மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூரில் விலங்குநலன் பேணுதல், துன்புறுத்தல், விபத்துகளுக்கு உள்ளாகும் விலங்குகளைப் பராமரித்தல் போன்ற பணிகளில் அரசாங்க அமைப்புகளுடன் பல தொண்டூழிய அமைப்புகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இச்சேவையில் ஈடுபட்டிருப்போர் பெரும்பாலும் ஒரு சேவையாக இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். விலங்குநல ஆர்வலர்களின் நிதியாதரவு, தொண்டூழியர்களின் பங்களிப்பு என்பதற்கெல்லாம் அப்பால், விலங்குகள் மீது இவர்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பே பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் இடையேயும் இச்சேவையில் தொடர்ந்து ஈடுபடச் செய்கிறது.
அபயக்குரலுக்கு ஓடி வரும் மீட்பர்கள்
சென்ற ஆண்டில் மட்டும் துன்புறுத்தல், முறையான பராமரிப்பின்மை, விபத்துகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 2,389 விலங்குகளை விலங்குவதைத் தடுப்புச் சங்கம் மீட்டெடுத்தது. மேலும், 451 விலங்கு நலன், விலங்கு வதை தொடர்பான சம்பவங்களையும் சங்கம் விசாரித் துள்ளது.
ஒருமுறை ஆற்றில் மிதந்த சிறு பெட்டிக்குள் இருந்த பூனைக்குட்டியைக் கயிற்றால் கட்டி இழுத்து காப்பாற்றினார் விலங்கு மீட்பு அதிகாரியாக 33 ஆண்டுகளாக பணிபுரியும் மோகன் வீராசாமி, 59.
சங்கத்தின் 24 மணி நேர உதவி தொலைபேசி எண்ணிற்கு அன்றாடம் குறைந்தது 50 அழைப்புகளாவது வரும். ஒரு நேரத்தில் இரு விலங்கு மீட்பு அதிகாரிகளே பணியில் இருப்பதால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ள விலங்குகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் திரு மோகன்.
ராணுவத்தில் பணிபுரிந்த ராமன் காயமடைந்ததால் அங்கிருந்து விலகியதும் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தில் சேவை ஆற்றத் தொடங்கினார். விலங்கு மீட்பில் அனுபவம் இல்லாமல் சுங்காய் தெங்காவில் இருக்கும் விலங்குவதைத் தடுப்பு சங்கத்தில் பணியைத் தொடங்கிய திரு மோகன், தற்போது புதிய விலங்கு மீட்பு அதிகாரிகளுக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
அடுக்குமாடிக் கட்டடங்களின் சன்னல்கள் வழியாகக் குதிக்கும் நாய்கள், உயரத்திலிருந்து தடுக்கி விழும் ஆபத்திலுள்ள பூனைகள் என உதவி தேடி அழைக்கும் குடியிருப்பார்கள் அதிகம். ஆனால், விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தின் பாதுகாப்பு விதிகளின்படி இரண்டு மீட்டர் உயரத்துக்கு மேல் ஏறி அதிகாரிகளால் இப்பிராணிகளை மீட்டெடுக்க முடியாது.
"அவசர மருத்துவ வாகனத்தின் வேகத்தில் நாம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் தூரமான இடங்களுக்குச் செல்ல நேரமெடுக்கும். மேலும், இங்கு விலங்கு மீட்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைவு," என்று தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிக் குறிப்பிட்டார் திரு மோகன்.
விலங்கு மீட்பில் ஈடுபடும்போது பொதுமக்களுக்கு பதில் கூறுவதற்கு அதிக நேரம் எடுப்பதால் விலங்குகளுக்கு அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, பொதுமக்கள் விலங்கு மீட்பு அதிகாரிகளை தொந்தரவு செய்யாமல் அவர்களைப் பணியில் ஈடுபட விட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டது விலங்குவதைத் தடுப்புச் சங்கம்.
ஒருமுறை, புவாங்கோக் கிரசெண்ட் வட்டாரத்தில் நாய்க்குட்டி ஒன்று வளர்ப்பவரால் கைவிடப்பட்டதாக விலங்குவதைத் தடுப்புச் சங்கத்திற்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற மீட்பு அதிகாரியான கல்பனா பாலசந்திரன், 29, அது ஒரு தெரு நாய் என்பதை அறிந்தார்.
நாய்க்குட்டியின் உடலெங்கும் முடிகொட்டி, பூஞ்சை நோயுடன் ஆங்காங்கே ரத்தமும் கசி வதைக் கண்டார். அதை உடனடியாக சங்கத்தின் மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றார்.
"மூன்று வாரங்களுக்குப் பிறகு அதைப் பார்த்தபோது என் மனம் உருகியது. உடல் முழுக்க பழுப்பு நிற முடியுடன் துருதுருவென்று இருந்த அதைப் பார்த்தபோது, என்னுடைய வேலையின் உன்னதத்தை உணர்ந்தேன்," என்றார் கால்நடை மருத்துவ உதவியாளராக மலேசியாவில் எட்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்த அனுபவமுள்ள கல்பனா.
உயிர்காத்து, நலம் பேணும் தம்பதி
வாகன விபத்தில் சிக்கிய ஜோதியின் காதில் ரத்தம், காந்திக்கு காலில் ஆழமான வெட்டுக் காயம், எலும்பு முறிவு. இவ்வாண்டு ஜூன் மாதத்தில் கவனக்குறைவினால் கனரக வாகனம் ஒன்றில் மோதி கடுமையாக காயம்பட்ட இந்த நாய்களை தகவல் அறிந்ததும் விரைந்து சென்று காப்பாற்றி, உடனடி மருத்துவ சிகிச்சை அளித்தது 'கோஸஸ் ஃபார் எனிமல்ஸ்'.
சமூக விலங்குகளை ஆபத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் காப்பாற்றி பராமரிக்கும் இந்த தொண்டூழிய அமைப்பு, சமூக ஊடகம் வழி இரண்டே நாட்களில் சிகிச்சைக்குத் தேவையான நிதியைத் திரட்டியது.
குணமடைந்த பின்னர், துவாஸ் கட்டுமான பகுதியின் நிறுவனம் ஒன்று வளர்த்த இவ்விரு நாய்களையும் வேறு சிலர் தத்தெடுத்தனர்.
விபத்துகளிலும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் சிக்கித் தவிக்கும் விலங்குகளைக் காப்பாற்றி, அவற்றுக்கு புதிய வாழ்க்கையைத் தேடித்தர பாடுபடுகின்றனர் கிறிஸ்டின், மார்க்கஸ் தம்பதியர்.
உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான கிறிஸ்டினும் கால் நடை மருத்துவ உதவியாளரான மார்க்கஸும் விலங்குக் காப்பகத்தில் தொண்டூழியம் புரிந்தபோது சந்தித்தனர். அங்கு மலர்ந்த காதல், திருமணத்தில் இணைத்தது. விலங்குப் பிரியர்களான இருவரும் 2013ல் 'கோஸஸ் ஃபார் எனிமல்ஸ்' நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
பின்னர் சுங்காய் தங்கா விலங்கு காப்பகம் ஒன்றையும் தொடங்கினர்.
தத்தம் பணிகளிலும் முழுமையான ஈடுபாடு கொண்டுள்ள இருவருக்கும் வேலை நேரம் தவிர்த்த மீதி நேரமெல்லாம் விலங்குகளுடன்தான் கழிகிறது. பொழுதுபோக்கு, ஓய்வு, விடுமுறை எல்லாமே இவர்களுக்கு விலங்குகளுடன்தான்.
கடந்த ஜூன் மாதம் வரையில் 'டிரெப் நியுட்டர் ரிலீஸ்' திட்டத்தின் கீழ் மொத்தம் 584 தெருநாய்களுக்கு கருத்தடை செய்துள்ளனர், 500 நாய்கள், 90 பூனைகளுக்கு பராமரிப்பாளர்களைத் தேடித்தந்துள்ளனர்.
60 தொண்டூழியர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, மற்ற விலங்கு நல பராமரிப்பு நிறுவனங்களோடும் அமைப்புகளோடும் இணைந்து பணியாற்றுகின்றது.
ஒவ்வொருநாளும் தொண்டூழியர்கள் வீடமைப்பு பேட்டைகளில் 'டிரெப், நியுட்டர், ரிலீஸ்' திட்டத்தில் பயன டைந்துள்ள பூனைகளுக்கு உணவளிப்பதோடு விலங்குக் காப்பகத்தின் விலங்குகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த அமைப்பின் 18 வெள்ளியில் பூனைகளுக்கு தடுப்பூசி போடும் தேசிய திட்டம் ஓர் ஆண்டு காலத்துக்காவது பூனைகள் தீவிர நோய்களுக்கு ஆளாகாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
விலங்குகளைக் கைவிடாதீர்கள்
செல்லப்பிராணிகளை கைவிடுவோரின் விகிதத்தை குறைக்க பாடுபடும் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநரான ஆர்த்தி சங்கர், "செல்லப்பிராணியை வளர்ப்பதற்கு முன்னர் குடும்பத்தோடு அமர்ந்து கலந்துரையாடுங்கள்," என்றார்.
"இதை வளர்க்க வீட்டில் அனைவரும் பொறுப்பு ஏற்றுக்கொள்வார்களா? வீட்டில் விலங்கிற்கு துணையாக எப்போதும் ஒருவர் இருப்பாரா? இக்கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் கிடைத்த பின்னரே செல்லப்பிராணியை வளர்க்க முடிவுசெய்ய வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"வளர்ப்பவர்களே புறக்கணிப்பது, துன்புறுத்துவது, கைவிடுவது தொடர்பில் ஒரு நாளில் குறைந்தது இரு அழைப்புகளாவது சங்கத்திற்கு வரும். எனினும் சங்கத்தால் இவர்ளுக்கு தண்டனைவிதிக்க முடியாது. விலங்குநல மருத்துவ சேவைதான் முறையான விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை குறித்து ஆராயும்," என அவர் விளக்கினார்.
காப்பகத்தில் இருந்து தத்தெடுங்கள்
விலங்குகளை கடைகளில் வாங்குவதற்குப் பதில், விலங்குக் காப்பகங்களிலிருந்து தத்தெடுக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் 'ஏகர்ஸ்' (ACRES) அமைப்பின் வனவிலங்கு மீட்பாளர்களான அன்பரசியும் கலைவாணனும்.
"விலங்குக் காப்பகங்களில் உள்ள இவ்விலங்குகளுக்கு அன்பும் தங்குவதற்கு நல்ல சூழலும் தேவை.
"சிலர் விலங்குகளை வாங்கிய பின்பு அவற்றுக்கு பிறப்பிலேயே குறைபாடுகள் உள்ளன என்பதை உணர்ந்த பிறகு தெருவில் விட்டுவிடுகின்றனர். ஏகர்ஸ் இவ்விலங்குகளை மீட்டுப் பாதுகாக்கிறது.
"சில சமயங்களில் இவ்விலங்குகள் பயத்தில் தவிப்பதும் உண்டு. இம்மாதிரியான விலங்குகளின் மனநலத்தை பாதுகாக்க குறைந்தளவில் மனிதர்களோடு பழக விடுவோம்," என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏகர்ஸ் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 80,000 வெள்ளி நன்கொடை திரட்டுகிறது. இதைக்கொண்டு விலங்குகளின் உணவு, சிகிச்சை உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளைச் சமாளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர் மனநலம் காப்பவர்
விபத்து, நோய்களால் பாதிக்கப்படும் விலங்குகளின் பிரச்சினைகளை மருத்துவர்கள்தான் ஆராய்ந்து, தங்களுடைய அனுபவத்தையும் அறிவையும் கொண்டு சில சோதனைகளைச் செய்து கண்டறிய வேண்டும்.
இந்தச் சேவையின் தேவை அதிகரித்து வரும் அதேநேரத்தில் கால்நடை மருத்துவத் துறை யிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள், உதவியாளர்களின் எண்ணிக்கையும் கூடி வருவதாகக் கவலையுடன் கூறினார், அரவின் ஆனந்தமோகன், 29.
சிக்கலான சிகிச்சைகள், ஓய்வற்ற பணி, நீண்ட நேரம் காத்திருப்பதால் எரிச்சலடையும் விலங்கு உரிமையாளர்களைச் சமாளிப்பது என்று கால்நடை மருத்துவத்துறையின் அழுத்தங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் என்ற அவர் இச்சவால்களை தாம் சமாளிக்கப் பழகிக்கொண்டதாகவும் கூறினார்.
சிகிச்சை தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தைத் விலங்கு களின் உரிமையாளர்களிடம் அவர் தெளிவாகக் கூறிவிடுவார்.
அவசரமாக சிகிச்சை செய்யும்போது அல்லது சிக்கலான ஆலோசனை வழங்குவதற்கு அதிக நேரம் தேவைப்படலாம் என்பதை எடுத்துக்கூறும்போது பெரும்பாலோர் புரிந்துகொள்வர் என்றார் அவர்.
இணையம்வழி ஆஸ்திரேலியா கல்லூரியில் கால்நடை தாதிமைத் துறையில் சான்றிதழ் கல்வியைப் பெற்றிருக்கும் அரவின், சிறந்த கால்நடை மருத்துவ உதவியாளராக இருப்பதற்கு இரக்க குணமும் தொடர்புத்திறனும் அவசியமென நம்புகிறார்.
"கால்நடை மருத்துவ உதவியாளர்களின் பணி சுலபமானது அல்ல. சில நேரங்களில் அதிக சோர்வின் காரணத்தால் அவர்கள் மன உளைச்சலால் பாதிப்படைகின்றனர். அவர்களுடைய மன நலத்தை பாதுகாக்க நான் சில முயற்சிகளை மேற்கொள்கிறேன். கூடிய விரைவில் சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து கால்நடை மருத்துவர்களுக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும் மன நலம் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்வதற்கு எனது பங்கை அளிப்பேன்," என்றார்.
விலங்கு வதை குற்றம்:
விலங்குகளைத் துன்புறுத்துவோருக்கு
முதல் முறை 18 மாதச் சிறைத் தண்டனை அல்லது $15,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் விலங்குகளைத் தாக்கி பிடிப்பட்டால், மூன்று ஆண்டுகால சிறை தண்டனை அல்லது $30 000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வீட்டுப் பிராணிகளை வளர்க்க விதிக்கப்பட்ட தடையை மீறுவோருக்கு ஆறு மாதச் சிறை தண்டனை அல்லது $5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அவசர தொலைபேசி எண்கள்
எஸ்பிசிஏ - 6287 5355 extension 9
(நாய், பூனை போன்ற சிறிய விலங்குகளின் மீட்பு)
ஏகர்ஸ் - 9783 7782 (வனவிலங்கு மீட்பு)
கோஸஸ் ஃபார் எனிமல்ஸ் - 9793 7162 (நாய்கள், பூனைகளைத் தத்தெடுக்கவும் மீட்டெடுக்கவும் அழைக்கலாம்)
மேல் விவரங்களுக்கு
https://www.spca.org.sg/
https://acres.org.sg/
https://www.causesforanimals.com/
https://www.nparks.gov.sg/avs

