநெறியைத் தனது பணியிடத் தில் கடைப்பிடித்து வருகின்றார்.

