இந்திய உணவில் முக்கிய இடம்பெறும் மஞ்சளின் மருத்துவ குணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார், டேஷ் கணேசன், 30.
கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்திற்கு முன்பே இரைப்பைக் குடலழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் இவர். தாயாரின் ஆலோசனைப் படி, தேனை மஞ்சள் தூளில் கலந்து அன்றாடம் குடித்து வந்தார். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொண்டுவந்தாலும், அவர் உடலில் முன்னேற்றம் தென்படவில்லை.
சில காலம் மாத்திரைகளை நிறுத்திவிட்டு, வெறும் மஞ்சள் தூளையும் தேனையும் தண்ணீரில் கலந்து குடித்துபோது உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.
கணக்காளராகப் பணிபுரியும் இவர், அவ்வப்போது பணிநிமித்தம் அமெரிக்கா செல்வதுண்டு. அங்கு லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஒரு கஃபேயில் 'கோல்டன் லாட்டே' எனும் மஞ்சள் காப்பி விற்கப்படுவதைக் கண்ட இவர் வியப்புற்றார்.
2020ல் வீட்டிலிருந்தே வேலை பார்த்துக்கொண்டிருந்த கணேசன், 'டுர்மந்த்ரா' எனும் வீட்டு அடிப்படையிலான வர்த்தகத்தைத் தொடங்கினார்.
மஞ்சள், தேன் ஆகியவற்றையும் இஞ்சி, மஞ்சள், பட்டை, மிளகு ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்ட தூளையும் மஞ்சள் சவர்க்காரம், மஞ்சள் உதட்டுச் சாயம் போன்றவற்றையும் இதன்மூலம் விற்பனை செய்கிறார்.
"வீட்டில் மஞ்சள் தூளும் தேனும் இருந்தாலும், அன்றாடப் பரபரப்பில், அவற்றை உட்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. சிறிய போத்தல்களில் விற்பனையாகும் இவற்றை எளிதாக எடுத்து, தண்ணீரிலோ பாலிலோ கலந்து குடிக்கலாம்," என்கிறார் கணேசன்.
தன்னுடைய பொருள்களில் கலக்கப்படும் மஞ்சள் தூய்மையானது என்கிறார் இவர். இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்படும் மூலப்பொருள்கள் இயற்கைமுறையில் விளைந்தவை.
"குமட்டல், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சினையில் இருந்த நானும் என் கணவரும் இந்த மஞ்சள், தேனை தண்ணீரில் கலந்து அருந்திய பிறகு உடல்நிலை சீரானது," என்கிறார் வாடிக்கையாளர் துர்கா மனோகரன்.

