மலேசியாவின் கோழி ஏற்றுமதித் தடைக்கு முன்னர், விலைவாசி கருதி இவ்வாண்டு கோழி விலையை ஐம்பது காசு உயர்த்திய 64 வயது திருவாட்டி ஜமீலா நைனா முகம்மது, இனி மேலும் கோழி விலையை உயர்த்தினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார். ஆனால், இது புதியதல்ல, முன்னரும் இது போன்ற நிலைமைகளைச் சமாளித்துள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.
"முன்னர் பறவைக் காய்ச்சலால் சில நாடுகளிலிருந்து புதிய கோழி வருவது குறைந்தது. அப்போது, உறைந்த கோழி இறைச்சியை விற்றோம். அதில் சுவையில்லை என்பதால் அது அதிகம் விற்பனையாகவில்லை," என்றார் ஜமீலா & ஃபேமிலி கோழி விநியோகக் கடையின் உரிமையாளர் திருவாட்டி ஜமீலா.
பெரும்பாலும் ஸ்பெயின், பிரேசில் நாடுகளில் இருந்து கோழி இறக்குமதி செய்யும் ஹனிஃபா ஃபுரோஸன் ஃபுட் நிறுவனர் 85 வயது திரு எச். எம். ஹனிஃபா, மலேசியா அறிவித்துள்ள தடை தனது விலைகளைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றார். இருப்பினும், விலைவாசி அதிகரித்திருப்பதால் உறைந்த கோழியின் விலையை ஏறக்குறைய ஒரு கிலோவிற்கு ஒரு வெள்ளி அதிகரித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று, இறைச்சி விலையும் சென்ற ஆண்டிறுதியிலிருந்து கிலோவுக்கு ஓரிரு வெள்ளி கூடி உள்ளதாகவும், இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொன்னார் ஆட்டிறைச்சிக் கடை முதலாளியான 52 வயது சீனி முகம்மது.
மொத்த விற்பனையாளர்கள் படிப்படியாக இறைச்சி விலையை ஏற்றி வருவதால் தாங்களும் சற்று விலையை ஏற்றத் திட்டமிடுவதாக அவர் கூறினார். இவ்வாண்டு ஒரு கிலோவுக்கு நான்கு வெள்ளி விலையை ஏற்றியுள்ளது ஷமீமா ஆட்டிறைச்சி விநியோக நிறுவனம்.
மீன் விலை இவ்வாண்டு இரண்டு வெள்ளி கூடியிருந்தாலும், மே மாதத் தொடக்கத்தில் இதைவிட அதிகமாக இருந்தது என்று கூறினார் 47 வயதான திருவாட்டி உமா. கடல் உணவுப்பொருள்களின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளதால் சமாளிக்க முடிகின்றது என்றார் அவர்.
வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினரான வெளிநாட்டு ஊழியர்களின் உணவுப் பழக்கங்களை இந்த விலையேற்றம் பெரிதும் பாதித்துள்ளதாக தேக்கா நிலைய ஈரச்சந்தைக் கடைக்காரர்கள் பலரும் வருத்தப்பட்டனர்.
கொவிட்-19 சூழலில் இருந்து உலகம் மீண்டு வரும் காலகட்டத்தில், பொருளியல் மீட்சி அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏற்பட்டுள்ள உலக மாற்றங்களால் ஏமாற்றமடைந்துள்ளதாகப் பலரும் தெரிவித்தனர்.

