வி கே சந்தோஷ்குமார்
சிங்கப்பூரில் அடுத்த மாதம் 18ஆம் தேதி, கிரிக்கெட் ஆர்வலர்கள் வித்தியாசமான போட்டி ஒன்றைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.
பாலஸ்டியர் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கத் திடலில் நடைபெறவிருக்கும் டி10 வெஸ்ட்லைட் ஒருங்கிணைப்புக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு ஊழியர்கள், வர்த்தக நிறுவனத் தலைவர்கள், தேசிய அணியின் விளையாட்டாளர்கள், 19 வயதுக்குட்பட்ட விளையாட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் திறன்காட்ட இருக்கின்றனர்.
ஆறு அணிகளாகக் களமிறங்கும் இவர்களில் வெற்றிபெறுவோருக்கு வெற்றிக் கிண்ணத்துடன் $1,000 முதல் $5,000 வரையிலான ரொக்கத் தொகையைப் பெறும் வாய்ப்பு உண்டு. சிங்கப்பூரில் இத்தகைய போட்டி நடைபெறவிருப்பது இதுவே முதல்முறை.
தப்லா!, 'ஸீ எண்டெர்டெயின்மண்ட்', 'வெஸ்ட்லைட் அக்காமடேஷன்' தங்குவிடுதி நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
"ஒருங்கிணைப்புக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி, இதுவரை கிரிக்கெட் உலகம் காணாத ஒன்றாக விளங்கும்," என்று கூறினார் தப்லா!, தமிழ் முரசு ஆகியவற்றின் ஆசிரியரான ஜவஹரிலால் ராஜேந்திரன்.
"பலதரப்பட்ட பின்னணிகள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் இணைந்து ஒரு குழுவாக, வெற்றிக் கனியைச் சுவைக்கும் இலக்குடன் பங்குகொள்ளும் இப்போட்டி பார்வையாளர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும்," என்று உறுதியளித்தார் அவர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினமான டிசம்பர் 18ஆம் தேதியில் கிரிக்கெட் போட்டியை நடத்திவரும் 'வெஸ்ட்லைட்', இம்முறை பெரிய அளவில் போட்டிக்கு ஏற்பாடு செய்யும் வாய்ப்பை நழுவவிடாமல் ஏற்றுக்கொண்டது.
"கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லாததால் கூடுதல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படும் வேளையில் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்காக போட்டியை நேரலையில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார் 'வெஸ்ட்லைட் அக்காமடேஷன்' நிறுவனத்தின்கீழ் இயங்கும் 'செஞ்சுரியன் கார்ப்பரேஷன்' நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி கோங் சீ மின்.
புதுமையான முறையில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டில் பங்குகொள்வது குறித்து மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் 'ஸீ எண்டெர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் வட்டாரத் தலைவர் திரிப்தா சிங். கிரிக்கெட் தெற்கு ஆசியர்களின் உயிர்நாடி என்பதை அவர் சுட்டினார்.
டிபிஎஸ் வங்கி, ரெட் புல் நிறுவனம், குளோபல் அனைத்துலக இந்தியப் பள்ளி ஆகியவை பரிசுகள் உள்ளிட்ட செலவுகளுக்கு ஆதரவு வழங்குகின்றன.
அடுத்த மாதம் 18ஆம் தேதி ஒருங்கிணைப்புக் கிண்ணப் போட்டி நடைபெறும் அதேவேளையில் அருகில் உள்ள சிலோன் விளையாட்டுச் சங்கத் திடலில் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் பங்குபெறும் கிரிக்கெட் போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 16 அணிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 160 பேர் கலந்துகொள்வர்.

