தாவர உணவில் கோழி இறைச்சியின் சுவையைக் கொண்டுவருவதில் வெற்றிபெற்றுள்ளது 'ஷாண்டி குளோபல்' எனும் உள்ளூர் நிறுவனம். உணவு ஆராய்ச்சியாளர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், சிங்கப்பூரின் ஆகப் பெரிய தாவர அடிப்படையிலான கோழி இறைச்சி உற்பத்தியாளர் என்ற பெருமை உடையது.
ஆரோக்கியத்தையும் நீடித்த நிலைத்தன்மையும் முன்னிலைப்படுத்துகிறது 'ஷாண்டி குளோபல்' நிறுவனம்.
உலகின் முதல் தாவர அடிப்படையிலான கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் சிறப்பு இதனைச் சாரும்.
சைவ, நனிசைவ, சமண உணவு ஆகிய உணவுமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இறைச்சிக்கு சிறந்த மாற்று உணவாக இது கருதப்படுகிறது.
அதிக புரதச்சத்து கொண்டுள்ள பட்டாணி, சுண்டல், குயினோவா, ஆளி விதைகள், பழுப்பு அரிசி, தேங்காய் எண்ணெய் ஆகிய மூலப்பொருள்களைப் பயன்படுத்தி இந்த வகை இறைச்சி செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
சமைத்த பின்னர், உண்மையான கோழி இறைச்சியிலிருந்து இதன் சுவையை வேறுபடுத்த முடியாது என்கின்றனர் இதனைச் சுவைத்தவர்கள்.
கோழி இறைச்சியைவிட இதில் சத்துகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த வகை இறைச்சியைப் பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் வழங்கப்படும் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும், அசைவ உணவைச் சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்குத் தேவையான புரதச்சத்து குறையாமல் காத்துக்கொள்ளவும் இது உதவும்.
இறைச்சி வகைகளை உண்ணும் பெரும்பான்மையோர் கோழி இறைச்சியை அதிகம் உட்கொள்கிறார்கள். வருங்காலத்தில், உணவுப் பஞ்சம் அல்லது பற்றாக்குறை ஏற்படுமேயானால், இதுபோன்ற தாவர இறைச்சி வகைகள் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள உதவும்.
'ஷாண்டி குளோபல்' தயாரிக்கும் தாவர கோழி இறைச்சி, உண்மையான கோழி இறைச்சியில் கிடைக்கும் அதே சுவையையும் அதைவிட அதிகமான நலன்களையும் பெற வகைசெய்கிறது.
அசைவ உணவுவகைகளைச் சாப்பிடாதவர்கள் உணவுமுறையில் பெரிய மாற்றங்கள் செய்யாமல் அந்த ருசியுடன் உணவைச் சுவைத்துப் பார்க்க இது வழிவகுக்கிறது.

