விலைவாசி உயர்வு காரணமாக தேக்கா தம் பிரியாணி கடை முதலாளி 62 வயது இதயத்துல்லா முகம்மதுக்கு பிரியாணி விலையை ஐம்பது காசு கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனாலும், உணவின் தரத்தைத் துளியும் குறைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், எக்காரணத்துக்காகவும் உணவின் தரத்தைக் குறைக்கப்போவதில்லை என்றார்.
"வாடிக்கையாளர்கள் அதே தரத்தை எதிர்பார்க்கின்றனர். விலை உயர்வைவிட உணவின் தரம் குறைவதுதான் வியாபாரத்தை அதிகம் பாதிக்கும் என்பதால், உணவுத் தயாரிப்பில் எவ்வித மாற்றத்தையும் நாங்கள் செய்யவில்லை," என்றார் திரு இதயத்துல்லா.
கூடுதல் செலவினங்களைச் சமாளிக்க ஆட்குறைப்பு செய்தார். நான்காக இருந்த கடை ஊழியர் எண்ணிக்கையை மூன்றாகக் குறைத்துள்ளதாக அவர் கூறினார்.
தேக்கா நிலையத்தில் இயங்கும் மற்றொரு கடையான டீன் ஃபுட் ஸ்டால், உணவுப் பொருள்களின் விலையைப் பத்துக் காசு வரை ஏற்றியுள்ளது.
குறைந்த விலைக்காகவே பலரும் தேக்கா நிலையத்தை நாடுவதால், விலையை அதிகபட்சம் ஏற்றவும் முடியாத நிலையில் இருப்பதாக இவ்விருவரும் குறிப்பிட்டனர். வேறு வழிகளில் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க இவர்கள் முற்பட்டுள்ளனர்.
சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பால் பொரித்த உணவு விற்பனையைக் குறைத்து, மற்ற உணவுவகைகளை அதிகம் விற்க முயற்சி செய்து வருகின்றார் டீன் ஃபுட் ஸ்டால் உரிமையாளர் வெள்ளையன் பால்ராஜ், 44.
"தோசை, வடை வகைகளை விட இட்லி, புட்டு, இடியாப்பம் முதலிய எண்ணெய் அதிகம் தேவை இல்லாத உணவுவகைகளை அதிகம் விற்று வருகிறோம்," என்றார் அவர்.
உறைந்த கோழி மட்டுமே பயன்படுத்தும் உணவங்காடியை நிர்வகிக்கும் திருவாட்டி பர்வீன், தமது கடையிலும் கோழி உணவு ஒரு வெள்ளி விலையேறி உள்ளதாகக் கூறி, கவலைப்பட்டார்.
தனியார் உணவகங்களிலும் விலையேற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொரித்த கோழி, இறைச்சி வகைகளின் விலையை இவ்வாண்டு ஐம்பது காசு உயர்த்தியுள்ளது காந்தி உணவகம். மாதாமாதம் பொருள்களின் விலை ஏறினாலும், வாடிக்கையாளர்களை இழக்காதிருக்க ஆண்டுக்கு ஒரு முறைதான் கடையில் உணவு விலையை ஏற்ற முடியும் என்று கூறினார் கடையின் துணை முதலாளி கீர்த்தி ராஜேந்திரன்.
பனானா லீஃப் அப்போலோ, முத்துஸ் கறி உணவகங்களில் வரும் நாள்களில் பத்து முதல் பதினைந்து விழுக்காடு வரை விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
"உணவுப்பொருள்கள் விரயமாவதைக் குறைக்கவும், தேவைக்கு ஏற்ப மட்டுமே சமைக்கவும் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம்," என்றார் முத்துஸ் கறி உணவகத்தின் இயக்குநர் காசி விஸ்வநாத்.
வழக்கமான வாடிக்கையாளர்களே பெரும்பாலும் உண்ண வருவதால் உணவுத் தரத்தின் வேறுபாடுகளை அவர்கள் கவனித்துவிடக் கூடும் என்று கூறிய பனானா லீஃப் அப்போலோவின் ஆலோசகர் திரு ருத்ராபதி, பிற நாடுகளிலிருந்தும் கோழி இறக்குமதி செய்யப்படுவதால் மலேசியாவின் கோழி ஏற்றுமதி தடையைச் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

