பிரிட்டனின் அரியணையை 70 ஆண்டு காலம் அலங்கரித்த 2ஆம் எலிசபெத் அரசியாரின் மறைவை அடுத்து அவருடைய மூத்த புதல்வர் மூன்றாம் சார்ல்ஸ் அரசராகப் பதவி ஏற்றுள்ளார்.
மூன்றாம் சார்ல்ஸின் இரண்டாவது மனைவியான கமிலா அரசியாக பொறுப்பேற்கிறார்.
அரசராகும் சார்ல்ஸ் தனது மூத்த மகன் வில்லியம்மை வேல்ஸ் இளவரசராக்கினார். வில்லியமின் மனைவி கேத்தரின் (கேத் மிடில்டன்) இளவரசியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அரசர் சார்ல்ஸ்க்கு பிறகு வில்லியம், 40, அடுத்த அரசராகப்பதவி ஏற்பார் என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இளவரசர் வில்லியமுக்கு இரு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்கள் இனிமேல் இளவரசர் ஜார்ஜ், 9, என்றும் இளவரசி சார்லட், 7, இளவரசர் லூயிஸ், 4, என்றும் அழைக்கப்படுவார்கள்.
அரசரின் இளைய மகனான ஹேரி அவரது மனைவி மேகன் இருவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இவர்கள் அரச குடும்பத்தில் இருந்து விலகிவிட்டனர்.
பிரிட்டிஷ் அரசியாக ஆக அதிக காலம் சேவையாற்றியவர் இரண்டாம் எலிசபெத் அரசியார் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. இவர் 96 வயதில் இம்மாதம் 8ஆம் தேதி காலமானதை அடுத்து பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த முடிவு மூன்றாம் சார்ஸ்ஸ் அரசரின் ஆட்சிக்காலத் தொடக்கத்திற்கு வழிவகுத்து இருக்கிறது.
அடுத்த வாரிசு தொடர்பில் இரண்டாம் எலிசபெத் அரசியார் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் அந்தக் கடிதம் வெளியிடப்பட்டது.
தனக்குப் பிறகு மூன்றாம் சார்ல்ஸ் பிரிட்டிஷ் அரசராக அரியணை ஏறும்போது அவரின் மனைவியான தனது மருமகள் கமிலா அரசியாக பட்டம் சூடுவார் என்று அந்தக் கடிதத்தில் இரண்டாம் எலிசபெத் உறுதியாகக் குறிப்பிட்டு இருந்தார்.
அந்தக் கடிதம் அரச குடும்பத்தில் அடுத்த வாரிசாக யார் பொறுப்பேற்பார்கள் என்று நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்த ஒரு பிரச்சினையை முடிவு செய்து மூன்றாம் சார்ல்ஸ் அடுத்த அரச ராக முடிசூட வழிவகுத்தது.