விழாக்கோலம் பூணத் தயாராகும் இல்லங்கள்

விழாக்கோலம் பூணத் தயாராகும் இல்லங்கள்

3 mins read
8a3f9298-a4d9-4062-be76-d3087eef8d58
லிட்டில் இந்தியாவின் பிர்ச் சாலையில் அமைந்திருக்கும் தீபாவளிச் சந்தையில் குவிக்கப்பட்டுள்ள பொருள்கள். படங்கள்: திமத்தி டேவிட்பொருளைத் தொட்டுப் பார்த்து, கடைக்காரருடன் பேரம் பேசி வாங்கினால்தான் மனநிறைவு அடைவதாகச் சிலர் கூறினர். -
multi-img1 of 8

மோனலிசா

தீபாவளி என்றாலே விதவிதமான அலங்காரங்களுடன் வீடெல்லாம் புதுப் பொலிவு காணத் தொடங்கிவிடும். அதற்கேற்ப, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லிட்டில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளிச் சந்தையில் அலங்காரப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன.

ஈராண்­டு­க­ளுக்­குப்­பின் நண்­பர்­கள், உற­வி­னர்­க­ளுடன் தீபா­வளி கொண்­டா­டத் தயா­ரா­கும் மக்­கள், வீட்டை அலங்­க­ரிப்­ப­தில் உற்­சா­க­மாக ஈடு­ப­டத் தொடங்கியிருப்­பர். அவர்­க­ளுக்­கென சிக்­க­ன­மா­க­வும் சிறப்­பா­க­வும் வீட்டை அலங்­க­ரிக்க ஏரா­ள­மான பொருள்­கள் லிட்­டில் இந்­தியா தீபா­வ­ளிச் சந்­தை­யில் விற்கப்படுகின்றன.

வண்ண அகல் விளக்­கு­கள், தரை­யி­லும் சுவ­ரி­லும் ஒட்­டப்­படும் கோலங்­கள், ஆளு­ய­ரத் தோர­ணங்­கள், மாலை­கள், பொன்­னி­றப் பூச்­சா­டி­கள், கற்­கள் பதித்த அலங்­காரத் தட்­டு­கள், பூசையறைப் பொருள்­கள் ஆகி­யவை கடை­கள் எங்கும் பளிச்சிடுகின்றன. பூ வேலைப்பா­டு­டன் கூடிய தலை­யணை­கள், தலை­யணை உறை­கள், வீட்­டு முகப்பை அலங்­க­ரிக்­கும் வண்ண விரிப்­பு­கள், தனித்­துவ அச்­சு­க­ளு­டைய பிரம்­மாண்ட தரை­வி­ரிப்­பு­கள் என வழக்­க­மான பொருள்­களும் குவிந்­துள்­ளன.

கடந்த 25 ஆண்­டு­க­ளாக தீபா­வளிச் சந்­தை­யில் அலங்­கா­ரப் பொருள்­ கடை வைத்து நடத்தி வரும் எஸ்.கே. டிரே­டிங்ஸ் இணை நிறு­வ­ன­ரான கலை­ய­ரசி மாரி­முத்து, 58, இவ்­வாண்டு வாச­லில் கட்­டும் தோர­ணங்­கள், அன்­ப­ளிப்பு உறை­கள், ஒளி­பு­கும் வண்ண விளக்­கு­கள், கட­வுள் சிலை­க­ளுக்­கான உடை­கள் போன்­றவை அதிக அள­வில் விற்­ப­னை­யாகி வரு­வ­தாகக் கூறி­னார். மேலும், தாம­ரைப் பூ வடி­வி­லுள்ள சுவர் அலங்­கா­ரங்­களுக்­கும் 'தீபா­வளி வாழ்த்து' சுவ­ரொட்­டி­க­ளுக்­கும் பொது­மக்­களி­டம் அதிக வர­வேற்பு இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

கேம்­பல் லேன் தீபா­வ­ளிச் சந்தை இவ்­வாண்டு இல்­லா­த­போதும் அச்­சா­லை­யில் உள்ள கடை­க­ளின் முகப்பு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டு தீபா­வ­ளிச் சிறப்­பாக மயில் உரு­வம் பொதிந்த வண்­ணச் சுவர் கடி­கா­ரங்­கள், விளக்­கு­கள், சுவ­ரொட்­டி­கள், தோர­ணங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு புதிய பொருள்­கள் அங்கு குவிந்­துள்­ளன.

பொருள்­க­ளின் விலை­யேற்­றம் கவலை தந்தாலும் ஈராண்­டு­களுக்­குப்பின் தீபா­வளி கொண்­டா­டு­வதால், மக்­கள் பொருள்­களை வாங்­கிச் செல்கின்றனர் என்­றார் 'ஜெய­ராம் கிரி­யே­ஷன்ஸ்' உரி­மை­யா­ளர் திரு டேவிட் செல்வா ராஜு, 56. கடந்த ஆண்டு­களில் 40 வெள்­ளிக்கு விற்­று­வந்த பிரம்­மாண்ட மாலை இவ்­வாண்டு 50 வெள்­ளிக்கு விற்­கப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

முதன்­மு­றை­யாக தீபா­வளிச் சந்­தை­யில் பல­கா­ரக் கடை வைத்­து இ­ருக்­கும் 'தி ராயல் துள்சி' மற்­றும் 'குவீன் ஆஃப் டார்ட்ஸ்' கடை­களின் உரி­மை­யா­ளர் திரு­வாட்டி சப்னா, 43 இணை­ய­வழி வாடிக்­கை­யா­ளர்­களை நேரில் வந்து வாங்க ஊக்­கு­விக்­கி­றார். வார இறு­தி­யில் விற்­பனை அதி­க­மாக உள்­ளது என்ற அவர், வீட்­டில் செய்­யப்­படும் பல­கா­ரங்­க­ளுக்­குத் தேவை அதி­கம் என்­றார்.

கடந்த இரண்டாண்­டு­க­ளா­கப் போக்கு­வ­ரத்­துக் கட்­டுப்­பா­டு­க­ளால் மக்­கள் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல முடி­யா­த­தால் இங்­கேயே பொருள்­களை வாங்­கி­னர் என்­றும் இருப்­பில் இருந்­தவை அனைத்­தும் விற்றுத் தீர்ந்­தன என்­றும் கூறிய 'மஹிஷா கலெக்­ஷன்ஸ்' உரி­மை­யா­ளர் இளங்கோ முரு­கை­யன், 50, இவ்­வாண்டு விற்­பனை இன்­னும் சூடு­பி­டிக்­க­வில்லை என்றார்.

'கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதில்தான் மனநிறைவு'

இணை­யப் பயன்­பாடு அதி­க­ரிப்பு, கொவிட்-19 காலப் பழக்­கம் போன்­றவை கார­ண­மாக பெரும்­பா­லும் இணை­யம் வழி­யா­கப் பொருள்­கள் வாங்­கி­னா­லும் தீபா­வளி பண்­டி­கைக்­குச் சந்­தை­யில் நேரில் பொருள்­க­ளைப் பார்த்­துப் பார்த்­துத் தேர்ந்­தெ­டுத்து, பேரம் பேசி வாங்­கு­வதே இல்­லத்­த­ர­சி­யான 71 வயது ஸ்ரீ ஞானம் சோலை­ம­லைக்கு மன­நி­றைவு அளிக்­கிறது.

அவ­ரைப்­போல பல­ரும் தீபா­வளித் திருநாளுக்குப் பொருள் வாங்­க­வென்றே லிட்­டில் இந்­தி­யா­வுக்கு குடும்­பத்­தோ­டும் நண்­பர்­க­ளோ­டும் வரு­கி­றார்­கள்.

"இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தீபா­வ­ளிச் சந்­தைக்கு வரு­வதே மகிழ்ச்­சி­யான அனு­ப­வ­மாக இருக்­கிறது. என்­னு­டைய இரு மகள்­களும் புதிய ஆடை­களை வாங்­கி­யும் பல­கா­ரங்­க­ளைச் சுவைத்­தும் மகிழ்ச்­சி­யு­டன் நேரத்­தைச் செல­விட்­ட­னர். அடுத்த வாரத்­திற்­குள் மீண்­டும் ஒரு­முறை அழைத்து வர­வேண்­டும் என்­றும் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்" என்று கூறி­னார் தனி­யார் நிறு­வனம் ஒன்­றில் மேலா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி பூஜா தன­சே­கர், 42.

"தீபா­வ­ளிக்கு முதல்­நாள், சந்­தை­யில் உள்ள மரு­தா­ணிக் கூடங்­களில் கை முழு­வ­தும் மரு­தா­ணி­யிட்டு, கைகளை நீட்­டி­ய­வாறே பேருந்­தில் பய­ணம் செய்­வதே என்­னு­டைய மனத்­திற்கு நெருக்­க­மான தீபா­வளி நினை­வு­கள். இவ்­வாண்­டின் மரு­தா­ணிக் கூடங்­க­ளை­யும் அதன் வடி­வ­மைப்­பு­க­ளை­யும் முன்­கூட்­டியே காண வந்­தேன். சந்தை இருக்­கும் ஒரு மாத கால­மும் அடிக்­கடி நண்­பர்­க­ளு­டன் வந்­து­போ­வதே மகிழ்ச்­சி­யான அனு­ப­வம்," என்று சொன்­னார் தொடக்­கக் கல்­லூரி மாண­வி­யான சரிதா கணே­சன், 18.

பல­கா­ரக் கடை­கள், ஆடைக் கடை­க­ளு­டன் புத்­தா­டை­க­ளுக்­குப் பொருத்­த­மான பாரம்­ப­ரியக் கால­ணி­கள் விற்­கும் கடை­களும் மரு­தா­ணிக் கூடங்­களும் அமைந்­துள்­ளன. புதிய உண­வு­வ­கை­களும் சந்­தை­யில் விற்­கப்­ப­டு­கின்­றன. பானி­பூரி விற்­ப­னை­ய­கங்­கள் மக்­க­ளி­டம் மிகுந்த வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன.