டன்லப் சாலையில் தமிழ்ப் பாரம்பரியத்தை தொழில்நுட்பத்தோடு இணைத்து சுவரோவியம் ஒன்றை வரைந்துள்ளது 'மியுரல் லிங்கோ' ஓவியக் கலை நிறுவனம். 'நல்லிஸ் சின்னசாமிச் செட்டி' கடைத்தொகுதியின் வெளிப்புறச் சுவரை அலங்கரிக்கிறது இந்த ஓவியம்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், லசெல் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்யும் 'ஆர்ட்வாக்' விழாவின் ஓர் அங்கமாக இது படைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் முன்னாள் மாணவர் ஹேஷுவா இம்ரான், 36, இந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.
இவரது 'மியுரல் லிங்கோ' நிறுவனம் இதுவரை ஏழு நாடுகளில் ஏறக்குறைய 240 சுவரோவியங்களை வரைந்துள்ளது.
சென்ற மாத இறுதியில் தன் குழுவினருடன் இவர் தொடங்கிய இந்த ஓவியப் பணி இம்மாதம் 16ஆம் தேதி நிறைவுபெற்றது. மழை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தாமதத்திற்குக் காரணங்கள்.
இந்திய, தமிழ்க் கலாசாரம் அல்லது மரபுடைமை சார்ந்து இதுவரை வரையப்பட்ட சுவரோவியங்கள் பெரும்பாலும் நம் சமூகம் கண்டுள்ள வளர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லை என்று கருதும் இம்ரான், பாரம்பரியத்துடன் நவீனத்தை இணைக்க முடிவு செய்தார்.
நல்லிஸ் நிறுவனம் சேலை நெய்தல் பற்றியும் வரலாறு பற்றியும் அளித்த குறிப்புகள் இவருக்குப் புதிய சிந்தனைகளை ஏற்படுத்தின.
"தொழில்நுட்பம், இயந்திரங்கள் ஆகியவற்றால் மனிதர்களின் வேலை முறை மாறலாமே தவிர மனித வளத்திற்கான தேவை குறையாது," என்கிறார் இம்ரான்.
செய்தி:
பொன்மணி உதயகுமார்

