அளவான பயன்பாடே அறிவார்ந்த பண்பாடு

அளவான பயன்பாடே அறிவார்ந்த பண்பாடு

6 mins read
0a3af036-05fa-41fe-874f-a97d96cb2bf1
'நியூ2யூ' கடையில் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கும் சேவைகளுக்கும் நன்கொடையாக வழங்கப்படுகிறது. படம்: திமத்தி டேவிட்பயன்படுத்தப்பட்ட ஆடைகளை விற்கும் ஃபங்ஷன் ஃபைவ் கடை. படம்: ஃபங்ஷன் ஃபைவ்சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம், தொண்டூழியர்களின் துணையுடன் 'நியூ2யூ' எனும் மறுபயனீட்டுக் கடையை நடத்தி வருகிறது. படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 4

அருணா கந்தசாமி

எங்கெங்கு காணினும் கடைகள், திரும்பிய திசையெல்லாம் பொருட்குவியல்!

தேவைக்கு மிஞ்சி வாங்கிக் குவித்து, சிலமுறை பயன் படுத்தியபின் வீசி எறிவதால் புதிது புதிதாய்க் குப்பை மலை! இயற்கை வளங்களை அழித்து, செயற்கையாக நலம் பேணும் உலகில், சுற்றுச்சூழல் காக்கும் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் விதைத்து வருகின்றன மலிவு விலைக் கடைகள்.

அண்­மைக்­கா­ல­மாக சிங்­கப்­பூ­ரில் மலி­வு­வி­லைக் கடை­கள் (thrift shops), குறிப்­பாக இளை­யர்­கள் இடையே பிர­ப­ல­மாகி வரு­கிறது.

கணி­னி­யி­யல் துறை­யில் முழு நேர­மா­கப் பணி­பு­ரிந்­து­வ­ரும் குமாரி ரேஷ்மா சுரேஷ்­கு­மார், 20, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு நன்மை பயப்­ப­தால் தாம் மலி­வு­வி­லைக் கடை­களை நாடு­வதா­கக் கூறி­னார்.

ஒவ்­வொரு முறை­யும் ஆடை­கள் வாங்க 50 வெள்ளி செலவு செய்­யா­மல், ஐந்­தில் ஒரு பங்கு விலைக்கு வாங்­கு­வது தமது பணப்­பைக்­கும் நன்மை என்­றார் அவர்.

ஆனா­லும், பிறந்­த­நாள் அல்­லது பண்­டிகை நாள்­கள் எனில் மரபான நடைமுறை கார­ண­மா­க ஏற்கெனவே பிறர் உடுத்திய ஆடை­களை (second-hand) வாங்­கு­வ­தில்லை என்­றும் அவர் சொன்­னார்.

மலி­வு­வி­லைக் கடை­க­ளுக்­குச் செல்­வது ஒரு நல்ல பொழு­து­போக்கு என்­றும் படித்­துக்கொண்­டி­ருப்­ப­தால் மலி­வான விலை­யில் பொருள்­களை வாங்­கு­வது பணம் சேமிக்­க­வும் உத­வி­யாக இருக்­கிறது என்­றும் கூறி­னார் தேசிய பல்­கலைக்­க­ழக மாணவி கெஜ ஷ்ரையா இராஜ்­கு­மார், 18.

கடந்த சில ஆண்­டு­களில் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தைச் சுற்றி மலி­வு­வி­லைக் கடை­கள் தோன்­றி­ உள்­ளன. கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைத்து, சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புக்­குப் பங்­க­ளிக்க வேண்­டும் என்று விரும்­பும் இளை­யர்­கள் பலர் இந்­தக் கடை­களை நாடு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்­டும் 137,000 டன் ஆடை அலங்­கா­ரப் பொருள் கழி­வு­கள் சேக­ரிக்­கப்­ப­டு­வ­தாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு சென்ற ஆண்டு வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

புவி­யில் வெப்­ப­நிலை அதி­க­ரிப்­பிற்­கும் இயற்­கைச் சீர்­கேட்­டிற்­கும் தேவைக்­கு­மேல் புதுப்­பு­துப் பொருள்­களை வாங்­கிக் குவிக்­கும் மிகை­நு­கர் போக்­கிற்­கும் பங்­கி­ருப்­ப­தாக சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்­கள் கூறி வரு­கின்­ற­னர்.

அதிக நீர், மின்­சா­ரம், இயற்கை வளங்­க­ளைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட ஆடை­களை ஓரி­ரு­முறை பயன்­ப­டுத்­தி­விட்டு வீசு­வது சுற்­றுச்­சூ­ழ­லுக்­குத் தீங்கு விளை­விக்­கும் என்­பது குமாரி ரேஷ்மா போன்ற இளை­யர்­க­ளின் கருத்து.

நீடித்த நிலைத்தன்மையுடனான வாழ்க்கைமுறை ஊக்குவிப்பு

வாட்­டர்லூ ஸ்தி­ரீட்­டில் செயல்­பட்டு வரு­கிறது 'நியூ2யூ (New2U)' மலிவு­வி­லைக் கடை. இந்­தக் கடை, சிங்கப்­பூர் மக­ளிர் அமைப்­பு­கள் மன்­றத்­தால் முற்­றி­லும் தொண்­டூ­ழி­யர்­களால் நடத்­தப்­பட்டு வரு­கிறது. விற்­ப­னை­யின்­மூ­லம் கிடைக்­கும் லா­பம் முழு­வ­தும் அம்­மன்­றத்­தின் நிகழ்ச்­சி­க­ளுக்­கும் சேவை­க­ளுக்­கும் நன்­கொ­டை­யாக வழங்­கப்­படு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்­கும் குழந்­தை­க­ளுக்­கும் ஆத­ரவு அளிக்­கும் சமயச் சார்­பற்ற தங்­கு­மி­ட­மான 'ஸ்டார் ஷெல்­டர்' தங்­கு­மி­டத்­தை­யும் சிங்­கப்­பூர் மகளிர் அமைப்­பு­கள் மன்­றம் நிர்­வகித்து வரு­கிறது.

குழந்­தை­கள், ஆண்­கள், பெண்­கள் என எல்­லாப் பிரி­வி­ன­ருக்­கும் வய­தி­ன­ருக்­கு­மான ஆடை­களும் 'நியூ2யூ' கடை­யில் விற்­கப்­ப­டு­கின்றன.

"அண்­மைக்­கா­ல­மாக அதி­க­மான மாண­வர்­கள் எங்­கள் கடைக்கு வந்து, பொருள்­கள் வாங்­கிச் செல்­கின்­ற­னர். பொருள்­க­ளின் விலை $4 முதல் $12 வரை என கட்­டுப்­ப­டி­யா­கும் வகை­யில் இருப்­ப­தால், அவர்­கள் இங்கு விரும்பி வரு­கி­றார்­கள். அவர்­களில் பலர் நீடித்த நிலைத்­தன்­மை­யு­டன் கூடிய வாழ்க்­கை­மு­றை­யைப் பின்­பற்ற வேண்­டும் என்ற நோக்­கத்­தா­லும் இங்கு வரு­கி­றார்­கள்," என்று அந்த மலி­வு­வி­லைக் கடை­யின் பேச்­சா­ளர் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

அக்­க­டை­யில் சேரும் தொண்­டூ­ழி­யர்­கள், அதற்­கு­முன் நீடித்த நிலைத்­தன்­மை­யு­டன் கூடிய வாழ்க்கை முறை­யைப் பின்­பற்­றா­மல் இருந்­தா­லும்­கூட அங்கு சேர்ந்த பின்­னர் விழிப்­பு­ணர்­வு­டன் செயல்­படு­கி­றார்­கள் என்­றும் அந்­தப் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

ரேஸ்­கோர்ஸ் சாலை­யில் செயல்­பட்டு வரு­கிறது 'சம்­திங் கோல்டு சம்­திங் நியூ (எஸ்­ஓ­எஸ்­என்)' எனும் மலி­வு­வி­லைக் கடை. ஆடை­கள், புத்­த­கங்­கள், மின்­சா­த­னங்­கள், பொம்­மை­கள் போன்ற பொருள்­களை அது விற்­பனை செய்து வரு­கிறது.

'3R' கொள்கையில் தீவிரம்

பசுமை சார்ந்த கடை­யான 'எஸ்­ஓ­எஸ்­என்', 3R என்று சொல்­லக்­கூ­டிய குறை­வான பயன்­பாடு, மறு­ப­யன்­பாடு, மறு­சு­ழற்சி (Reduce, Reuse, Recycle) என்ற கொள்­கை­யைத் தீவி­ர­மா­கப் பின்­பற்­று­கிறது.

சிங்­கப்­பூர் ஆங்­லிக்­கன் சமூக சேவை அமைப்­பின் ஆத­ர­வோடு செயல்­பட்­டு­வ­ரும் எஸ்­ஓ­எஸ்­என் 1997ஆம் ஆண்டு நிறு­வப்­பட்­டது. இக்­க­டைக்கு இன்று தீவு முழு­வதும் எட்­டுக் கிளை­கள் உள்­ளன. இந்த மலி­வு­வி­லைக் கடை மன­ந­லப் பிரச்­சினை­க­ளி­லி­ருந்து மீண்டு வரு­வோ­ருக்கு வேலை­வாய்ப்­பு­களை வழங்கி, அவர்­க­ளின் தன்­னம்­பிக்கை மேம்­பட உத­வு­கிறது.

இங்கு மலிவு விலை­யில் பொருள்­கள் கிடைத்­தா­லும், கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முன்பு பேரம் பேசி விலையைக் குறைக்க அனு­மதி இருந்­தது. ஆனால், இப்­போது செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டி­யாக வைத்­தி­ருக்க அந்த வசதி வழங்­கப்­ப­டு­வது இல்லை.

நியூ2யூ, எஸ்­ஓ­எஸ்­என் ஆகிய இரு­க­டை­களும் நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்ட பொருள்­களை விற்­பனை செய்­கின்­றன.

சுகா­தா­ரத்­தைப் பேண, அனைத்­துப் பொருள்­களும் முத­லில் தர­ஆய்வு செய்­யப்­பட்டு, சுத்­தி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்­களும் அவற்­றைச் சுத்­தம் செய்­து­விட்டு பயன்­ப­டுத்­து­ம்படி கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.

வாழ்வை மாற்றிய பயணம்

நீடித்த நிலைத்­தன்­மை­யான வாழ்க்கைமுறை­யைப் பின்­பற்ற வேண்­டும் என்று கூறும் அதே நேரத்­தில் லாபத்­திற்­குப் பொருள்­கள் விற்­கும் கடை­க­ளுக்கு மத்­தி­யில் அர­பு ஸ்திரீட் வட்­டா­ரத்­தில் இரண்டு கிளை­கள் கொண்­டி­ருக்­கும் 'ஃபங்­ஷன் ஃபைவ் (Function Five)' என்ற மலி­வு­விலைக் கடை­யில் மலி­வான விலை­களில் ஆடை­களை விற்று சிக்­கன உணர்வைப் பேணு­கின்­றது.

அரபு ஸ்தி­ரீட்­டில் லாப நோக்­கத்­து­டன் செயல்­படும் கடை­களுக்கு இடையே, மலி­வு­வி­லை­யில் பொருள்­களை விற்று, சிக்­கன உணர்­வைப் பேணி வரு­கின்­றது 'ஃபங்­ஷன் ஃபைவ்'.

கணினி விசைப்­ப­ல­கை­யில் பக்­கத்­தைப் புதுப்­பிக்க F5 விசை பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் இந்தக்­ கடைக்கு 'ஃபங்­ஷன் ஃபைவ்' எனப் பெயர் சூட்­டப்­பட்­டது.

இரு கிளை­க­ளைக் கொண்ட இக்­க­டை­யில் $2 முதல் $25 வரை­யில் ஆடை­கள் வாங்­க­லாம். சில வேளை­களில் இல­வ­ச­மா­க­வும் ஆடை­கள் வழங்­கப்­ப­டு­வ­துண்டு. XXS முதல் 4XL வரை எனப் பல அள­வு­க­ளி­லும் இங்கு ஆடை­கள் விற்­கப்­ப­டு­கின்­றன.

இப்­போது 27 வய­தா­கும் ஹஃபீஸ் ஆரி­ஃபும் யாசித் சதாலி­யும் சேர்ந்து, தேவைப்­ப­டாத ஆடை­க­ளுக்­குப் புத்­து­யிர் அளிக்­கும் நோக்­கில் இக்­க­டை­யைத் தொடங்­கி­னர்.

சிறு­வ­யது முதல் நண்­பர்­க­ளாக இருந்­து­வ­ரும் ஆரி­ஃபும் சதா­லி­யும் தங்­க­ளது 17 வய­தில் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது மலே­சியா சென்­ற­னர். அப்­போது, பயன்­ப­டுத்­தப்­பட்ட பொருள்­க­ளுக்­கான தொழில்­துறை அங்கு எவ்­வ­ளவு பெரி­தாக இருக்­கிறது என்­ப­தைக் கண்டு வியந்­த­னர். அப்­போது முதல் அவர்­களும் தங்­க­ளது வாழ்க்­கை­மு­றையை மாற்­றி­ய­மைத்­துக்­கொண்­ட­னர்.

சில ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு விநி­யோ­கிப்­பா­ளர்­களை நாடி துணித் தொழிற்­சா­லை­க­ளைப் பார்­வை­யிட்ட அவர்­கள், சிக்­க­ன­மாக இருப்­ப­து­தான் குப்­பை­க­ளை நிலத்தை நிரப்­பு­வ­தில் இருந்து ஆடை­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­கான வழி என்­பதை உணர்ந்­த­னர்.

50 கிலோ முதல் 100 கிலோ பொதி­க­ளாக பழைய ஆடை­களை வாங்­கு­கிறது ஃபங்­ஷன் ஃபைவ். இதற்­காக ஆரி­ஃபும் சதா­லி­யும் இரண்டு, மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மலே­சியா, தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ், கம்­போ­டியா ஆகிய நாடு­க­ளுக்­குச் செல்­கின்­ற­னர்.

சுற்றுச்சூழல் காக்க மானியம்

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உதவ மக்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் அர­சாங்­கம் பல மானி­யங்­களை வழங்கி வரு­கிறது. இந்த ஆண்­டிற்­கான எஸ்ஜி சுற்­றுச்­சூ­ழல் நிதி மானி­யம், 'ரெனியூ எர்த் ஸ்வெட் ஷாப்' எனும் சமூக, பங்­கேற்­புக் கலைத் திட்­டத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

'ஸ்வெட்­ஷாப்' என்­பது, குறைந்த ஊதி­யத்­திற்கு மோச­மான சூழ­லில் நீண்ட நேரம் பணி­பு­ரி­யும் துணி ஆலை­கள் போன்ற தொழிற்­சா­லை­கள் அல்­லது பட்­ட­றை­க­ளைக் குறிக்­கிறது.

'ரெனியூ எர்த் ஸ்வெட் ஷாப்' திட்­ட­மா­னது, உல­க­ளா­விய நவ­நா­க­ரி­கத் துறை­யின் வேலை­யி­டச் சூழல்­கள் குறித்­தும் அத்­துறை சுற்­று­சூ­ழல்­மீது ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் குறித்­தும் எதிர்­வி­னை­யாற்றி வரு­கிறது. இவ்­வாண்டு 500 கிலோ ஆடை அலங்காரப் பொருள் கழிவு­களை மறு­சு­ழற்சி செய்­வதை இத்­திட்­டம் இலக்­கா­கக் கொண்­டு உள்­ளது.

தேவைக்­கு­மேல் பொருள்­களை வாங்­கிக் குவித்து, இயற்கை வளங்­களை அள­விற்­க­தி­க­மாய்ச் சுரண்­டா­மல், எதிர்­கா­லத் தலை­மு­றை­களுக்­கும் அவற்றை விட்­டுச்­செல்ல வேண்­டி­யது மனித குலத்­தின் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில், இவ்­வாண்டு மறு­ப­ய­னீட்டு விகி­தத்தை உயர்த்த அர­சாங்­கம் எடுத்துவரும் முயற்­சி­களுக்கு நாமும் கைகொடுப்­போம்.

அள­வான பயன்­பாடே நம் பண்­பா­டாக மாறட்­டும்!

சிக்கனமாகச் செலவிட சில உதவிக்குறிப்புகள்

எப்பொழுதும் ஒருவரின் நிதிநிலைக்கு ஏற்ப, அதிலும் அவர் திட்டமிட்டதற்கு மேலாகச் செல்லாதவாறு விலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தனிப்பட்ட தேவைகளுக்கான பொருள்களின் விலை மலிவாக இருந்தால் ஆர்வத்தில் தேவைக்கு மிஞ்சி வாங்கிக் குவிக்கக்கூடாது.

கட்டண முகப்பிற்குச் சென்றபின் விழித்துக்கொள்ளாமல், எத்தனை பொருள்கள் வாங்கி உள்ளோம் என்பதையும் அவற்றின் விலை நாம் திட்டமிட்ட தொகைக்குள் உள்ளதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

பயன்படுத்திய ஆடைகளை வாங்கினாலும், அவை ஒருவர் எதிர்பார்க்கும் தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். விலை மலிவாக இருந்தாலும் தரம் குறைந்த பொருள்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

மலிவுவிலைக் கடைகள் விற்ற பொருள்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வது இல்லை என்பதால் பணம் செலுத்தும் முன்னரே ஒருவர் வாங்கிய பொருள்களில் ஏதேனும் குறைகள் உள்ளனவா என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

பழைய ஆடைகளைத் தூக்கி எறியுமுன் அவற்றை நன்கொடையாக அளிக்கவும் மறுவிற்பனை செய்யவும் https://www.nea.gov.sg/our-services/waste-management/donation-resale-and-repair-channels என்ற இணையப் பக்கத்தில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆலோசனையை நாடலாம்.

ஆடை நன்கொடைக்கான வழிமுறைகள்

1. பழைய ஆடைகளை பெற்றுக் கொள்வார்களா என்பதை சம்பந்தப்பட்ட மலிவுவிலைக் கடை அல்லது நன்கொடை நிலையத்தை முன்கூட்டியே தொடர்புகொண்டு, விவரம் அறிந்து கொள்ளுங்கள்.

2. உங்களது ஆடைகளைக் கையாள்வோரிடம் கவனமாக இருங்கள். அந்த ஆடைகள் தூய்மையாகவும் அணியத்தக்க நிலையிலும் இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.

3. அவற்றை நேர்த்தியாக மடித்து, பையில் வைத்துவிடுங்கள்.

4. உரிய இடத்தில் அவற்றை விட்டுச் செல்லுங்கள்.

தகவல்: https://pride.kindness.sg