சுருட்டை முடி கொண்டோருக்கு ஏற்ற பராமரிப்புப் பொருள்களை சிங்கப்பூரில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத குறையைத் தீர்த்து வைக்கும் நோக்கில் மகாலட்சுமி, விஜயம் இருவரும் 'மேன்ஹெவன்' இணைய வர்த்தகத்தைத் தொடங்கினர்.
தனியே, இயற்கையான முறையில், சுருட்டை முடியின் தன்மையைப் பாதிக்காத சாயம்பூசும் சேவையை மகாலட்சுமி 'மேன்கேம்எஸ்ஜி' மூலமும், சுருட்டைமுடிக்கு ஏற்ற முடிதிருத்த சேவையை விஜயம் 'கர்லிஹெவன்எஸ்ஜி' வழங்கி வருகின்றனர். தலைமுடி தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.
ஆஃப்ரோ' போன்ற சுருட்டை முடி கொண்டோருக்கான 'ரேசோ' முடிதிருத்த பாணி, நேர்முடிக்கான முடிதிருத்தத்தைப்போல சுருட்டை முடியின் அமைப்பை மாற்றாது. இதற்கான பயிற்சியை இணையம் மூலம் மேற்கொண்டுவரும் விஜயம், வெவ்வேறு சுருட்டை முடி அமைப்புகளுக்கு ஏற்ற முடிதிருத்த உத்திகளைக் கற்றுக்கொண்டுள்ளார்.
சுருட்டை முடியைப் பராமரிக்க அறிந்திடாதோர் பெரும்பாலும், கடைகளுக்குச் சென்று தலைமுடியை நேராக்க முயல்கின்றனர். 13 வயதிலிருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு தான் இவ்வாறு செய்துவந்ததை நினைவுகூர்ந்தார் மகாலட்சுமி.
"ஆனால் எனக்கு அலோபேசியா எனும் முடி உதிரும் பிரச்சினை ஏற்பட்டதால், தலைமுடியை நானே சுயமாகப் பராமரிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். அதன்பிறகே என் தலைமுடியின்மீது நம்பிக்கை ஏற்பட்டது. பிறருக்கும் அத்தகைய நம்பிக்கையை அளிக்க மேன்ஹெவன் உதவவேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்," என்றார் 33 வயது மகாலட்சுமி வி. கார்த்திகேயன்.
சிறாருக்கும் ஆண்களுக்கும் இச்சேவைகளை வழங்கி வருகிறது மேன்ஹெவன். தற்போது பெரும்பாலும் இளம், நடுத்தர வயதுப் பெண்களே நாடி வருகின்றனர். எதிர்காலத்தில் ஆண்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக மகாலட்சுமி, விஜயம் இருவரும் கூறினர்.
படங்கள்: ராசாத்தி மேரி விக்டர், ஃபாத்திமா சோரா, சத்யபிரியா, பிளேட்டினம் ஏஞ்சல்ஸ் மேனேஜ்மெண்ட், மேன்ஹேவன், அம்பிகா.