பொறுப்புகளின்றி தன்னுடைய இளமைப் பருவத்தைக் கழித்த தேவா குணா, 26, இன்று இரு இளம் பிள்ளைகளுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவாறு வாழ்கிறார். தமது 20வது வயதில் திருமணமாகி, மூன்று ஆண்டுகளிலேயே மணவிலக்கு பெறவும் நேரிட்டது. நான்கு வயது லுக்கெஷ் தெவின், ஆறு வயது ஜெசெந்திகா ரியா இருவரையும் தாமே பராமரித்து வருகிறார்.
மணவிலக்கு நேர்ந்தபோதும் ஒரு தந்தையாக தம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கடப்பாடு கொண்டிருந்தார் தேவா.
ஈட்டும் வருமானம் குறைவு என்றாலும் குறை ஏதுமில்லாமல் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனவலிமையுடன் வாழ்ந்து வருகிறார் இவர்.
தொலைபேசிவழி விற்பனை செய்யும் நிர்வாகியாகப் பணிபுரியும் தேவா, தினமும் தம் இரு பிள்ளைகளையும் பாலர் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு வேலைக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
ஜூரோங் வட்டாரத்தில் வசிக்கும் இவர், காலாங் வட்டாரத்தில் வேலைக்குச் சென்றபின் பிள்ளைகளின் பள்ளி முடிந்த பிறகு மீண்டும் அவர்களை அழைத்து வீடு திரும்பிவிடுவார். அன்றாடம் வீட்டுச் சமையல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதாலும் வெளியுணவால் செலவு அதிகம் என்பதாலும் முடிந்தளவுக்குத் தாமே தினமும் பிள்ளைகளுக்குச் சமைப்பதாகக் கூறினார் தேவா.
மாதம் ஒரு முறை பிள்ளைகள் தங்களின் தாயாரைச் சந்திக்கும் ஏற்பாட்டையும் இவர் செய்துள்ளார்.
மணவிலக்கு நடந்த காலகட்டத்தில் இரு பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர் என்றும் மனநல ஆலோசகரைப் பார்க்க வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டனர் என்றும் தேவா நினைவுகூர்ந்தார்.
பள்ளி ஆசிரியர்களும் தம் பிள்ளைகளுக்கு ஆதரவு தந்து வருவதாக அவர் கூறினார்.
"என் பிள்ளைகளுக்கு என்னால் ஆன அனைத்தையும் செய்து தர முடியும். ஆனால் அதே நேரம் என் உணர்வுகளைச் சமாளிக்க எனக்கு ஆலோசனை தேவைப்பட்டது. சமூகத்தின் ஆதரவும் கொஞ்சம் கிடைத்துள்ளது. என் பிள்ளைகளின் பாலர் பள்ளிக்கு நிச்சயம் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்றார் தேவா.
தங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அடிக்கடி தன்னுள் கேட்டுக்கொள்வதாக தேவா குறிப்பிட்டார். பொருளாதார ரீதியில் சில சிக்கல்களை எதிர்நோக்கினாலும் ஓர் இளம் தந்தையாகவும் ஒற்றைப் பெற்றோராகவும் இரு குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுப்பதில் குறியாய் இருப்பதாக உறுதியுடன் கூறினார் தேவா.

