மோனலிசா
முருகன் திருக்குன்றம் கோயிலின் மகா குடமுழுக்கு, அடுத்த மாதம் 5ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அப்பர் புக்கிட் தீமா சாலையில் அமைந்துள்ள இக்கோயிலின் குடமுழுக்கு விழாவைஒட்டி இன்று முதல் அடுத்த ஒன்பது நாள்களுக்கு காலை, மாலை என இருவேளையும் பல்வேறு பூஜைகள் நடைபெறவுள்ளன.
மூன்றாவது முறையாக குடமுழுக்கு காணும் இக்கோயிலில் ஐந்து கலசங்கள் பொருத்திய ராஜகோபுரம், மூன்று பிரதான விமானங்கள் உள்பட மொத்தம் 45 கலசங்கள் உள்ளன.
முதன்முதலில் 1973ஆம் ஆண்டு ஏறத்தாழ 2,000 சதுர அடி பரப்பளவில் சுங்காய் தெங்கா சாலையில் இக்கோயில் நிறுவப்பட்டது.
பின்னர் 1992ஆம் ஆண்டு அப்பர் புக்கிட் தீமா சாலைக்கு மாற்றப்பட்டது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் தடைபட்டாலும், இவ்வாண்டு மீண்டும் தொடங்கி அண்மையில் நிறைவு அடைந்தன. சிற்பக்கலைஞர்கள், வண்ணப்பூச்சு ஓவியர்கள் என மொத்தம் 17 பேர் சிற்பங்களின் மறுசீரமைப்பில் ஈடுபட்டனர்.
கோயிலின் அறங்காவலரும் தலைவருமான திருவாட்டி ஈஸ்வரி நாகலிங்கம், "பல்வேறு கோயில்கள், ஆதரவாளர்கள், பக்தர்களின் உதவியுடன் நன்முறையில் நடைபெறவுள்ள இக்குடமுழுக்கு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன," என்றார்.
யாக சாலை பூஜைகள் அடுத்த மாதம் 2ஆம் தேதி தொடங்கி ஆறு காலங்களாக குடமுழுக்கு நாளின் காலை வரை நடைபெறும்.
மேல்விவரங்களை https://www.muruganhilltemple.com/ எனும் இணையத்தள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

