பொன்மணி உதயகுமார்
ஆறு வயது ஓம் மதன் கார்க் தன் தந்தை மயூர் கார்க், 38, தாயார் காயத்திரி மஹேந்திரம், 39, இருவருடன் எவரெஸ்ட் சிகர அடிவார முகாம்வரை நெடுவழி நடைப்பயணம் சென்றுவந்திருக்கிறார்.
இரண்டரை வயதிலிருந்து தன் பெற்றோருடன் இத்தகைய நெடுந்தொலைவுப் பயணங்களை மேற்கொள்ளும் ஓம், இவ்வாண்டு இமயமலைப் பயணத்தின் மூலம் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் சென்ற மாதம் 7ஆம் தேதி வரை இந்தப் பயணம் இடம்பெற்றது.
நெடுவழி நடைப்பயணங்கள் ஓமுக்கு மிகவும் பிடித்துள்ளன. முதன்முதலாக மலைத்தொடரில் பரவிக் கிடந்த பனித்துகள்களைக் கண்டு பரவசமடைந்ததாகக் கூறும் இவர், இமயமலைப் பயணத்தில் எல்லா அம்சங்களுமே தனக்குப் பிடித்திருந்ததாகக் கூறினார்.
இந்தப் பயணத்தில், சிங்கப்பூரிலிருந்து சென்றிருந்த இந்தியர்களைக்கொண்ட மற்றொரு பயணக் குழுவையும் இவர்கள் சந்தித்தனர். அவர்கள் தங்கள் குழுவுக்கான அடையாளச் சட்டைகளில் ஒன்றைத் தனக்கு அன்பளிப்பாக அளித்ததை நினைவுகூர்ந்தார் ஓம்.
உற்சாகம் நிறைந்த இந்தப் பயணத்தில், சில தடங்கல்களையும் இவர்கள் எதிர்கொண்டனர். நேப்பாளத்தின் காத்மாண்டு நகருக்குச் சென்று அங்கிருந்து லுக்லா கிராமத்தைச் சென்றடைவது இவர்கள் திட்டம்.
ஆனால் இந்தச் சிறிய பயணத்தை மேற்கொள்ள அவர்கள் காத்மாண்டு விமான நிலையத்தில் மூன்று நாள் காத்திருக்க நேரிட்டது. மேகமூட்டமாக இருந்த வானிலை மாறும்வரை காத்திருந்ததால் நடைப்பயணத்தைத் தாமதமாகத் தொடங்கும் நிலை ஏற்பட்டது.
லுக்லா கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 2,860 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கிருந்து எவரெஸ்ட் அடிவார முகாமுக்குச் செல்ல 65 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கவேண்டும். தொடர்ந்து 10 நாள்கள் நடந்து 5,364 மீட்டர் உயரத்தில் உள்ள அடிவார முகாமை எட்டினர்.
பயணத்திற்காக, முன்கூட்டியே இவர்கள் குடும்பமாக பயிற்சியில் ஈடுபட்டனர். அப்பயிற்சி, சிறுவன் ஓமுக்குக் கடினமாகத் தோன்றாத வகையில் ஏதோ ஒரு விளையாட்டைப்போல மேற்கொண்டனர் பெற்றோர். இப்போது 10 கிலோமீட்டர் தொலைவுக்கான சவால்மிக்க நடைப்பயணங்களையே ஓம் விரும்புவதாக அவர்கள் கூறினர்.
இயற்கைச் சூழலில் 12 இரவுகளைக் கழித்த திருமதி காயத்திரி, இமயமலைத் தொடரின் அழகைக் கண் இமைக்க மறந்து வியந்ததாகக் கூறுகிறார்.
"வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை எவ்வளவு விரைவாக மறந்து இயற்கையிடம் சரணடைகிறோமோ அவ்வளவு விரைவாக இயற்கையின் அழகையும் அற்புதத்தையும் நாம் உணர முடியும்," என்றார் உடல் இயக்க மருத்துவ சிகிச்சை அதிகாரியான இவர்.
காயத்திரியை 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாகக் கூறினார் வங்கியில் வணிக ஆய்வாளராகப் பணிபுரியும் மயூர்.
ஏறக்குறைய 18,380 அடி உயரத்தில் அமைந்திருக்கும் 'கர்துங் லா' எனும் மலைவழிச் சாலைப் பகுதிக்கு இருவரும் நடைப்பயணம் சென்றிருந்தனர். அங்குதான் காயத்திரியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படிக் கேட்டதாக மயூர் கூறினார்.
இருவரும் தங்கள் பயணங்களையும் அனுபவங்களையும் காணொளிகளாக சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர்.

