ஹர்ஷிதா பாலாஜி
அழகை விரும்பும் இதயத்திற்கு ஒருபோதும் வயதாகாது என்பது பழமொழி. வெளிப்புற அழகு எல்லாரையும் ஈர்க்கக்கூடியது. தம்மைக் காண்போரைக் கவரும்படி தம் தோற்றத்தை அழகாக வைத்துக்கொள்ள எல்லாருமே விரும்புவர். அதனால்தான், ஒப்பனைப் பொருள் விற்பனைத் துறை எப்போதுமே கொடிகட்டிப் பறக்கிறது. போட்டித்தன்மை மிகுந்த அத்துறையில் வெற்றி பெறுவது எளிதானதல்ல என்றபோதும், துணிந்து அதில் கால்பதித்துள்ள உள்ளூர்வாசிகள் நால்வரை நேர்கண்டு, அவர்களின் முனைப்பையும் அனுபவங்களையும் அறிந்துவந்தது தமிழ் முரசு.
ஆணுக்கும் உண்டு அழகுணர்வு
எல்லா வயதுப் பிரிவினரும் ஒப்பனை செய்துகொள்ளும் அளவிற்குக் குறைந்த விலையில் ஒப்பனைப் பொருள்களைத் தயாரித்து விற்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 2019ஆம் ஆண்டில் 'ஹோலி (Hoely)' நிறுவனத்தைத் தொடங்கினார் திரு அ. சுபாஷ், 25.
ஏறக்குறைய ஈராண்டுகளாகச் சமூக ஊடகங்களின் மூலமாகவும் இணையம் வழியாகவும் தமது நிறுவனத்தில் வண்ண வண்ண உதட்டுச்சாயங்களையும் விதவிதமான போலி இமைகளையும் விற்றுவருகிறார் இவர்.
"சிறுவயதிலிருந்தே எனக்கு ஒப்பனை செய்துகொள்ள மிகவும் பிடிக்கும். என் தாயாரும் அடிக்கடி திரைப்பட நடிகைகள் போன்று அழகாக ஒப்பனை செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அவர்கள் பயன்படுத்திய ஒப்பனைப் பொருள்கள் பெரும்பாலும் விலை உயர்ந்ததாக இருந்ததால் அதை வாங்கும் வசதி, நான் உட்பட பலருக்கும் இல்லை என்பதை கவனித்தேன்," என்றார் திரு சுபாஷ்.
இதுவரை ஒரு நிறுவனராக பல வெற்றிகளைக் கண்டுள்ள இவர், அவ்வப்போது சவால்களையும் சந்தித்துள்ளார்.
"தொடக்கத்தில் 'உதட்டுச்சாயம் பற்றி உனக்கென்ன தெரியும்' என்று பலரும் நினைத்து என் தயாரிப்புகள்மீது அவநம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நான் என் வேலையைச் செய்ததால், ஆணாக இருந்தாலும் இத்துறையில் நிலைத்திருக்க முடியும் என்பதை எனது தயாரிப்புகளின் தரத்தின் வழியாக என்னை நான் மெய்ப்பித்துக்காட்டினேன்," என்றார் சுபாஷ்.
தற்போது கப்லான் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்றவாறே, 'ஹோலி' நிறுவனத்தையும் இவர் கவனித்து வருகிறார்.
வெளிப்புற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி ஒரு கண், தொழில் ஒரு கண் என, இவ்விரண்டின்மீதே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் இந்த இளையர்.
தம்மைப் போன்று சிறிய நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் தயாரிப்பதாலும் அப்பொருள்கள் தரமானவையாக இருப்பதாலும் சிறிய உள்ளூர் நிறுவனங்களைப் பலரும் ஆதரிப்பதாக திரு சுபாஷ் சொன்னார்.
உதட்டில் மட்டும் ஒட்டும், முகக்கவசத்தில் ஒட்டாது
கொவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க அல்லது அவ்வாய்ப்பைக் குறைத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை, தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான் முகக்கவசம் அணிவது.
வெகுநேரம் முகக்கவசம் அணிந்திருந்தால் மூச்சுவிடச் சிரமமாக உள்ளது என்று ஒரு சிலர் கூறிவரும் நிலையில், அதனால் சில பெண்களுக்கு வேறுவகையில் பிரச்சினை ஏற்பட்டது. கொவிட்-19 கிருமித்தொற்று முகக்கவசத்தை அணியும்போது உதட்டுச்சாயம் முகக்கவசத்தில் ஒட்டுவது போன்ற பிரச்சினைகளைப் பலரும் எதிர்கொண்டனர்.
இதனையறிந்த திருவாட்டி ஜனனி நேத்ரா சடகோபன், 45, முகக்கவசத்தில் ஒட்டாத உதட்டுச்சாயத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். சீனாவிலிருக்கும் தம் ஆய்வுக்குழுவுடன் இணைந்து செயல்பட்ட இவர், பல சோதனைகளுக்கும் தோல்விகளுக்கும் பிறகு, வெற்றிகரமாக முகக்கவசத்தில் ஒட்டாத உதட்டுச்சாயத்தை உருவாக்கினார்.
கடந்த ஓராண்டாக 'மேஹம் ஒப்பனைப்பொருள் (Mayhem cosmetics)' நிறுவனத்தை நடத்திவரும் திருவாட்டி ஜனனி, ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களுக்கும் ஏற்ற வண்ணங்களில் உதட்டுச்சாயங்களை தயாரித்து விற்று வருகிறார்.
இந்தியர்களின் தோலுக்கு, குறிப்பாக மாநிறத் தோலுக்கு ஏற்ற நிறங்களில் ஃபவுண்டேஷனையும் இவர் தயாரித்து விற்கிறார்.
மாநிறத் தோலின் அழகை எடுத்துக்காட்ட, தமது நிறுவனத்தின் விளம்பர அழகியாக முன்னாள் பேரண்ட அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டியில் சிங்கப்பூர் சார்பாகப் பங்கேற்ற மோகனா பிரபாவை இவர் நாடினார்.
இருப்பினும், தனது நிறுவனம் சிலபல தடைகளை எதிர்கொண்டு வருவதாக திருவாட்டி ஜனனி குறிப்பிட்டார்.
"இந்த நிறம் நம் தோலுக்கு ஏற்றதாக இருக்கிறதா, இதை அணிய வசதியாக இருக்கிறதா என்று தீர்மானிக்க, ஒப்பனைப் பொருள்களைத் தொட்டுணர பலரும் இன்னுமும் விரும்புகின்றனர். ஆனால் தற்போது எனது நிறுவனம் முற்றிலும் இணையம்வழி செயல்படுவதால் அதைச் செய்யமுடியாது. வருங்காலத்தில் அந்த வசதியையும் விற்பனையாளர்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்," என்றார் இவர்.
அதே நேரத்தில், போட்டித்தன்மை மிகுந்த ஒப்பனைத் துறையில் மற்ற வெளியூர் நிறுவனங்களுடன் போட்டியிடுவதும் கடினமான ஒன்று என்பதால், தனது நிறுவனத்தில் விற்கப்படும் பொருள்களின் விலையை அதிக அளவில் குறைக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறார் திருவாட்டி ஜனனி.
வண்ணத்தில் இல்லை வனப்பு
மாநிறத் தோலுக்கு ஏற்ற பொருள்களை இணையம் வழியாக விற்பனை செய்யும் குமாரி விசாலினி, 29, 2015ல் தமது 'வியான் (Viyaan)' நிறுவனத்தைத் தொடங்கினார்.
மாநிறத்தவருக்கு ஏற்ற தோல் பராமரிப்புப் பொருள்கள் சந்தையில் இல்லாததால் அத்தகைய பொருள்களில் கவனம் செலுத்தத் தொடங்கியதாகக் கூறும் குமாரி விசாலினி, "நமக்கேற்ற பொருள்களை நாம்தான் உருவாக்க வேண்டும்," என்றார்.
என்னென்னவோ பொருள்களைப் பயன்படுத்தியும் முகப்பருக்கள் கட்டுப்படாததால் ஆயுர்வேதத் தோல் பராமரிப்புப் பொருள்களை நாட முடிவு செய்தார் இவர். ஆனாலும், சிங்கப்பூரில் அதிகமான தெரிவுகள் இல்லாததால், இணையத்தில் பெற்ற குறிப்புகளைக் கொண்டு வீட்டிலிருந்த இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தினார்.
முகப்பருக்கள் குறையத் தொடங்கின. தான் பயன்படுத்திய பொருள்கள் குறித்து தனது நண்பர்களிடமும் பகிர்ந்தார். அவர்களுக்கும் பலன் கிடைக்கவே, மற்றவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இதனைத் தொழிலாகத் தொடங்க முடிவுசெய்தார். இயற்கையான தோல் பராமரிப்புப் பொருள்கள் குறித்து முறையாகத் தெரிந்துகொள்ள குமாரி விசாலினி, இந்தியாவில் ஓர் ஆயுர்வேத நிபுணரிடம் ஆலோசனை பெற்றபின், விற்பனைக்கான பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.
தொடக்கத்தில் இவர் தயாரித்த பொருள்கள் சில நேரங்களில் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. மேலும், நிறுவனத்திற்கான முதலீட்டைப் பெறுவதிலும் சிரமங்கள் ஏற்பட்டபோது, இவரின் குடும்பத்தினர் கைகொடுத்தனர்.
வெள்ளைத்தோல்தான் அழகு என்ற கருத்தை ஊக்குவிக்கும் எந்தச் செயலிலும் இவருக்கு உடன்பாடு இல்லாததால், அத்தகைய பொருள்களை இவர் விற்பதில்லை.
"தோலை முறையாகப் பராமரிப்பதற்கான பொருள்களே தேவை. தெரியாத பொருளை வாங்க பலரும் தயங்குவர். பெயர்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளையே பலரும் விரும்புவதால் இத்துறையில் போட்டித்தன்மை உண்டு. இருந்தாலும், என் உழைப்பின்மீது எனக்கு நம்பிக்கையுள்ளது," என்கிறார் விசாலினி.
பிறர் தவிப்பை உணர்ந்ததால் பிறந்த நிறுவனம்
பதின்ம வயதிலிருந்து முகப்பருக்களால் பாதிக்கப்பட்ட குமாரி சு. தர்ஷணா நாயர், தோல் பராமரிப்பைப் பற்றி அறிந்துகொள்ள புத்தகங்களையும் தோல் பராமரிப்பு மருத்துவர்களின் காணொளிகளையும் நாடினார்.
"கொஞ்சம் கொஞ்சமாக தோல் பராமரிப்பை பற்றி நான் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது, என்னைப்போல் பலரும் தங்கள் தோலைச் சரிசெய்ய என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. தொழில் தொடங்குவது என்பது எளிதானதல்ல என்பதால் சந்தைப்படுத்துதல், மருந்தியல் குறித்தும் படித்தேன்," என்றார் 24 வயதான குமாரி தர்ஷணா.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 'கிலிட்ஸ் அண்ட் கிளாம் (GlitzNGlam)' நிறுவனத்தைத் தொடங்கிய குமாரி தர்ஷணா, கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவலால் 'இன்ஸ்டகிராம்' சமூக ஊடகத்தின் வழியாக தோல் பராமரிப்புப் பொருள்களை விற்றார்.
வாடிக்கையாளர்கள் பலரும் இணையம் வழியாக இவரிடம் ஆலோசனை நாடினர்.
தம் வாடிக்கையாளர்களின் தோல் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்யக்கூடிய பொருள்களை பரிந்துரைக்கிறார் குமாரி தர்ஷணா.
வாடிக்கையாளர்கள் தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வசதியையும் இவர் அறிமுகப்படுத்தினார். அதே சமயத்தில், வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைத் தொட்டுணரக்கூடிய வசதியைத் தரவும் தம்மை நேரடியாகச் சந்தித்து, தோல் பராமரிப்பு குறித்து ஆலோசனை பெறவும் ஏதுவாக தம்முடைய நண்பரின் உதவியோடு உட்லண்ட்சில் சென்ற ஆண்டு ஒரு சிறு கடையையும் இவர் திறந்தார்.
பகுதிநேரத் துணைப்பாட ஆசிரியை பணிமூலம் சேமித்த பணத்தைத் தொழிலுக்கான முதலீடாகப் பயன்படுத்தினார் குமாரி தர்ஷணா. முதல் ஆறு, ஏழு மாதங்களில் லாபம் கிட்டாதபோதும் மனந்தளராது தொழிலை மேம்படுத்துவதிலேயே இவர் குறியாக இருந்தார். இவ்வாண்டு இங்கிலாந்தில் தோல் பராமரிப்பு குறித்த படிப்பையும் முடித்து, சேவைகளை முறைப்படி வழங்குவதற்கான உரிமத்தையும் இவர் பெற்றார்.
"பொருள்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதால், கிடைத்த சிறிய வருமானமும் கப்பல் கட்டணத்துக்கே செலவானது. அதனால் தொடக்கத்தில் லாபம் ஈட்ட முடியவில்லை. நாளடைவில் அதிகமானோர் பொருள்களை வாங்கத் தொடங்கியதால் இப்போது ஓரளவு கட்டுப்படியாகிறது," என்றார் குமாரி தர்ஷணா.
கூந்தல் பராமரிப்பு, ஒப்பனைப் பொருள்களையும் இவர் விற்று வருகிறார்.

