தமிழகத்தில் திமுகவைச்
சேர்ந்த உதயநிதி ஸ்டாலின்
2022 டிசம்பர் 14ஆம் தேதி விளையாட்டு, இளையர் நலன் அமைச்சராகப் பதவி ஏற்றார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்து மறைந்தவர் திரு மு. கருணாநிதி. அவரது மகன் திரு மு.க. ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ள நிலையில் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகி உள்ளார்.
நயன்-சிவன் திருமணம்
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட திருமணத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
கைமாறிய டுவிட்டர்
உலகின் பணக்காரர்களுள் ஒருவரான இலொன் மஸ்க், 'டுவிட்டர்' சமூக ஊடகத் தளத்தை $62 பில்லியனுக்கு வாங்கினார். அவர் இந்நிறுவனத்தை வாங்கிய கையோடு அதன் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகிய நால்வரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
தொங்குபால விபத்து
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் 1877ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தொங்குபாலம் எதிர்பாரா வகையில் அக்டோபர் 30ஆம் தேதி உடைந்து விழுந்தது. குழந்தைகள் உட்பட 141 பேர் இந்த விபத்தில் மாண்டனர். 230 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் ஆறு மாதங்களுக்கு செப்பனிடும் பணிக்காக மூடப்பட்டிருந்தது. புதுப்பிப்பு முடிந்து திறக்கப்பட்ட ஐந்தாவது நாளில் அது உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது அரசு நடவடிக்கை எடுத்தது.
கிண்ணம் வென்ற இங்கிலாந்து
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வென்றது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 2022 நவம்பர் 13ஆம் தேதியன்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிக்கனி பறித்தது இங்கிலாந்து.
மரணமும் போராட்டமும்
ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பின்னர், பெண்கள் ஹிஜாப் என்னும் பெண்கள் அணியும் தலையங்கியை அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பெண்கள் ஒன்பது வயதிலிருந்தே இந்த ஹிஜாப்பை பொது இடங்களில் அணிய வேண்டும். ஆனால் 2022 செப்டம்பர் மாதத்தில் 22 வயது மாஷா அமினி. ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினர் அவரை கடுமையாக நடத்தினர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் அந்தப் பெண். இவரது இறப்பு ஈரானில் போராட்டங்களுக்கு வித்திட்டது. போராட்டங்களில் பல நூறு பேர் மாண்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.
வரலாறு படைத்த கத்தார்
முந்திய ஆண்டுகளின் உலகக் கிண்ண ஆட்டங்களுடன் ஒப்பிடுகையில் கத்தாரில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின்போது பெரியளவிலான சண்டைச் சச்சரவோ ஆபத்தான சூழ்நிலைகளோ ஏற்படவில்லை. குறிப்பாக, பீர் உள்ளிட்ட மதுபானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில் வித்தியாசமாக, வெற்றிகரமாக நடைபெற்றன இந்த உலகக் கிண்ண ஆட்டங்கள்.

