முதன்முறையாக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 2019ஆம் ஆண்டு பிலிப்பீன்சில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் விளையாடிய மௌநிஷாவுக்கு அங்கே தாய்நாட்டின் தேசிய கீதத்தைக் கேட்ட சமயத்தில் புல்லரித்துப் போனது.
தனது அணியுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார், சிங்கப்பூரின் தேசிய நீர் விளையாட்டுக் குழுவில் இடம்பெற்ற ஒரே தமிழரான மௌநிஷா தேவி மணிவண்ணன்.
இளமையிலிருந்தே கூடைப்பந்தாட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மௌநிஷாவுக்கு, தொடக்கக் கல்லூரியில் அதனை தொடர இயலாமல் போனது. நீர்ப்பந்தாட்டம், ஸ்குவாஷ் ஆகிய இரண்டு விளையாட்டுத் தெரிவுகளில், நீர்ப் பந்தாட்டம் அதிகம் ஈர்த்திருந்தது. இணைப்பாட நடவடிக்கையாக இருந்த நீர்ப்பந்தாட்டம் விரைவில் முழுநேர ஈடுபாடாகியது.
நீர்ப்பந்தாட்டப் பயிற்சி மேற்கொண்ட ஓர் ஆண்டுக் காலத்தில், அவருக்கு இளைய தேசிய நீர்ப்பந்தாட்ட அணியில் இணையும் வாய்ப்புக் கிட்டியது.
"எண்ணிலடங்கா தியாகங்களால் இன்றும் எனது நீர்ப்பந்தாட்டப் பயணத்தைத் தொடரமுடிகிறது. நீர்ப்பந்தாட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிட நான் ஒருபோதும் எண்ணியதில்லை. எனது பங்களிப்புகளில் மனநிறைவு அடையும்வரை நான் தொடர்ந்து விளையாடுவேன்," என்றார் 22 வயது மௌநிஷா.
அதேநேரத்தில் பலகாலமாய் மருத்துவத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த மௌநிஷா தனது கல்விக் கனவைத் துரத்துவதைக் கைவிட்டுவிடவில்லை. தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் மௌநிஷா, பிறர் நலம் பேணுவதை முக்கியமாகக் கருது கிறார்.
நீர்ப்பந்தாட்டத்தைக் கைவிடச்சொல்லி சிலர் அவரிடம் கூறியிருந்தாலும், மருத்துவப் படிப்புக்கு இடையே குடும்பத்தாரைப் பார்ப்பதே சிரமமாக இருந்தபோதி லும், நீர்ப்பந்தாட்டத்தில் சாதிக்கவேண்டும் என்ற மௌநிஷாவின் கனவு கலையவில்லை.
இந்த ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் நீர்ப்பந்தாட்டப் போட்டி இடம்பெறவில்லை. எனவே ஹனோய் செல்லாத மௌநிஷா, இவ்வாண்டு நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுகளுக்காகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் மௌநிஷா.

