குடும்ப சோகத்தைத் தாங்கி தாதிமைக் கல்வியைத் தொடர்ந்த ஒருவர். தந்தையின் விருப்பத்தால் தாதிமைக் கல்வி கற்று சிறந்து விளங்கும் இன்னொருவர். இப்படி வெவ்வேறு திசையிலிருந்து படிப்பை முடித்து, பணியைத் தொடங்கினாலும் நோயாளி
களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை வழங்குவதில் ஒரே திசையில் நடைபோடுகிறார்கள் இருவரும். அவ்விருவரையும் கண்டுவந்தது
தமிழ் முரசு.
தீராஷினி தனபால்
தீராஷினிக்கு மூன்று வயது முதல் ஐந்து வயதுவரை நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்ததால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருந்தது. அப்போது தாதியர் ஒவ்வொரு நாளும் தமது படுக்கைக்கு அருகே அமர்ந்து அவரை பார்த்துக்கொண்ட விதத்தை தீராஷினி இன்றளவும் மறக்கவில்லை. அதைக் கண்ட பின்னர், தாமும் எதிர்காலத்தில் தாதியாக உடல்
நலம் குன்றியோரைப் பேண வேண்டும் என்ற வேட்கை இவருக்குள் உருவானது.
மருந்தியலில் ஆர்வம் காட்டும் தீராஷினி தனபால், 21, தற்போது அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் பகுதிநேர தாதியாக வேலை செய்கிறார். வாகன விபத்துகளில் அடிபட்டவர்களையும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கவனித்துக்கொள்ளும் மருத்துவமனையின் மறுசீரமைப்புப் பிரிவினர் நோயாளிகளிடம் எவ்வாறு பேசிப் பழகுகிறார்கள் என்பதைப் பார்த்துக் கற்றுகொண்டார்.
தீராஷினியின் தாதிமை கல்விப் பயணம் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தொடங்கி, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்
லூரியில் தொடர்ந்தது.
இரண்டாம் ஆண்டிலேயே, அவருக்கு நெருக்கமான மாமா காலமானார். தீராஷினியின் படிப்புக்கும் வாழ்வுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த அவர் இறந்தபோது தீராஷினிக்கு உலகமே இடிந்து விழுந்தது போலாயிற்று. ஆனாலும், தம் மாமாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென அவருடைய இறுதிச் சடங்கின்போதுகூட தேர்வுகளுக்கு மும்முரமாக படித்து அவற்றில் சிறப்பாகத் தேர்ச்சிபெற் றார். மன வலிமைமிக்க தீராஷினி பல்வேறு தொண்டூழிய முயற்சி
களிலும் இறங்கி சிறுவர்கள், முதியோர் என பலருக்கும் உதவி வந்துள்ளார்.
ஷாலினி கணேசன்
கட்டடவியல் படிப்பு மீது ஆசைகொண்டிருந்த ஷாலினி கணேசன், 25, தம் தந்தையின் விருப்பத்தால் தாதிமை படிப்பை மேற்கொண்டார். ரத்தத்தைக் கண்டு பயந்தாலும், துணிச்சலை மனதில் நிறுத்தி தாதிமைத் துறையில் பணியைத் தொடங்கினார்.
வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே தம்முடன் பணி
புரிந்த பராமரிப்பு உதவியாளரை கொவிட்-19 கிருமி தொற்றியதால் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் மறுசீரமைப்புப் பிரிவு முடக்கப்பட வேண்டிய அவசியம் நேர்ந்தது.
அதனால், வேலையிடத்தில் தனிமையில் தவித்தார் ஷாலினி. தம்மால் வீட்டில் இருப்பவர்களை கொவிட்-19 கிருமி தாக்கிவிடுமோ என்ற பயம் ஒருபக்கமிருக்க, புதிய வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற லட்சியம் இவரை ஊக்குவித்தது. ஷாலினியின் பராமரிப்பின்கீழ் இருந்த நோயாளி ஒருவரது உடலின் இடது பக்கம் வாதம் காரணமாக அைசக்க முடியாமல் இருந்தது.
ஆனால் வீடுதிரும்பிப் போகும்போது அவர் நடக்க ஆரம்பித்ததைப் பார்த்த ஷாலினிக்கு ஏற்பட்ட ஆனந்தம் எல்லையில்லாதது. தம்முடைய கவனிப்பாலும் பராமரிப்பாலும் குணமடைந்த அவரைப் போன்ற நோயாளிகளைப் பார்க்கும்போது தாதியாக ஆனது தாம் பெற்ற பெரும்பேறு என்று இவர் நம்புகிறார்.