மருத்துவத் துறையில் தமிழகம் மகத்துவம் பெற இலக்கு

7 mins read
aa66c41b-8dc7-4a5b-9674-0984084fdaca
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளின் எழுத்துகளுடன் கூடிய 'ஆன்மா' சிற்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன். படம்: ஃபேஸ்புக்/மா.சுப்பிரமணியன் -
multi-img1 of 4

சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற ஏழாவது 'உலக ஒருங்கிணைந்த சுகாதார மாநாட்டில்' பங்கேற்பதற்காக இங்கு வந்திருந்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் முரசு நாளிதழுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார். 1990கள் முதலே சிங்கப்பூருக்குப் பலமுறை வருகைபுரிந்துள்ள இவர், தொடர்ந்து உருமாறிவரும் சிங்கப்பூர், சிங்கப்பூர் தமிழர்கள், தமிழ்மொழி, கலாசாரம், மருத்துவப் பராமரிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை எனப் பல அம்சங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

ஆ. விஷ்ணு வர்தினி

தானி­யக்க முறை­கள், நோய்ப்­ப­ர­வ­லைத் தடுக்­கும் பல்­வேறு வச­தி­கள், நவீன தொழில்­நுட்­பங்­கள் என மருத்­து­வத்­து­றை­யின் ஆற்­ற­லைப் பெருக்க சிங்­கப்­பூர் எடுத்­து­வ­ரும் தொடர் முயற்­சி­கள் - இவை­யெல்­லாம் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை­யைக் கடந்த வாரம் பார்­வை­யிட்ட தமி­ழக மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் மனத்­தில் நின்­றவை, தொடர்ந்து நிற்­பவை.

சிங்­கப்­பூ­ரின் அதி­ந­வீன மருத்­து­வத்­துறை, பார­பட்­ச­மற்ற முறை­யில் மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி செயல்­ப­டு­வ­தைப் பாராட்­டிய திரு மா.சுப்பிரமணியன், அனைத்து மக்­களும் இங்கு சம­மாக நடத்­தப்­படு­வதை நேரில் கண்டு மன­ம­கிழ்ந்­த­தாகத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் சுகாதாரத்துறை இயக்­கங்­க­ளைக் காண­வும், உல­கெங்­கி­லும் இருந்து மாநாட்­டிற்கு வந்­தி­ருந்த வல்லுநர்களின் கருத்து­களைக் கேட்­க­வும் இம்­முறை தமக்குக் கிடைத்த வாய்ப்­பு­கள், தமிழக மருத்­துவ அமைச்­சுக்­கென தமக்­கி­ருக்­கும் கன­வு­க­ளுக்கு ஊக்கம­ளிப்­ப­தாகத் தெரி­வித்­தார் அமைச்­சர்.

ஏழை எளி­யோ­ருக்­கான அமைச்­சாக திக­ழ­வேண்­டும் என்­பதே தமிழக மருத்­துவ அமைச்­சின் திண்­ண­மும் எண்­ண­மும் என்ற திரு மா.சுப்பிரமணியன், பல நாடு­களுக்­கும் முன்­மா­தி­ரி­யாகத் தமி­ழக மருத்­துவத் திட்­டங்­கள் இருப்­ப­தாகவும் குறிப்­பிட்­டார்.

"ஏழைகள் உட்­பட அனைத்து தமி­ழக மக்­களும் செலுத்­தும் வரி மருத்­து­வத்­து­றையை வளர்க்­கிறது. அவர்­கள் செலுத்­தும் ஒவ்­வொரு ரூபா­யும் மருத்­துவ உத­வி­யாக அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் சென்­ற­டைய வேண்­டும்," என்­றார் இவர்.

அத்­த­கைய பார்­வை­யு­டன், மருத்­துவ வச­தி­களை அணுக வாய்ப்­பில்­லா­தோ­ருக்கு உத­வு­கிறது, கடந்த ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட 'மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்' என்ற திட்­டம். இதன்­மூ­லம், ஏழை மக்­க­ளின் வீடு தேடிச் சென்று மருத்­து­வர்­க­ளை­யும் மருத்­துவ வசதி­க­ளை­யும் அமைத்­துத் தர முனைந்­துள்­ளது தமி­ழக அரசு.

தற்­போது பேர­ள­வில் நடப்­பிலுள்ள இந்­தத் திட்­டம், அயல்­நாடு­களின் சுகா­தா­ரத் துறை­யி­னர் மற்­றும் அர­சாங்க ஊழி­யர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளதாக திரு மா.சுப்பிரமணியன் கூறினார்.

"இது­வரை 9.5 மில்­லி­யன் பேர் இத்­திட்­டத்­தின் மூலம் பய­ன­டைந்­துள்­ள­னர். இவ்­வாண்­டுக்­குள் இந்த எண்­ணிக்கை பத்து மில்­லி­ய­னைத் தொடும். அது தமி­ழ­கத்­தின் வர­லாற்­றில் ஒரு மகத்­தான சாத­னை­யாக இருக்­கும்," என்றார் இவர்.

மற்­று­மொரு திட்­ட­மான 'இன்­னு­யிர் காப்­போம்' என்ற அவ­ச­ர­கால விபத்­து­த­வித் திட்­ட­மும் தமிழக அரசால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமி­ழக எல்­லை­க­ளுக்­குள் நிகழும் விபத்­து­களில் சிக்­கு­வோருக்கு, விபத்து நிகழ்ந்த முதல் 48 மணி­நே­ரத்­துக்கு அரசாங்கமே மருத்­துவ சிகிச்சை அளித்து உதவு­கிறது.

இத்­திட்­டம், உயி­ரைக் காப்­பாற்­று­வதை முன்­னி­லைப்­ப­டுத்­து­கிறது, அனை­வருக்­கும் பார­பட்­ச­மற்ற பரா­மரிப்­பைத் தர முற்­ப­டு­கிறது என்று இவர் கூறி­னார்.

இவ்­வி­ரண்டு திட்­டங்­க­ளை­யும் வெற்­றி­க­ர­மாக நடைமுறைப்படுத்தி நற்­பலன்­களை ஈட்­டி­யுள்ள தமிழ்­நாட்­டின் மருத்­துவ அமைச்சு, பிற நாடு­களுக்கு ஒரு முன்­மா­தி­ரி­யாக விளங்­கு­கிறது என்று பெருமையுடன் கூறினார் திரு மா.சுப்பிரமணியன்.

மருத்­துவ, மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­ச­ராக, அந்­தி­ம­கா­லப் பரா­ம­ரிப்பு, நீரி­ழிவு பாதிப்பு, வறுமை ஆகிய மூன்று அம்­சங்­களில் தமது கவ­னத்­தைச் செலுத்தி வரும் அதே­வே­ளை­யில், உல­கப் பட்­டி­னிக் குறி­யீட்­டில் இந்­தியா இவ்­வாண்டில் 107வது இடத்­துக்குத் ­தள்­ளப்­பட்டு, பின்தங்கியிருப்பதையும் ஒப்­புக்­கொண்­டார்.

"அதி­க­ரித்­து­வ­ரும் உண­வுப் பற்­றாக்­கு­றைச் சிக்­க­லைக் களை­வதற்கு, 'சிஎஸ்­ஆர்' எனப்­படும் நிறு­வனங்­க­ளின் சமூ­கப் பொறுப்பு நிதி­யைக் கொண்டு உணவு விடுதி­களி­லும் பொது நிகழ்­வு­க­ளி­லும் மிச்­ச­மா­கும் கைப்­ப­டாத உணவை, ஏழை மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கும் நீண்­ட­கா­லத் திட்­டம் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது.

"இதற்­குக் குறிப்­பிட்ட பகு­தி­களில் உள்ள லாப நோக்­க­மற்ற அமைப்­பு­க­ளு­டன் தமிழக அரசு இணை­வது சாத்­தி­ய­மா­க­லாம்," என்­றார் அமைச்­சர்.

மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்வு குறித்த முக்­கிய முடி­வு­களை எடுக்­கும்­போது, மருத்­து­வக்­கல்வி பின்­ன­ணியே இல்­லாத திரு மா. சுப்­பி­ர­மணி­யத்­துக்கு அது என்­றைக்­கும் ஒரு தடை­யாய் இருந்­த­தில்லை.

"மருத்­துவ உத­வி­களை நேர­டி­யா­கத் தரு­வ­தல்ல இப்­ப­ணி­யின் முக்­கி­யக் கூறு. நாம் மக்­க­ளுக்கு ஊசி போடவோ, ஏனைய மருத்­துவ சேவை­களை வழங்­கவோ போவ­தில்லை.

"இதற்­குச் சிறந்த நிர்­வா­கத்­திறன்­களே அவ­சி­யம். கடந்த பத்­தாண்­டு­க­ளாக மட்­டுமே மருத்­து­வத்­துறை பின்­னணி கொண்­டோர் அமைச்­சில் பத­வி­யேற்­றுள்­ள­னர். அதற்­கு­முன், மருத்­துவ அனு­ப­வ­மில்­லா­ம­லேயே மிகச் சிறப்­பாக தமி­ழ­கச் சுகா­தார சிக்­கல்­க­ளைக் கையாண்ட ஆற்­காடு வீரா­சாமி, எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் ஆகி­யோர் அதற்­குச் சிறந்த சான்­று­கள்," என்று இவர் குறிப்­பிட்­டார்.

வரும்போதெல்லாம் வாய்பிளக்க வைக்கும் வளர்ச்சி

வெகு­வே­க­மாக உரு­மா­றி­வ­ரும் சிங்­கப்­பூர், ஒவ்­வொருமுறை­ வ­ரும்­ பொழுதும் தமி­ழக அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யத்தை பிர­மிக்க வைக்­கத் தவ­றி­ய­தில்லை.

சென்னை மேய­ராக இருந்­த­போது 2009ஆம் ஆண்­டில் மு.க. ஸ்டா­லி­னு­டன் சிங்­கப்­பூர் ஆற்­றைக் காண வந்­தி­ருந்த இவர், அப்­போது கட்­டப்­பட்டு வந்த மரினா பே சேண்ட்ஸ் தற்­போது மாபெ­ரும் விடு­தி­யாக மாறி­விட்­ட­தை­யும், எதிரே பிரம்­மாண்­ட­மாய் கரை­யோரப் பூந்­தோட்­டங்­கள் எழுப்­பப்­பட்­டுள்­ள­தை­யும் கூறி வியந்­தார்.

தாம் பல­முறை கண்­டு­விட்ட செந்­தோ­சா­விற்கு மீண்­டும் செல்ல வேண்­டாம் என்று எண்­ணி­யி­ருந்த அமைச்­சரை மேலும் வியக்­க­வைக்­கும் வகை­யில் அங்கு புதிதாக இடம்­பெற்ற வச­தி­களும் அமைப்பு­களும் அமைந்­தி­ருந்­தன.

இது, சிங்­கப்­பூர் தொடர்ந்து தன்னை மேம்­ப­டுத்­தி­யும் நவீ­னப்­படுத்­தி­யும் வரு­வ­தைப் பறை­சாற்று­கிறது என்­றார் அவர்.

தான் தங்­கி­யி­ருந்த விடு­தி­யில்­இருந்து ஹார்­பர்­ஃபிரண்ட் துறை­மு­கம்வரை நெட்­டோட்­டம் ஓடிய அவ­ருக்கு, அத்­து­றை­மு­கம் இட­மா­றப்­போ­வ­தும் தெரி­ய­வந்­தது. "எண்­ணி­ல­டங்கா வழி­களில் வளர்ந்து­கொண்­டி­ருக்­கும் சிங்­கப்­பூ­ரில் அனைத்­துமே என்னை பிர­மிக்க வைக்­கின்­றன," என்­றார் திரு மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

தமிழ்நாட்டின் லட்சியம், சிங்கப்பூரில் நிச்சயம்

சிங்­கப்­பூ­ரின் வெளிப்­புற அழ­கைப்­போன்றே, அதன் அகத்தே உள்ள மொழி, கலா­சா­ரச் சிறப்­பு­களும் செழு­மை­யும் அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யத்­தைப் பெரி­தும் கவர்ந்­துள்­ளன.

ஓஷன் நிதி நிலை­யத்­துக்கு வெளியே நிறு­வப்­பட்­டுள்ள 'ஆன்மா (SOUL)' சிற்­பத்­தில், சிங்­கப்­பூ­ரின் நான்கு ஆட்­சி­மொ­ழி­க­ளின் எழுத்­து­களும் பொறிக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்டு வியப்­புற்ற இவர், அத­னு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொண்டு தனது சமூக ஊட­கப் பக்­கங்களில் பதி­விட்­டி­ருந்­தார். அதில் இடம்­பெற்­றுள்ள தமிழ் எழுத்­து­கள் ஒவ்­வொரு தமி­ழ­னை­யும் பெரு­மைப்­ப­டச் செய்­பவை என்­றார் இவர்.

"தமிழ்­மொழி ஆட்­சி­மொ­ழி­யாக வேண்­டும் என்­பது இந்­திய திரா­விட இயக்­கங்­க­ளின் முக்­கிய, நீண்­ட­நாள் லட்­சி­ய­ம். சிங்­கப்­பூ­ரில் அது நனவாகியுள்­ள­தில் பெரு­மி­தம் அடை­கி­றேன்," என்று திரு மா.சுப்பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

கத­வு­கள் உட்­பட எல்­லாப் பொது இடங்­க­ளி­லும் நான்கு மொழி­க­ளி­லுமே தக­வல்­களும் அறி­விப்­பு­களும் எழு­தப்­பட்­டி­ருப்­பது இவ்­வு­ணர்­வைக் கூட்­டி­ய­தா­க­வும் அவர் கூறி­னார். இந்­நி­லையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு சிங்­கப்­பூ­ரில் உள்ள சட்­ட­திட்­டங்­களை­யும் கொள்­கை­க­ளை­யும் இவர் பாராட்­டி­னார்.

"சிங்­கப்­பூர்த் தமி­ழர்­கள் கடு­மை­யான உழைப்­பா­ளி­கள். குடும்­பத்­துக்­கா­க­வும் சமு­தா­யத்­துக்­கா­க­வும் உழைக்­கும் தமி­ழர்­கள் எத்­திசை சென்­றா­லும் தங்­க­ளது அடை­யா­ளத்­தை­யும் கலா­சா­ரத்­தை­யும் நிலை­நாட்­டு­வர் என்­ப­தில் ஐய­மில்லை," என்­றார் அமைச்­சர்.

ரத்தவோட்டம் உள்ளவரை நெட்டோட்டம்

திரு மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அதி­க­பட்­சம் இன்­னும் இரு­பது ஆண்­டு­களே உயிர்­வாழ்­வார் என்­றும் அவ­ரால் இனி எழுந்து நடக்­கவே முடி­யாது என்­றும் மருத்­து­வர்­கள் உட்­பட பல­ரும் நம்­பிய கால­மும் இருந்­தது. இன்றோ, இந்­தி­யா­வின் 24 மாநி­லங்­க­ளி­லும் 12 நாடு­க­ளி­லும் கால்­த­டம் பதித்து மொத்­தம் 134 நெட்­டோட்­டங்­களில் ஓடிய சாத­னை­யா­ள­ராக வலம்­வ­ரு­கி­றார் இவர்.

1990களில் அவ­ருக்கு நீரி­ழிவு நோய் இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­ட­போது, தமது ஆயுள் வெகு­வா­கக் குறைந்­து­விட்­ட­தையே பல­ரும் கூறி­னர். அதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்­டில் கடு­மை­யான சாலை விபத்­தி­லும் சிக்­கி­னார் இவர்.

இவ­ரது மண்டை ஓடு பிளந்து, வலது கால் மூட்டு ஆறு துண்­டு­களாக உடைந்து, கால் மூட்டு அறுவை சிகிச்சை மேற்­கொண்ட போதி­லும், தானாக எழுந்து நடந்து­விட வேண்­டும் என்ற மனவுறுதி தன்­னி­டத்­தில் இருந்­ததை இவர் நினை­வு­கூர்ந்­தார்.

"எந்த மருத்­து­வர் என்­னால் இனி நடக்­கவோ தரை­யில் உட்­கா­ரவோ முடி­யாது என்று சொன்­னாரோ, குண­ம­டைந்த பிறகு அவர் முன்­னி­லை­யி­லேயே நான் பத்­மா­சனம் செய்து காட்­டி­னேன்," என்­றார் அமைச்­சர். தன் வாழ்­வைப் புரட்­டிப் போட்ட அவ்­வி­பத்து நேர்ந்த அதே நார­ண­மங்­க­லத்­தில், கடந்த ஆண்டு நெட்­டோட்­ட­மும் ஓடி­னார் இவர்.

தமது நெட்­டோட்­டப் பய­ணத்­தைத் துய­ராற்­றும் ஓர் அர்த்­த­முள்ள பய­ண­மாக மேற்­கொண்­டு­வ­ரும் அமைச்­சர், அதில் பல சாத­னை­களைப் படைத்­துள்­ளார். 2014ல் புதுச்­சே­ரி­யின் ஆரோ­வில் பகு­தி­யில் தனது முதல் நெட்­டோட்­டத்தை முடித்த இவர், பின்­னர் ஈராண்­டுக்­குள் 25 நெட்­டோட்­டங்­களை ஓடி முடித்து 2016ஆம் ஆண்­டில் இந்தி­ய சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றார்.

அதற்­க­டுத்த ஆண்­டுக்­குள், 50 நெட்­டோட்­டங்­களை ஓடி முடித்த இவ­ருக்கு உலக சாதனைப் பல்­க­லைக்­க­ழ­கம் கௌரவ முனை­வர் பட்­டம் அளித்து அங்கீ­கரித்­தது.

இந்­தி­யா­வின் 36 மாநி­லங்­க­ளி­லும் நெட்­டோட்­டம் ஓட வேண்­டும் என்ற கன­வைக் கொண்­டுள்ள திரு மா.சுப்பிரமணியன், மிசோ­ரம், திரி­புரா, மேகா­லயா என மீத­முள்ள 12 மாநி­லங்­க­ளி­லும் தடம் பதிக்­கும் திட்­டமுள்­ள­தா­கவும் பகிர்ந்து­கொண்­டார். "இந்­தியா முழுக்க ஓடி முடித்த பின்­ன­ரும் கால்­களில் ரத்­த­வோட்­டம் இருக்­கு­மா­யின், மற்ற உல­க­நா­டு­க­ளி­லும் நான் கட்­டா­யம் ஓடு­வேன்," என்கிறார் இவர்.

சோகத்தில் தள்ளிய கிருமித்தொற்றைச் சுட்டெரித்த கோபம்

தாம் விபத்தில் சிக்கிய அக்டோபர் 17ஆம் தேதியைத் தம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு நாள் எனப் பகிர்ந்துகொண்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஏனெனில், ஈராண்டுகளுக்கு முன், அதே அக்டோபர் 17ஆம் நாளன்று தம்முடைய 36 வயது மகன் அன்பழகனை கொவிட்-19 தொற்றுக்கு இழந்தார் அவர். தமது மண்டையோடு பிளந்ததால் ஏற்பட்ட வடுவை இன்னும் சுமந்திருக்கும் அமைச்சர், அதைக்காட்டிலும் ஆழமான காயமான தன் மகனின் இழப்பை மனத்தில் தாங்கிக்கொண்டு இருப்பதாகக் கூறினார். அவ்வாண்டில் திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டம் தொடர்பான ஒரு சந்திப்பில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

"நானும் என் மனைவியும் அந்நோயின் பிடியிலிருந்து மீண்டுவந்துவிட்டோம். நான் உயிராய் மதித்து வளர்த்த என் மகனோ எங்களைவிட்டுச் சென்றுவிட்டான்.

"இது கொவிட்-19 தொற்று மீது எனக்கு ஒரு வெறியையும் தீராக் கோபத்தையும் ஏற்படுத்தியது. இனி அந்த நோயால் எவரும் உயிரிழக்கக் கூடாது என்ற விடாப்பிடியான மனவுறுதியை அது என்னிடம் ஏற்படுத்தியது," என்று இவர் நினைவுகூர்ந்தார்.