மாணவர் சமூகத்தை மதிப்பெண் நோக்கிய பயணத்திலிருந்து மீட்டு மொழி ஆர்வத்தை இயல்பாகத் தூண்டச் செய்வது ஓர் ஆசிரியரின் கடமையெனக் கருதி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார் திருமதி ஹேமலதா ராசராசன், 53.
இன்றைய தகவல் தொழில்நுட்ப சூழலில் மாணவர்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தகுந்தாற்போல் ஆசிரியர்கள் மாறிக்கொள்வது அவசியம் என்கிறார் இவர்.
"இன்றைய மாணவர்கள் மின்னிலக்கமய (டிஜிட்டல்) மாணவர்கள். அவர்களுக்குப் பிடித்தாற்போல் இயன்ற அளவு பாடங்களை தொழில்நுட்பங்களுடன் இணைத்து நடத்துவேன். மாணவர்களுக்காக கல்வி அமைச்சின் பல்வேறு செயலிகளும் இணையத்தில் நூற்றுக்கணக்கான செயலிகளும் உள்ளன. இவற்றையெல்லாம் நான் முதலில் கற்றுத் தேர்ந்ததால் மட்டுமே இன்றைய நவீன மாணவர்களுடன் என்னால் இணைய முடிகிறது," என்று கூறினார் தொடக்கக் கல்லூரி/ புகுமுகக் கல்வி நிலையப் பிரிவில் விருதுபெற்ற திருமதி ஹேமலதா.
இதனை வலியுறுத்தும் விதமாக தகவல்தொடர்புத் தொழில்நுட்ப தமிழ் விழாவில் (ICT Tamil Feast 2021) கலந்துகொண்ட இவர், தொழில்நுட்பத்தின்வழி் கற்றல், கற்பித்தலை ஒருங்கிணைத்தல் பற்றி கட்டுரை படைத்துள்ளார். மேலும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் பங்கேற்று, சிறுகதை, கற்றல் கற்பித்தலில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு (Padlet ICT tool) குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கற்றல், கற்பித்தல் வழிமுறைகள் சூழலுக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாணவர்களை அவர்களுக்குப் பிடித்தவாறு இன்னும் வேறு எப்படியெல்லாம் கையாளலாம் என்று இவர் சக ஆசிரியர்களுடன் கலந்தாலோசிப்பார். இதன் மூலம் தானும் கற்று, பிற ஆசிரியருக்கும் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிடைப்பதாக இவர் கூறினார். இதனை வலியுறுத்தும் விதமாக கல்வி அமைச்சின் இருவழித்தொடர்புத்தளத்தின் (MOE_iMTL portal) மூலம் கடந்த 2018-19, 2019-20 ஆண்டுகளில் கற்றல், கற்பித்தல் பகிர்வுகளை தேசிய அளவில் சக தொடக்கக் கல்லூரி ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தன்னுடைய 35வது வயதில் கணவர் அளித்த ஊக்கத்தால் அன்றைய 'சிம்' பல்கலைக்கழகத்தில் பகுதிநேரமாக தமிழ்மொழி பட்டக்கல்வி படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சிறந்த மாணவர்களுக்கான வெள்ளிப் பதக்கத்தை திருமதி ஹேமலதா பெற்றார்.
திருமணத்திற்குப் பின் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இவர், தமது இரு பிள்ளைகளுக்கும் வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்ததன் மூலமே சிங்கப்பூரின் கற்றல், கற்பித்தல் அணுகுமுறையை கற்றுக்கொண்டதாகக் கூறினார். மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் எந்த ஒரு சொல்லையும் சொல்லிவிடக் கூடாது என்பதில்
கூடுதல் கவனமாக இருக்கும் இவர், படிப்பு முடிந்து மாணவர்கள் விடைபெறும்போது எழுதிக்கொடுக்கும் பிரியாவிடைக் கடிதங்களே தான் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் விருதுகள் என்று கூறினார்.

