உயிர்களிடத்தில் அன்பு போற்றுவோர்

7 mins read
84f4a8d5-be8c-42ab-a70f-7870e8b90708
-
multi-img1 of 2

மாதங்கி இளங்கோவன்

சிங்கப்பூரில் விலங்குநலன் பேணுதல், துன்புறுத்தல், விபத்துகளுக்கு உள்ளாகும் விலங்குகளைப் பராமரித்தல் போன்ற பணிகளில் அரசாங்க அமைப்புகளுடன் பல தொண்டூழிய அமைப்புகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இச்சேவையில் ஈடுபட்டிருப்போர் பெரும்பாலும் ஒரு சேவையாக இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். விலங்குநல ஆர்வலர்களின் நிதியாதரவு, தொண்டூழியர்களின் பங்களிப்பு என்பதற்கெல்லாம் அப்பால், விலங்குகள் மீது இவர்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பே பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் இடையேயும் இச்சேவையில் தொடர்ந்து ஈடுபடச் செய்கிறது.

அபயக்குரலுக்கு ஓடி வரும் மீட்பர்கள்

சென்ற ஆண்­டில் மட்­டும் துன்­பு­றுத்­தல், முறை­யான பரா­ம­ரிப்­பின்மை, விபத்­து­கள் போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட்ட 2,389 விலங்­கு­களை விலங்­கு­வதைத் தடுப்­புச் சங்­கம் மீட்­டெ­டுத்­தது. மேலும், 451 விலங்கு நலன், விலங்கு வதை தொடர்­பான சம்­ப­வங்­க­ளை­யும் சங்­கம் விசா­ரித் துள்­ளது.

ஒரு­முறை ஆற்­றில் மிதந்த சிறு பெட்­டிக்­குள் இருந்த பூனைக்­குட்­டியைக் கயிற்­றால் கட்டி இழுத்து காப்­பாற்­றி­னார் விலங்கு மீட்பு அதி­கா­ரி­யாக 33 ஆண்­டு­க­ளாக பணி­பு­ரி­யும் மோகன் வீரா­சாமி, 59.

சங்­கத்­தின் 24 மணி நேர உதவி தொலை­பேசி எண்­ணிற்கு அன்­றா­டம் குறைந்­தது 50 அழைப்­பு­க­ளா­வது வரும். ஒரு நேரத்­தில் இரு விலங்கு மீட்பு அதி­கா­ரி­களே பணி­யில் இருப்­ப­தால், உயிர் பிழைக்­கும் வாய்ப்பு அதி­க­மாக உள்ள விலங்­கு­க­ளுக்கே முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது என்­றார் திரு மோகன்.

ராணு­வத்­தில் பணி­பு­ரிந்த ராமன் காய­ம­டைந்­த­தால் அங்­கி­ருந்து வில­கி­ய­தும் விலங்­கு­வ­தைத் தடுப்­புச் சங்­கத்­தில் சேவை ஆற்­றத் தொடங்­கி­னார். விலங்கு மீட்­பில் அனு­ப­வம் இல்­லா­மல் சுங்­காய் தெங்­கா­வில் இருக்­கும் விலங்­கு­வ­தைத் தடுப்பு சங்­கத்­தில் பணி­யைத் தொடங்­கிய திரு மோகன், தற்­போது புதிய விலங்கு மீட்பு அதி­கா­ரி­க­ளுக்கு கற்­றுக்­கொடுக்­கும் அள­வுக்கு வளர்ந்­துள்­ளார்.

அடுக்­கு­மாடிக் கட்­ட­டங்­க­ளின் சன்­னல்­கள் வழி­யா­கக் குதிக்­கும் நாய்­கள், உய­ரத்­தி­லி­ருந்து தடுக்கி விழும் ஆபத்­தி­லுள்ள பூனை­கள் என உதவி தேடி அழைக்­கும் குடி­யி­ருப்­பார்­கள் அதி­கம். ஆனால், விலங்கு வதைத் தடுப்­புச் சங்­கத்­தின் பாது­காப்பு விதி­க­ளின்­படி இரண்டு மீட்­டர் உய­ரத்­துக்கு மேல் ஏறி அதி­கா­ரி­க­ளால் இப்­பி­ரா­ணி­களை மீட்­டெ­டுக்க முடி­யாது.

"அவ­சர மருத்­துவ வாக­னத்­தின் வேகத்­தில் நாம் வர­வேண்­டும் என்று எதிர்­பார்ப்­பார்­கள். ஆனால் தூர­மான இடங்­க­ளுக்­குச் செல்ல நேர­மெ­டுக்­கும். மேலும், இங்கு விலங்கு மீட்பு அதி­கா­ரி­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைவு," என்று தாங்­கள் எதிர்­நோக்­கும் சவால்­கள் பற்­றிக் குறிப்­பிட்­டார் திரு மோகன்.

விலங்கு மீட்­பில் ஈடு­ப­டும்­போது பொது­மக்­க­ளுக்கு பதில் கூறு­வ­தற்கு அதிக நேரம்­ எ­டுப்பதால் விலங்­கு­க­ளுக்கு அதிக ஆபத்து ஏற்­பட வாய்ப்­பு­கள் உண்டு. எனவே, பொது­மக்­கள் விலங்கு மீட்பு அதி­கா­ரி­களை தொந்தரவு செய்­யா­மல் அவர்­க­ளைப் பணி­யில் ஈடு­ப­ட­ விட வேண்­டுமெனக் கேட்­டுக்­கொண்­டது விலங்கு­வ­தைத் தடுப்­புச் சங்­கம்.

ஒரு­முறை, புவாங்கோக் கிரசெண்ட் வட்­டா­ரத்­தில் நாய்க்­குட்டி ஒன்று வளர்ப்­ப­வ­ரால் கைவி­டப்­பட்­ட­தாக விலங்­கு­வ­தைத் தடுப்­புச் சங்­கத்­திற்கு அழைப்பு வந்­தது. அங்கு சென்ற மீட்பு அதி­கா­ரி­யான கல்­பனா பால­சந்­தி­ரன், 29, அது ஒரு தெரு ­நாய் என்­பதை அறிந்தார்.

நாய்க்­குட்­டி­யின் உட­லெங்­கும் முடி­கொட்டி, பூஞ்சை நோயு­டன் ஆங்­காங்கே ரத்­த­மும் கசி­ வ­தைக் கண்­டார். அதை உட­ன­டி­யா­க சங்கத்­தின் மருந்­த­கத்­திற்கு அழைத்­துச் சென்­றார்.

"மூன்று வாரங்­க­ளுக்­குப் பிறகு அதைப் பார்த்­த­போது என் மனம் உரு­கி­யது. உடல் முழுக்க பழுப்பு நிற முடி­யு­டன் துரு­து­ரு­வென்று இருந்த அதைப் பார்த்­த­போது, என்­னு­டைய வேலை­யின் உன்­ன­தத்தை உணர்ந்­தேன்," என்­றார் கால்­நடை மருத்துவ உத­வி­யா­ள­ராக மலே­சி­யா­வில் எட்டு ஆண்­டு­க­ளா­கப் பணி­புரிந்த அனு­ப­வ­முள்ள கல்­பனா.

உயிர்காத்து, நலம் பேணும் தம்பதி

வாகன விபத்­தில் சிக்­கிய ஜோதி­யின் காதில் ரத்­தம், காந்­திக்கு காலில் ஆழ­மான வெட்­டுக் காயம், எலும்பு முறிவு. இவ்­வாண்டு ஜூன் மாதத்­தில் கவ­னக்­கு­றை­வி­னால் கன­ரக வாக­னம் ஒன்­றில் மோதி கடுமை­யாக காயம்­பட்ட இந்த நாய்­களை தகவல் அறிந்ததும் விரைந்து சென்று காப்பாற்றி, உடனடி மருத்துவ சிகிச்சை அளித்தது 'கோஸஸ் ஃபார் எனி­மல்ஸ்'.

சமூக விலங்­கு­களை ஆபத்­தி­லி­ருந்­தும் தனி­மை­யி­லி­ருந்­தும் காப்­பாற்றி பரா­ம­ரிக்­கும் இந்த தொண்­டூ­ழிய அமைப்­பு, சமூக ஊட­கம் வழி இரண்டே நாட்­களில் சிகிச்­சைக்­குத் தேவை­யான நிதியைத் திரட்டியது.

குணமடைந்த பின்னர், துவாஸ் கட்­டு­மான பகு­தி­யின் நிறு­வ­னம் ஒன்று வளர்த்த இவ்­விரு நாய்­க­ளை­யும் வேறு சிலர் தத்­தெ­டுத்­த­னர்.

விபத்­து­க­ளி­லும் ஆபத்­தான சூழ்­நி­லை­க­ளி­லும் சிக்­கித் தவிக்­கும் விலங்­கு­க­ளைக் காப்­பாற்றி, அவற்­றுக்கு புதிய வாழ்க்­கையைத் தேடித்­தர பாடு­படு­கின்­ற­னர் கிறிஸ்­டின், மார்க்­கஸ் தம்­ப­தி­யர்.

உயர்­நி­லைப்­பள்­ளி­ ஆசி­ரி­ய­ரான கிறிஸ்­டி­னும் கால் நடை மருத்துவ உத­வி­யா­ள­ரான மார்க்­க­ஸும் விலங்­குக் காப்­ப­கத்­தில் தொண்­டூ­ழி­யம் புரிந்­த­போது சந்­தித்தனர். அங்கு மலர்ந்த காதல், திருமணத்­தில் இணைத்தது. விலங்­குப் பிரியர்­களான இருவரும் 2013ல் 'கோஸஸ் ஃபார் எனி­மல்ஸ்' நிறு­வனத்தை ஆரம்­பித்­த­னர்.

பின்னர் சுங்­காய் தங்கா விலங்கு காப்­ப­கம் ஒன்­றை­யும் தொடங்கினர்.

தத்­தம் பணி­க­ளி­லும் முழு­மை­யான ஈடு­பாடு கொண்டுள்ள இரு­வ­ருக்­கும் வேலை நேரம் தவிர்த்த மீதி நேர­மெல்­லாம் விலங்­கு­க­ளு­டன்­தான் கழி­கிறது. பொழு­து­போக்கு, ஓய்வு, விடு­முறை எல்­லாமே இவர்­க­ளுக்கு விலங்­கு­க­ளு­டன்­தான்.

கடந்த ஜூன் மாதம் வரை­யில் 'டிரெப் நியுட்­டர் ரிலீஸ்' திட்­டத்­தின் கீழ் மொத்­தம் 584 தெரு­நாய்­க­ளுக்கு கருத்­தடை செய்­துள்ளனர், 500 நாய்­க­ள், 90 பூனை­க­ளுக்­கு பராமரிப்­பா­ளர்­க­ளைத் தேடித்­தந்­துள்­ளனர்.

60 தொண்­டூ­ழி­யர்­க­ளைக் கொண்­டுள்ள இந்த அமைப்பு, மற்ற விலங்கு நல பரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­க­ளோ­டும் அமைப்­பு­க­ளோடும் இணைந்து பணி­யாற்­று­கின்­றது.

ஒவ்­வொ­ரு­நா­ளும் தொண்­டூ­ழி­யர்­கள் வீட­மைப்பு பேட்­டை­களில் 'டிரெப், நியுட்­டர், ரிலீஸ்' திட்­டத்­தில் பயன டைந்­துள்ள பூனை­க­ளுக்கு உண­வளிப்­ப­தோடு விலங்­குக் காப்­ப­கத்­தின் விலங்குகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த அமைப்பின் 18 வெள்­ளி­யில் பூனை­க­ளுக்கு தடுப்­பூசி போடும் தேசிய திட்­டம் ஓர் ஆண்டு காலத்­துக்­கா­வ­து­ பூ­னை­கள் தீவிர நோய்­க­ளுக்கு ஆளா­கா­மல் ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தற்கு உத­வு­கிறது.

விலங்குகளைக் கைவிடாதீர்கள்

செல்­லப்­பி­ரா­ணி­களை கைவி­டு­வோ­ரின் விகி­தத்தை குறைக்க பாடு­படும் விலங்­கு­வ­தைத் தடுப்­புச் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான ஆர்த்தி சங்­கர், "செல்­லப்­பி­ரா­ணியை வளர்ப்­ப­தற்கு முன்­னர் குடும்­பத்­தோடு அமர்ந்து கலந்­து­ரை­யா­டுங்­கள்," என்­றார்.

"இதை வளர்க்க வீட்­டில் அனை­வ­ரும் பொறுப்பு ஏற்­றுக்­கொள்­வார்­களா? வீட்­டில் விலங்­கிற்கு துணை­யாக எப்­போ­தும் ஒரு­வர் இருப்­பாரா? இக்­கேள்­வி­க­ளுக்கு வெளிப்­ப­டை­யான பதில் கிடைத்த பின்­னரே செல்­லப்­பி­ரா­ணியை வளர்க்க முடி­வு­செய்ய வேண்­டும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"வளர்ப்­ப­வர்­களே புறக்­க­ணிப்­பது, துன்­பு­றுத்­து­வது, கைவி­டு­வது தொடர்பில் ஒரு நாளில் குறைந்­தது இரு அழைப்­பு­க­ளா­வது சங்­கத்­திற்கு வரும். எனி­னும் சங்­கத்­தால் இவர்­ளுக்கு தண்­ட­னை­வி­திக்க முடி­யாது. விலங்குநல மருத்துவ சேவைதான் முறை­யான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு தண்­டனை குறித்து ஆரா­யும்," என அவர் விளக்­கி­னார்.

காப்பகத்தில் இருந்து தத்தெடுங்கள்

விலங்­கு­களை கடை­களில் வாங்­கு­வ­தற்­குப் பதில், விலங்குக் காப்பகங்­க­ளி­லி­ருந்து தத்­தெ­டுக்க பொது­மக்­கள் முன்­வர வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­ட­னர் 'ஏகர்ஸ்' (ACRES) அமைப்­பின் வன­வி­லங்கு மீட்பாளர்களான அன்­ப­ர­சி­யும் கலை­வா­ண­னும்.

"விலங்குக் காப்­ப­கங்­களில் உள்ள இவ்­வி­லங்­கு­க­ளுக்கு அன்பும் தங்­கு­வ­தற்கு நல்ல சூழ­லும் தேவை.

"சிலர் விலங்­கு­களை வாங்­கிய பின்பு அவற்­றுக்கு பிறப்­பி­லேயே குறை­பா­டு­கள் உள்­ளன என்­பதை உணர்ந்த பிறகு தெரு­வில் விட்­டு­வி­டு­கின்­ற­னர். ஏகர்ஸ் இவ்­வி­லங்­கு­களை மீட்­டுப் பாது­காக்­கிறது.

"சில சம­யங்­களில் இவ்­வி­லங்­கு­கள் பயத்­தில் தவிப்­ப­தும் உண்டு. இம்­மா­தி­ரி­யான விலங்­கு­க­ளின் மன­ந­லத்தை பாது­காக்க குறைந்­த­ள­வில் மனி­தர்­க­ளோடு பழக விடு­வோம்," என்று அவர்­கள் குறிப்பிட்டனர்.

ஏகர்ஸ் ஒவ்­வொரு மாத­மும் குறைந்­த­பட்­சம் 80,000 வெள்ளி நன்­கொ­டை திரட்­டு­கிறது. இதைக்­கொண்டு விலங்­கு­க­ளின் உணவு, சிகிச்சை உள்ளிட்ட பரா­ம­ரிப்­புச் செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

மருத்துவர் மனநலம் காப்பவர்

விபத்து, நோய்­க­ளால் பாதிக்­கப்­படும் விலங்­கு­க­ளின் பிரச்­சி­னை­களை மருத்­து­வர்­கள்­தான் ஆராய்ந்து, தங்­க­ளு­டைய அனு­ப­வத்­தை­யும் அறி­வை­யும் கொண்டு சில சோத­னை­க­ளைச் செய்து கண்­ட­றிய வேண்­டும்.

இந்­தச் சேவை­யின் தேவை அதி­க­ரித்து வரும் அதே­நே­ரத்­தில் கால்­நடை மருத்­து­வத் துறை­ யிலிருந்து வெளி­யே­றும் மருத்­து­வர்­கள், உத­வி­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கூடி வரு­வ­தா­கக் கவ­லை­யு­டன் கூறி­னார், அர­வின் ஆனந்­த­மோ­கன், 29.

சிக்­க­லான சிகிச்­சை­கள், ஓய்­வற்ற பணி, நீண்ட நேரம் காத்­தி­ருப்­ப­தால் எரிச்­ச­ல­டை­யும் விலங்கு உரி­மை­யா­ளர்­க­ளைச் சமா­ளிப்­பது என்று கால்­நடை மருத்­து­வத்­து­றை­யின் அழுத்­தங்­களை அடுக்­கிக்­கொண்டே போக­லாம் என்ற அவர் இச்­ச­வால்­களை தாம் சமா­ளிக்­கப் பழ­கிக்­கொண்­ட­தா­க­வும் கூறி­னார்.

சிகிச்சை தாம­தம் ஏற்­ப­டு­வதற்­கான கார­ணத்­தைத் விலங்கு களின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் அவர் தெளி­வா­கக் கூறி­வி­டு­வார்.

அவ­ச­ர­மாக சிகிச்சை செய்­யும்­போது அல்­லது சிக்­க­லான ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு அதிக நேரம் தேவைப்­ப­ட­லாம் என்­பதை எடுத்­துக்­கூ­றும்­போது பெரும்­பா­லோர் புரிந்­து­கொள்­வர் என்­றார் அவர்.

இணை­யம்­வழி ஆஸ்­தி­ரே­லியா கல்­லூ­ரி­யில் கால்நடை தாதி­மைத் துறை­யில் சான்­றி­தழ் கல்வியைப் பெற்­றி­ருக்­கும் அர­வின், சிறந்த கால்­நடை மருத்­துவ உத­வி­யா­ள­ராக இருப்­ப­தற்கு இரக்க குண­மும் தொடர்­பு­த்தி­ற­னும் அவ­சி­ய­மென நம்­பு­கி­றார்.

"கால்­நடை மருத்­துவ உத­வி­யா­ளர்­க­ளின் பணி சுல­ப­மா­னது அல்ல. சில நேரங்­களில் அதிக சோர்­வின் கார­ணத்­தால் அவர்கள் மன உளைச்­ச­லால் பாதிப்­ப­டை­கின்­ற­னர். அவர்­க­ளு­டைய மன நலத்தை பாது­காக்க நான் சில முயற்­சி­களை மேற்­கொள்­கி­றேன். கூடிய விரை­வில் சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் அனைத்து கால்­நடை மருத்­து­வர்­க­ளுக்­கும் மருத்­துவ உத­வி­யா­ளர்­க­ளுக்­கும் மன நலம் சம்­பந்­தப்­பட்ட திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்­பாடு செய்­வதற்கு எனது பங்கை அளிப்­பேன்," என்­றார்.

விலங்கு வதை குற்றம்:

விலங்குகளைத் துன்புறுத்துவோருக்கு

முதல் முறை 18 மாதச் சிறைத் தண்டனை அல்லது $15,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் விலங்குகளைத் தாக்கி பிடிப்பட்டால், மூன்று ஆண்டுகால சிறை தண்டனை அல்லது $30 000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வீட்டுப் பிராணிகளை வளர்க்க விதிக்கப்பட்ட தடையை மீறுவோருக்கு ஆறு மாதச் சிறை தண்டனை அல்லது $5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவசர தொலைபேசி எண்கள்

எஸ்பிசிஏ - 6287 5355 extension 9

(நாய், பூனை போன்ற சிறிய விலங்குகளின் மீட்பு)

ஏகர்ஸ் - 9783 7782 (வனவிலங்கு மீட்பு)

கோஸஸ் ஃபார் எனிமல்ஸ் - 9793 7162 (நாய்கள், பூனைகளைத் தத்தெடுக்கவும் மீட்டெடுக்கவும் அழைக்கலாம்)

மேல் விவரங்களுக்கு

https://www.spca.org.sg/

https://acres.org.sg/

https://www.causesforanimals.com/

https://www.nparks.gov.sg/avs