சீனப் புத்தாண்டு விடுமுறையை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பழக்கத்தைத் தம் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார் 26 வயது மதி தனபாலன். அப்பா சிங்கப்பூரில் ஊழியராக வேலை செய்தபோது சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் திறந்தவெளியில் நண்பர்களுடன் உணவு சாப்பிடுவதோடு இறைவனை வணங்கி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் வந்தார்.
மதி அதே பழக்கத்தைக் கடைப்பிடித்து சீனப் புத்தாண்டின் ஒவ்வொருநாளன்றும் தம் நண்பர்களுடன் புதிய நடவடிக்கையில் ஈடுபடுவார். சிங்கப்பூரில் உள்ள பல இடங்களையும் நண்பர்களோடு சுற்றிப்பார்ப்பார். பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் இவர், ஈராண்டுகளுக்குப் பின் லிட்டில் இந்தியாவில் உள்ள திடலில் நண்பர்களுடன் கபடிப் போட்டியில் விளையாட ஆர்வத்தோடு உள்ளார்.
சிங்கப்பூருக்கு வந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 23 வயது அஜித்.டி இந்த நான்கு நாள் பொது விடுமுறையை எவ்வாறு கழிப்பதென்று யோசித்தார். சிங்கப்பூரில் சந்தித்த நண்பர்களுடன் சேர்ந்து இந்திய உணவைச் சாப்பிட்டு கபடி விளையாடுவதாக அவர் குறிப்பிட்டார்.
"கன்னியாகுமரியில் கபடிக் குழுவில் திறமையான கபடி விளையாட்டு வீரராக இருந்தேன். குடும்பத்தை விட்டுப் பிரிந்த எனக்கு, மறுபடியும் கபடி விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க இந்த பொது விடுமுறை வாய்ப்பளித்து உள்ளது," என்று கட்டுமானத் துறையில் பணி புரியும் அஜித் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்த 30 வயது வேலு பாலமுருகன், இந்த சீனப் புத்தாண்டைத் தமது தங்குவிடுதியில் கொண்டாடுகிறார்.
"இதற்கு முன், நண்பர்களுடன் சேர்ந்து வெளிப்புறத்தில் விளையாட்டுகள் விளையாடி, ஒன்றாகச் சாப்பிடுவோம். ஆனால் இந்த ஆண்டு, உடல் நலமில்லாத என்னால் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க முடியவில்லை என்று வருந்துகிறேன். இந்தப் பொது விடுமுறைக்கு என் நண்பர்கள் சுவையான உணவோடு என்னைப் பார்க்க வருவார்கள்," என்றும் வேலு கூறினார்.
'வெல்டர்' வேலை பார்க்கும் இவர், வெளியே போக முடியாவிட்டாலும் நண்பர்களுடன் தங்குவிடுதியில் ஓய்வுபெற்று, உணவு உண்டு திரைப்படங்களைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்.
பொது விடுமுறை என்றாலும் தமக்கு வேலை உள்ளது என்று எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தின் ஓட்டுநர் எம் சந்திரமூர்த்தி குறிப்பிட்டார்.
"வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்கும் எரிவாயு உருளை எந்நேரமும் தேவை. மிகக் கவனமாக எரிவாயுவைக் கொண்டு செல்வது என் பொறுப்பு. இதனால் பொது விடுமுறையில் வேலை செய்வது எனக்கு புதிதல்ல," என்றார் சந்திரமூர்த்தி.
வெஸ்ட் லைட் தங்குவிடுதியில் இருக்கும் இவர், விடுதியில் மனிதவள அமைச்சு நடத்தும் சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் மூலம் மற்ற இனங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதுடன் சிங்கப்பூரில் பல இனக் கலாசாரம் சார்ந்த வாழ்க்கைமுறையில் வாழத் தாம் கற்றுக்கொள்வதாகவும் கூறினார் சந்திரமூர்த்தி.

