ஒவ்வோர் ஆண்டும் தம் குடும்பத்தாருக்கு செட்டிநாடு கோழி, புதினா கோழி, மீன் கட்லெட், இறைச்சி தால்ச்சா என விதவிதமாக தீபாவளி விருந்து சமைக்கிறார் 55 வயது வளர்மதி சோமு.
பிரியாணி தயாரிக்கும்போது, 15 பேருக்கு சமைக்க வேண்டுமானால் 12 பேர் உண்ணும் அளவான மூன்றரை குவளை அரிசியை பயன்படுத்தினாலே போதும் என்றார் அவர்.
விருந்தாளிகள் பிரியாணி சோற்றைவிட மற்ற உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவதை கவனித்துள்ளதால் இவ்வாறு அரிசியின் அளவைக் குறைத்து சமைப்பது அவருக்கு நல்ல உத்தியாகப் படுகின்றது.
"பல உணவு வகைகளைச் சமைத்தாலும், உணவு மீதமிருந்தால் அதனை என் சகோதரர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் கட்டிக் கொடுத்துவிடுவேன்," என்றார் அவர்.
பெலிலியோஸ் லேனில் அவர் தம் கணவரின் அலுவலகம் இருப்பதால், அருகிலுள்ள முடிதிருத்தகத்தில் பணிபுரியும் மலேசிய இந்தியர்களுக்கு தமது வீட்டில் சமைத்த உணவைக் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் திருவாட்டி வளர்மதி.
தீபாவளிக்கு முன்னதாகவே, தம் விருந்தாளிகளிடம் அவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளைத் தெரிந்துகொள்வார் 36 வயது அர்ச்சனா ரெங்கசாமி. இதன்மூலம் விருந்தினர்களுக்கு விருப்பமில்லாத உணவை சமைப்பதைத் தவிர்ப்பதோடு உணவு விரயம் ஆவதையும் தவிர்க்கிறார் அவர்.
"பிள்ளைகள், பெரியவர்களைவிட நிச்சயம் குறைவாகவே சாப்பிடுவார்கள். சின்னதாக சப்பாத்தி செய்யும்போது பிள்ளைகள் சாப்பிட்டு முடிக்கிறார்கள். சப்பாத்தி மாவும் வீணாகாது," என்றார் அவர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இம்மாதிரியான சிறு வழிமுறைகளை பின்பற்றுவதால் அர்ச்சனாவின் இல்லத்தில் தீபாவளியன்று உணவு விரயம் ஆவது அரிது.
"கொஞ்சம்தானே வீசுகிறோம் என்று ஒவ்வொரும் நினைக்கலாம். ஆனால், இப்படி எல்லாரும் வீசுவதைச் சேர்க்கும்போது அது ஒரு பெரிய மலையாக இருக்கும்," என்றார் அர்ச்சனா.
'கம்போங் காக்கிஸ்' தொண்டூழிய சமூகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொண்டூழியம் புரிந்துவரும் அர்ச்சனா, தனியாக வாழும் முதியோருக்கு வாரட்தோறும் காய்கறி, பழங்கள், சமைப்பதற்கான பொருள்களை புக்கிட் பாஞ்சாங் சந்தையிலிருந்து சேகரித்துக் கொடுப்பார்.
உண்ணக்கூடிய நிலையில் இருக்கும் இப்பொருள்களை வீணாக்குவதற்குப் பதிலாக தேவைப்படுவோருக்குத் தருவது அவர்களுக்கு பேருதவியாக அமைகின்றது என இவர் நம்புகிறார்.
சமைப்பது வீணாகாமல் இருக்க இவர்கள் கூறும் வழிமுறைகள்:
அளந்து சமைப்பதும் எப்படி, எந்த வழியில் உணவு வீணாகிறது என்பதை ஆராய்வதும் வீணாவதைத் தவிர்க்க உதவும்.
கடையில் பலருக்கு உணவு வாங்கும்போது, பொதுவாக சற்று கூடுதலாகவே கொடுப்பார்கள். விருந்துக்கு 20 பேர் வருவதாக இருந்தால், 16 - 17 பேருக்கு வாங்கினால் போதுமானது.
வாங்குவதனால் குறிப்பிட்ட உணவு வகைகளையும் சமைப்ப தானால் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்கலாம்.
உணவைப் பரிமாறும்போது, சாப்பிடுபவர் போதும் அல்லது வேண்டாம் என்றால் வற்புறுத்தக் கூடாது. அல்லது, விருந்தாளிகளே தாமே பரிமாறிக்கொள்ளும் வகையில் ஏற்பாட்டைச் செய்யலாம். இதனால் உணவு வீணாவ வதைத் தவிர்க்கலாம். மீதமிருக்கும் உணவு வகைகளை வீட்டுக்கு வருவோருக்கு கட்டிக்கொடுக்கலாம்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடக்கூடிய உணவுகளாக வாங்குவது மற்றொரு வழி.
தீபாவளி கொண்டாட்ட உணர்வை மற்ற இனத்தவருடன் பகிர்வதற்கு இந்திய உணவை விரும்பிச் சாப்பிடும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் உணவளிக்கலாம். இது அண்டைவீட்டாரிடையே நல்லுறவை மேலும் வளர்க்கும். அதேபோல் இந்திய உணவை உண்ணும் வெளிநாட்டு ஊழியர்களுடனும் பகிரலாம்.
மீந்துவிட்ட அரிசி, எண்ணெய், மாவு, சீனி, காய்கறி போன்ற மூலப்பொருட்களை ஃபுட்பேங்க். ஃபுட் ரெஸ்கியூ எஸ்ஜி போன்ற அமைப்புகளுக்கு கொடுக்கலாம். இத்தகைய அமைப்புகளுக்கு சமைத்த உணவைக் கொடுக்க முடியாது. மேலும், விரைவில் வீணாகிவிடும் உணவையும் கொடுக்கமுடியாது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரின் மொத்தக் கழிவில் 12% உணவுக் கழிவாக உள்ளது. உணவு விரயம் 2020ஆம் ஆண்டில் 665,000 டன். 2021ஆம் ஆண்டில் இது 817,000 டன்னாக அதிகரித்தது. 2021ஆம் ஆண்டில் கொவிட்-19 கிருமித் தொற்று குறைந்து, பொருளியல் மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்தது இதற்கு ஒரு காரணம்.
உணவு விரயம் கூடிக்கொண்டே போகும்போது, நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூர், அதனைக் கையாள பெரும் சவால்களை எதிர்நோக்கு கிறது. முக்கியமாக கழிவை அகற்றுவதற்கும் அக்கழிவை மறுபயனீடு செய்வதற்கும் இடம் தேவை. சிறிய தீவான சிங்கப்பூரில் இது மிகப்பெரிய பிரச்சினை.
உணவு விரயத்தினால், உணவுப் பொருள்களை தயாரிப்பதற்கும் விநியோகம் செய்வதற்கும் உபயோகிக்கப்படும் வளங்கள் வீணாகின்றன. இது, கரிம வெளியீட்டை அதிகரிப்பதுடன் உலக வெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது. வளங்களைப் பாதுகாக்க, உணவு விரயத்தை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும்.