குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்கவேண்டிய அவசரம் பாதுகாப்பு விதிமுறைகளை எளிதாக மீறத்தூண்டும். நமக்கு நடந்துவிடாது என்னும் குருட்டு தைரியம் அதற்குத் துணை நிற்கும். சில வெளிநாட்டு ஊழியர்களின் ஊரிலுள்ள குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், போதுமான ஓய்வின்மை, புகையிலை, மது போன்ற கெட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருக்கலாம். சில கட்டுமான-குத்தகை நிறுவன மேலதிகாரிகள், பொறுப்பாளர்களின் மேம்போக்கான வேலையிடப் பாதுகாப்பு அணுகுமுறையும்கூட காரணமாகலாம். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பணியிடங்களுக்கு மாறிச் செல்லும்போது பணி
யிடத்தளங்களின் சரியானப் புரிதலின்மையின் வேறுபாடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய காரணிகளில் ஒன்று.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் கட்டுமானப்
பொறியாளராகப் பணிபுரியும் நெப்போலியன்
இருவர் சேர்ந்து செய்யக்கூடிய வேலைகளை ஒருவரே தனியாகச் செய்வதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஏணிகளில் ஊழியர்கள் ஏறும்போது கீழிருந்து ஏணியை நிலையாகப் பிடித்திருக்க ஊழியர் அனுப்பப்படுவதில்லை. விபத்தைக் குறைக்க ஆட்பலத்தை அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரி பொறுப்பையும் மேற்பார்வையாளர் பொறுப்பையும் ஒரே ஊழியர் மேற்கொள்வதால் கட்டுமான வேலைகள் துரிதமாக நடைபெறுவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் பாதுகாப்பு முறை களில் ஏற்படும் குறைபாடுகளில் கவனம் செலுத்த தவறி விடுகிறார்கள்.
ஏழாண்டுகள் கட்டுமானத்தளத்தில்
பணியாற்றும் பிரபாகரன், 30.
கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட தாமதத்தால் கட்டுமான வேலைகள் வேகமெடுத்திருப்பதும் அதிக உழைப்பால் ஏற்படும் சோர்வும் விபத்துகளுக்கும் மரணங்களுக்கும் காரணமாக இருக்கலாம். பாதுகாப்பு விதிகளை முறையோடு பின்பற்றினால் வேலையிட பாதுகாப்பற்ற நிலை குறையலாம்.
முப்பது ஆண்டுகளாக கட்டுமானத் துறையில்
பணிபுரியும் சீனிவாசன் திருச்செல்வம், 58.

