சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற ஏழாவது 'உலக ஒருங்கிணைந்த சுகாதார மாநாட்டில்' பங்கேற்பதற்காக இங்கு வந்திருந்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் முரசு நாளிதழுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார். 1990கள் முதலே சிங்கப்பூருக்குப் பலமுறை வருகைபுரிந்துள்ள இவர், தொடர்ந்து உருமாறிவரும் சிங்கப்பூர், சிங்கப்பூர் தமிழர்கள், தமிழ்மொழி, கலாசாரம், மருத்துவப் பராமரிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை எனப் பல அம்சங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
ஆ. விஷ்ணு வர்தினி
தானியக்க முறைகள், நோய்ப்பரவலைத் தடுக்கும் பல்வேறு வசதிகள், நவீன தொழில்நுட்பங்கள் என மருத்துவத்துறையின் ஆற்றலைப் பெருக்க சிங்கப்பூர் எடுத்துவரும் தொடர் முயற்சிகள் - இவையெல்லாம் சிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கடந்த வாரம் பார்வையிட்ட தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் மனத்தில் நின்றவை, தொடர்ந்து நிற்பவை.
சிங்கப்பூரின் அதிநவீன மருத்துவத்துறை, பாரபட்சமற்ற முறையில் மக்களை முன்னிலைப்படுத்தி செயல்படுவதைப் பாராட்டிய திரு மா.சுப்பிரமணியன், அனைத்து மக்களும் இங்கு சமமாக நடத்தப்படுவதை நேரில் கண்டு மனமகிழ்ந்ததாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் சுகாதாரத்துறை இயக்கங்களைக் காணவும், உலகெங்கிலும் இருந்து மாநாட்டிற்கு வந்திருந்த வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்கவும் இம்முறை தமக்குக் கிடைத்த வாய்ப்புகள், தமிழக மருத்துவ அமைச்சுக்கென தமக்கிருக்கும் கனவுகளுக்கு ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார் அமைச்சர்.
ஏழை எளியோருக்கான அமைச்சாக திகழவேண்டும் என்பதே தமிழக மருத்துவ அமைச்சின் திண்ணமும் எண்ணமும் என்ற திரு மா.சுப்பிரமணியன், பல நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் தமிழக மருத்துவத் திட்டங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
"ஏழைகள் உட்பட அனைத்து தமிழக மக்களும் செலுத்தும் வரி மருத்துவத்துறையை வளர்க்கிறது. அவர்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் மருத்துவ உதவியாக அவர்கள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்," என்றார் இவர்.
அத்தகைய பார்வையுடன், மருத்துவ வசதிகளை அணுக வாய்ப்பில்லாதோருக்கு உதவுகிறது, கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம். இதன்மூலம், ஏழை மக்களின் வீடு தேடிச் சென்று மருத்துவர்களையும் மருத்துவ வசதிகளையும் அமைத்துத் தர முனைந்துள்ளது தமிழக அரசு.
தற்போது பேரளவில் நடப்பிலுள்ள இந்தத் திட்டம், அயல்நாடுகளின் சுகாதாரத் துறையினர் மற்றும் அரசாங்க ஊழியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக திரு மா.சுப்பிரமணியன் கூறினார்.
"இதுவரை 9.5 மில்லியன் பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இவ்வாண்டுக்குள் இந்த எண்ணிக்கை பத்து மில்லியனைத் தொடும். அது தமிழகத்தின் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும்," என்றார் இவர்.
மற்றுமொரு திட்டமான 'இன்னுயிர் காப்போம்' என்ற அவசரகால விபத்துதவித் திட்டமும் தமிழக அரசால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக எல்லைகளுக்குள் நிகழும் விபத்துகளில் சிக்குவோருக்கு, விபத்து நிகழ்ந்த முதல் 48 மணிநேரத்துக்கு அரசாங்கமே மருத்துவ சிகிச்சை அளித்து உதவுகிறது.
இத்திட்டம், உயிரைக் காப்பாற்றுவதை முன்னிலைப்படுத்துகிறது, அனைவருக்கும் பாரபட்சமற்ற பராமரிப்பைத் தர முற்படுகிறது என்று இவர் கூறினார்.
இவ்விரண்டு திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி நற்பலன்களை ஈட்டியுள்ள தமிழ்நாட்டின் மருத்துவ அமைச்சு, பிற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது என்று பெருமையுடன் கூறினார் திரு மா.சுப்பிரமணியன்.
மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக, அந்திமகாலப் பராமரிப்பு, நீரிழிவு பாதிப்பு, வறுமை ஆகிய மூன்று அம்சங்களில் தமது கவனத்தைச் செலுத்தி வரும் அதேவேளையில், உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா இவ்வாண்டில் 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டு, பின்தங்கியிருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
"அதிகரித்துவரும் உணவுப் பற்றாக்குறைச் சிக்கலைக் களைவதற்கு, 'சிஎஸ்ஆர்' எனப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைக் கொண்டு உணவு விடுதிகளிலும் பொது நிகழ்வுகளிலும் மிச்சமாகும் கைப்படாத உணவை, ஏழை மக்களுக்கு விநியோகிக்கும் நீண்டகாலத் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
"இதற்குக் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள லாப நோக்கமற்ற அமைப்புகளுடன் தமிழக அரசு இணைவது சாத்தியமாகலாம்," என்றார் அமைச்சர்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, மருத்துவக்கல்வி பின்னணியே இல்லாத திரு மா. சுப்பிரமணியத்துக்கு அது என்றைக்கும் ஒரு தடையாய் இருந்ததில்லை.
"மருத்துவ உதவிகளை நேரடியாகத் தருவதல்ல இப்பணியின் முக்கியக் கூறு. நாம் மக்களுக்கு ஊசி போடவோ, ஏனைய மருத்துவ சேவைகளை வழங்கவோ போவதில்லை.
"இதற்குச் சிறந்த நிர்வாகத்திறன்களே அவசியம். கடந்த பத்தாண்டுகளாக மட்டுமே மருத்துவத்துறை பின்னணி கொண்டோர் அமைச்சில் பதவியேற்றுள்ளனர். அதற்குமுன், மருத்துவ அனுபவமில்லாமலேயே மிகச் சிறப்பாக தமிழகச் சுகாதார சிக்கல்களைக் கையாண்ட ஆற்காடு வீராசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் அதற்குச் சிறந்த சான்றுகள்," என்று இவர் குறிப்பிட்டார்.
வரும்போதெல்லாம் வாய்பிளக்க வைக்கும் வளர்ச்சி
வெகுவேகமாக உருமாறிவரும் சிங்கப்பூர், ஒவ்வொருமுறை வரும் பொழுதும் தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை பிரமிக்க வைக்கத் தவறியதில்லை.
சென்னை மேயராக இருந்தபோது 2009ஆம் ஆண்டில் மு.க. ஸ்டாலினுடன் சிங்கப்பூர் ஆற்றைக் காண வந்திருந்த இவர், அப்போது கட்டப்பட்டு வந்த மரினா பே சேண்ட்ஸ் தற்போது மாபெரும் விடுதியாக மாறிவிட்டதையும், எதிரே பிரம்மாண்டமாய் கரையோரப் பூந்தோட்டங்கள் எழுப்பப்பட்டுள்ளதையும் கூறி வியந்தார்.
தாம் பலமுறை கண்டுவிட்ட செந்தோசாவிற்கு மீண்டும் செல்ல வேண்டாம் என்று எண்ணியிருந்த அமைச்சரை மேலும் வியக்கவைக்கும் வகையில் அங்கு புதிதாக இடம்பெற்ற வசதிகளும் அமைப்புகளும் அமைந்திருந்தன.
இது, சிங்கப்பூர் தொடர்ந்து தன்னை மேம்படுத்தியும் நவீனப்படுத்தியும் வருவதைப் பறைசாற்றுகிறது என்றார் அவர்.
தான் தங்கியிருந்த விடுதியில்இருந்து ஹார்பர்ஃபிரண்ட் துறைமுகம்வரை நெட்டோட்டம் ஓடிய அவருக்கு, அத்துறைமுகம் இடமாறப்போவதும் தெரியவந்தது. "எண்ணிலடங்கா வழிகளில் வளர்ந்துகொண்டிருக்கும் சிங்கப்பூரில் அனைத்துமே என்னை பிரமிக்க வைக்கின்றன," என்றார் திரு மா.சுப்பிரமணியன்.
தமிழ்நாட்டின் லட்சியம், சிங்கப்பூரில் நிச்சயம்
சிங்கப்பூரின் வெளிப்புற அழகைப்போன்றே, அதன் அகத்தே உள்ள மொழி, கலாசாரச் சிறப்புகளும் செழுமையும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
ஓஷன் நிதி நிலையத்துக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள 'ஆன்மா (SOUL)' சிற்பத்தில், சிங்கப்பூரின் நான்கு ஆட்சிமொழிகளின் எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு வியப்புற்ற இவர், அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அதில் இடம்பெற்றுள்ள தமிழ் எழுத்துகள் ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்படச் செய்பவை என்றார் இவர்.
"தமிழ்மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்பது இந்திய திராவிட இயக்கங்களின் முக்கிய, நீண்டநாள் லட்சியம். சிங்கப்பூரில் அது நனவாகியுள்ளதில் பெருமிதம் அடைகிறேன்," என்று திரு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கதவுகள் உட்பட எல்லாப் பொது இடங்களிலும் நான்கு மொழிகளிலுமே தகவல்களும் அறிவிப்புகளும் எழுதப்பட்டிருப்பது இவ்வுணர்வைக் கூட்டியதாகவும் அவர் கூறினார். இந்நிலையை உறுதிப்படுத்துவதற்கு சிங்கப்பூரில் உள்ள சட்டதிட்டங்களையும் கொள்கைகளையும் இவர் பாராட்டினார்.
"சிங்கப்பூர்த் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள். குடும்பத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் உழைக்கும் தமிழர்கள் எத்திசை சென்றாலும் தங்களது அடையாளத்தையும் கலாசாரத்தையும் நிலைநாட்டுவர் என்பதில் ஐயமில்லை," என்றார் அமைச்சர்.
ரத்தவோட்டம் உள்ளவரை நெட்டோட்டம்
திரு மா.சுப்பிரமணியன் அதிகபட்சம் இன்னும் இருபது ஆண்டுகளே உயிர்வாழ்வார் என்றும் அவரால் இனி எழுந்து நடக்கவே முடியாது என்றும் மருத்துவர்கள் உட்பட பலரும் நம்பிய காலமும் இருந்தது. இன்றோ, இந்தியாவின் 24 மாநிலங்களிலும் 12 நாடுகளிலும் கால்தடம் பதித்து மொத்தம் 134 நெட்டோட்டங்களில் ஓடிய சாதனையாளராக வலம்வருகிறார் இவர்.
1990களில் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டபோது, தமது ஆயுள் வெகுவாகக் குறைந்துவிட்டதையே பலரும் கூறினர். அதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டில் கடுமையான சாலை விபத்திலும் சிக்கினார் இவர்.
இவரது மண்டை ஓடு பிளந்து, வலது கால் மூட்டு ஆறு துண்டுகளாக உடைந்து, கால் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும், தானாக எழுந்து நடந்துவிட வேண்டும் என்ற மனவுறுதி தன்னிடத்தில் இருந்ததை இவர் நினைவுகூர்ந்தார்.
"எந்த மருத்துவர் என்னால் இனி நடக்கவோ தரையில் உட்காரவோ முடியாது என்று சொன்னாரோ, குணமடைந்த பிறகு அவர் முன்னிலையிலேயே நான் பத்மாசனம் செய்து காட்டினேன்," என்றார் அமைச்சர். தன் வாழ்வைப் புரட்டிப் போட்ட அவ்விபத்து நேர்ந்த அதே நாரணமங்கலத்தில், கடந்த ஆண்டு நெட்டோட்டமும் ஓடினார் இவர்.
தமது நெட்டோட்டப் பயணத்தைத் துயராற்றும் ஓர் அர்த்தமுள்ள பயணமாக மேற்கொண்டுவரும் அமைச்சர், அதில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 2014ல் புதுச்சேரியின் ஆரோவில் பகுதியில் தனது முதல் நெட்டோட்டத்தை முடித்த இவர், பின்னர் ஈராண்டுக்குள் 25 நெட்டோட்டங்களை ஓடி முடித்து 2016ஆம் ஆண்டில் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
அதற்கடுத்த ஆண்டுக்குள், 50 நெட்டோட்டங்களை ஓடி முடித்த இவருக்கு உலக சாதனைப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் அளித்து அங்கீகரித்தது.
இந்தியாவின் 36 மாநிலங்களிலும் நெட்டோட்டம் ஓட வேண்டும் என்ற கனவைக் கொண்டுள்ள திரு மா.சுப்பிரமணியன், மிசோரம், திரிபுரா, மேகாலயா என மீதமுள்ள 12 மாநிலங்களிலும் தடம் பதிக்கும் திட்டமுள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார். "இந்தியா முழுக்க ஓடி முடித்த பின்னரும் கால்களில் ரத்தவோட்டம் இருக்குமாயின், மற்ற உலகநாடுகளிலும் நான் கட்டாயம் ஓடுவேன்," என்கிறார் இவர்.
சோகத்தில் தள்ளிய கிருமித்தொற்றைச் சுட்டெரித்த கோபம்
தாம் விபத்தில் சிக்கிய அக்டோபர் 17ஆம் தேதியைத் தம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு நாள் எனப் பகிர்ந்துகொண்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
ஏனெனில், ஈராண்டுகளுக்கு முன், அதே அக்டோபர் 17ஆம் நாளன்று தம்முடைய 36 வயது மகன் அன்பழகனை கொவிட்-19 தொற்றுக்கு இழந்தார் அவர். தமது மண்டையோடு பிளந்ததால் ஏற்பட்ட வடுவை இன்னும் சுமந்திருக்கும் அமைச்சர், அதைக்காட்டிலும் ஆழமான காயமான தன் மகனின் இழப்பை மனத்தில் தாங்கிக்கொண்டு இருப்பதாகக் கூறினார். அவ்வாண்டில் திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டம் தொடர்பான ஒரு சந்திப்பில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
"நானும் என் மனைவியும் அந்நோயின் பிடியிலிருந்து மீண்டுவந்துவிட்டோம். நான் உயிராய் மதித்து வளர்த்த என் மகனோ எங்களைவிட்டுச் சென்றுவிட்டான்.
"இது கொவிட்-19 தொற்று மீது எனக்கு ஒரு வெறியையும் தீராக் கோபத்தையும் ஏற்படுத்தியது. இனி அந்த நோயால் எவரும் உயிரிழக்கக் கூடாது என்ற விடாப்பிடியான மனவுறுதியை அது என்னிடம் ஏற்படுத்தியது," என்று இவர் நினைவுகூர்ந்தார்.

