வரி உயர்வுக்கு முன் பொருள் வாங்க வாடிக்கையாளர் முனைப்பு

வரி உயர்வுக்கு முன் பொருள் வாங்க வாடிக்கையாளர் முனைப்பு

3 mins read
abd62bd6-abc2-49d9-9daf-e879b11228c9
-

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அடுத்த மாதம் 1ஆம் தேதி உயரவிருப்பதால் சிங்­கப்­பூ­ரர்­கள் சிலர் தேவை­யான பொருள்­களை முன்­கூட்­டியே வாங்­கத் தொடங்­கி­விட்­ட­னர்.

எடுத்துக்காட்டாக அடுத்த ஆண்டு புது வீட்­டுக்கு மாற உள்­ளோர், வீடு­கள் தயா­ரா­காத நிலை­யி­லும் வீட்­டுக்கான பொருள்­களை இவ்­வாண்டு முடி­வ­தற்­குள் வாங்க முனைந்துள்ளனர். முன்­ப­தி­வு­களும் அதி­க­ரித்­து­ள்ளன.

இந்­தப் போக்கு லிட்­டில் இந்­தியா வர்த்­த­கங்­க­ளுக்கு இடை­யிலும் காணப்­ப­டு­கி­றதா என்று ஆராய்ந்­த­போது, தங்க நகை­கள் வாங்­கத் திட்­ட­மி­டு­வோர் நகைக்­கடை­க­ளில் முன்­ப­திவு செய்து வரு­வது தெரி­ய­வந்­துள்­ளது.

வாடிக்­கை­யா­ளர்­கள் நகை­கள் வாங்க இம்­மா­தம் முன்­ப­திவு செய்து வரு­வதாக 'லக்‌ஷ்மி பேலஸ்' நகைக்­கடை மேலா­ளர் குமா­ர­பாணி கூறி­னார். முன்­ப­திவு மூலம் இவ்­வாண்­டில் நிர்­ண­யிக்­கப்­பட்ட விலை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் நகை­யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

இதன்­படி அடுத்­தாண்டு ஜிஎஸ்டி 8% உயர்ந்தாலும் முன்­ப­திவு செய்­துள்­ள­ வாடிக்­கை­யா­ளர்­களிடம் 7% மட்­டுமே வசூ­லிக்­கப்­படும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் முடிந்து திரு­ம­ணங்­கள் அதி­கம் நடை­பெ­றுவதால் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்க நகை­கள் வாங்­கு­வ­தற்­காக முன்­ப­திவு செய்­கி­றார்­கள் என்று கூறினார் 'மீனா ஜூவ­லர்ஸ்' உரி­மை­யா­ளர் ராய்.

தாங்­களும் தங்க விநி­யோ­கஸ்­தர்­க­ளி­டம் 7% ஜிஎஸ்டி மட்­டுமே செலுத்­தும் நோக்­கில் முன்­ப­திவு செய்­துள்­ள­தாக இவர் கூறி­னார்.

பொருள், சேவை வரி உயர்வு குறித்து அறிந்­தி­ருந்­தா­லும் சிலர் 1% அதி­க­ரிப்பு மட்­டும் தானே என்று அதி­கம் வருந்­தா­மல் இருப்­ப­தா­க­வும் மேலும் சிலரோ இதைப் பற்றி அறி­யா­மலே இருப்­ப­தா­க­வும் 'அக்‌ஷயா ஜூவல்­லர்ஸ்' கடை­யின் பிர­தி­நிதி கூறி­னார்.

தற்­போ­தைக்கு எந்தவித­மான விற்­பனை உயர்­வும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்று கூறும் 'அணி மணி பொற்­சாலை'யின் சுப்­பையா ராமு, ஆண்­டின் இறுதி வாரத்­தில் இந்­நிலை மாற­லாம் என்­றார். அதிக விலை கொண்ட பொருள்­களை முன்­னரே வாங்­கு­வது செல­வைச் சற்று குறைத்­தா­லும் தங்­கள் கையி­ருப்­பைப் பொறுத்தே வாடிக்­கை­யா­ளர்­கள் முடி­வெ­டுப்­ப­தாக அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே சிங்­கப்­பூ­ரில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களை இது பாதிக்­கும் என்று லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

சேமிப்பு அதி­கம் இல்­லாத வெளி­நாட்டு ஊழி­யர்­கள், சிறுகச் சிறுக சேர்க்­கும் பணத்­தைக் கொண்டு தாயகம் திரும்­பும்­போது நகை வாங்­கு­வது வழக்­க­ம். அதனால், ஜிஎஸ்டி உயர்­வுக்கு முன்பே நகை வாங்­குவது அவர்களுக்கு சிரமம்.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு எந்­த­வித சலு­கை­யும் பொருள், சேவை வரி தொடர்பில் வழங்­கப்­ப­ட­வில்லை.

அன்­றாடத் தேவை­களுக்கு லிட்­டில் இந்­தியா மளி­கைக் கடை­க­ளுக்­குச் செல்­லும் இவர்­கள், ஜிஎஸ்டி உயர்வால் நேரும் விலை உயர்­வைச் சந்­திக்க வேண்­டிய கட்­டா­யம் ஏற்­படும் என்று 'ஓவிஐ ஈட்ஸ் அண்ட் டிரீட்ஸ்' நிறுவனப் பிர­தி­நிதி கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 2005இலி­ருந்து பணி­பு­ரி­யும் ராதா­கி­ருஷ்­ணன், அப்போதெல்லாம் உண­வுப்­பொ­ருள் க­ளின் விலை குறை­வாக இருந்­ததை நினை­வு­கூர்ந்­தார். இன்­றைய விலை­வா­சி­யைச் சமா­ளிப்­பது சிர­ம­மாக இருக்­கிறது என்­றார் அவர்.

அரிசி, முட்டை போன்றவற்றின் விலை இரண்டு மடங்­கிற்­கு மேலா­கி­விட்டது. ஆனால் ஊதி­யம் உயரவில்லை என்று கூறும் இவர் சமாளிப்பது சற்றுச் சிரமமாகவே இருக்குமெனக் கரு­து­கி­றார்.

இருப்­பி­னும் இந்­தி­யா­வில் வசூ­லிக்­கப்­படும் பொருள், சேவை வரி­யைக் காட்­டி­லும் சிங்­கப்­பூ­ரில் ஏற்­பட உள்ள உயர்வு, சமா­ளிக்­கக்­கூடி­யதே என்­கிறார் விற்­பனை நிர்­வாகி அலெக்ஸ்.

இந்­தி­யா­வின் பொருள், சேவை வரி­யால் பொருள்­க­ளின் விலை ஏற்­கெனவே அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் வாடிக்­கை­யா­ளர்­க­ள் அதனால் பாதிக்கப்பட்டுள்­ள­தா­க­வும் கூறிய 'மேனகா டிரே­டிங்' மேலா­ளர் விக்­னேஸ்­வரி, சிங்­கப்­பூரிலும் பொருள், சேவை வரி உயர்வது வாடிக்­கை­யா­ளர்­களை மேலும் பாதிக்­கக்கூடும் என்­றார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட வியா­பா­ரம் இயல்­பு­நி­லைக்குத் திரும்­பிய பின்­னர் பொருள், சேவை வரி உயர்வு அறி­விக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­பது லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் மத்­தி­யில் பொது­வாக நில­வும் மற்­றொரு கருத்­து.

விலை உயர்­வால் வாடிக்­கை­யா­ளர்­களை இழந்­து­வி­டக்­கூ­டா­து என்பதால் ஜிஎஸ்டி உயர்­வைத் தாங்­களே சரிக்­கட்­டு­வ­தைத் தவிர வேறு வழி இல்லை என்­கி­றார் 'செல்­விஸ் பியூட்டி பார்­லர்' அழகு நிலைய உரி­மை­யா­ளர் தமிழ்ச்­செல்வி.

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்