மின்வர்த்தகம் தொடர்பான தயக்கம்

மின்வர்த்தகம் தொடர்பான தயக்கம்

2 mins read
dc7c3d36-f573-4898-b1cd-cef59535c2cd
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட பிறகு வாடிக்­கை­யா­ளர்­கள் லிட்­டில் இந்­தி­யா­விற்கு நேர­டி­யா­கச் சென்று பொருள்­களை வாங்க விரும்­பு­வதால் மின்­னி­லக்க வர்த்­த­க­மு­றையை நாடும் போக்கு குறைந்­துள்­ளது.

விநி­யோ­கச் சேவைக்­கான செலவு, மின்­வர்த்­த­கத் தளங்­களில் விற்­பனை செய்­வ­தற்­கான கட்­ட­ணம் ஆகி­யவை உயர்ந்­துள்­ள­தாக நிறு­வ­னங்­கள் கூறு­கின்­றன.

"மூன்று, நான்கு விழுக்­கா­டாக இருந்த கட்­ட­ணம், 10 விழுக்­காட்­டுக்கு மேலாக உயர்ந்­துள்­ளது," என்­றார் 'வி மிஸ்­டிக் பூடிக்' முத­லாளி ஷாருக். இத­னால் அதிக லாபம் ஈட்ட முடி­யாது என்று கரு­திய பல வர்த்­த­கங்­கள் மின்­வர்த்­தக முறை­யைக் கைவிட்­டுள்­ளன.

"ஆடை­களை அணிந்து பார்க்­கும் அனு­ப­வம் ஒரு திரை­யில் 'கிளிக்' செய்­வ­தில் கிடைக்­காது," என்­கி­றார் 'ஸிப் அட்­ஜஸ்ட் டிசை­னிங் டைலர்' முத­லாளி சித்­ரா­தேவி.

கடைக்கு வரு­ப­வர்­க­ளுக்­குப் பொருத்­த­மான ஆடை­க­ளை­யும் ஆப­ர­ணங்­க­ளை­யும் தேர்ந்­தெ­டுத்­துக் கொடுக்க முடி­யும். மின்­வர்த்­த­கம் மூலம் வாங்­கு­பவை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு திருப்தி அளிக்­கா­விட்­டால் வர்த்­த­கம் மீதான நம்­பிக்கை குறை­யும் என்­றார் அவர்.

விலை­யைக் குறைக்­கும் சில மின்­வர்த்­த­கங்­கள் குறை­வான தரத்­தில் தயா­ரிக்­க­வும் வாய்ப்பு உள்­ளது. "மின்­வர்த்­த­கம் மூலம் லாபம் கிடைக்­க­லாம். அதே­நே­ரம் தவறு ஏதும் நடந்­து­விட்­டால் இழப்­பும் அதி­க­மா­கும்", என்று 'ஜூவல் பேலஸ்' உரி­மை­யா­ளர் நஜு­மு­தின் கூறி­னார்.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே வேலைக்கு ஆள் கிடைப்­பது அரிதாக இருப்பதாகக் கூறினார் லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் துணைத் தலை­வர் ரகு­நாத் சிவா. போதிய மனி­த­வ­ளம் இன்றி இணைய வணி­கத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வது சிர­மம்.

"கைத்­தொ­லை­பேசி போன்ற மின்­பொ­ருள்­களை மக்­கள் நேர­டி­யா­கப் பார்த்து, வாங்க ஆசைப்­படு­கி­றார்­கள். அத­னால், தொடர்ந்து மின்­வர்த்­த­கம் மூலம் விற்­பனை செய்­தால் லாபம் காண்­பது சிர­மம்," என்­கி­றார் பூர்­விகா மொபைல் நிறு­வன உரி­மை­யா­ளர் ஆசிக்.

சில வர்த்­த­கர்­க­ளுக்கு இணை­யம் மூலம் தொழில் செய்­வ­தில் விருப்­பம் இல்­லா­மல் இருக்­க­லாம்.

குமார் பூக்­க­டை­யைச் சேர்ந்த பிரபு, நாதன் ஆகி­யோர் 'டிக்­டாக்' சமூக ஊட­கம் மூலம் பூமா­லை­களை விளம்­ப­ரம் செய்­கி­றார்­கள். அவற்றை வாங்க விரும்­பு­வோர் கடைக்கு நேர­டி­யா­கச் செல்­ல­வேண்­டும். இணை­யம் மூலம் மாலை­களை வாங்க இய­லாது.

மின்­வர்த்­த­கத்­தில் ஈடு­பட வாய்ப்­பு­கள் பல இருந்­தும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் தங்­க­ளின் வழக்­க­மான பாணி­யில் வியா­பா­ரம் செய்­வ­தையே அதி­கம் பார்க்க முடி­கிறது. கடை வாடகை, பொருள், சேவை வரி போன்ற செல­வு­களுக்கு இடையே அவர்­கள் எதிர்­கா­லத்­தில் மின்­வர்த்­த­கத்தை அதி­கம் நாட வாய்ப்­புண்டு.

ரச்சனா வேலாயுதம்