பல்லின சமுதாயம் கொண்ட சிங்கப்பூரில் ஒவ்வோர் இனமும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றன.
இருப்பினும், சீனப் புத்தாண்டை 38 வயது திருமதி உமா தேவி, ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த கொண்டாட்டமாகக் கருதாமல் அதைத் தம் குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாடி வருகிறார். இவரின் கணவர் மஹேந்திரன், 44, சீனப் புத்தாண்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்து வருகிறார்.
திருமதி உமாவின் பிள்ளைகளான ஒன்பது வயது கவினேஷ், ஏழு வயது காவியா ஆகிய இருவரும் சீனப் புத்தாண்டுப் பாடல்களையும் நடனங்களையும் கற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தாருக்குச் சீன மொழியில் வாழ்த்துக் கூறச் சொல்லிக்கொடுத்தார்கள்.
சீனப் புத்தாண்டு உட்பட மக்களால் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களையும் பொது விடுமுறைகளையும் பிரம்மாண்டமாக, புதிய முறையில் கொண்டாட திருமதி உமா விரும்புகிறார்.
இந்த ஆண்டு தங்களின் புதிய வீட்டில் புத்தாண்டு கொண்டாடும் இவர்கள், உற்றார் உறவினர்களுக்கு 'ஸ்டீம்போட்' விருந்துக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
சீனப் புத்தாண்டு தொடர்பான உணவுப் பண்டங்கள், பலகாரங்கள், பானங்கள் ஆகியவற்றுடன் திருமதி உமா தம் பிள்ளைகளுடன் செய்த காகித, 'ஹாங்பாவ்' அலங்காரங்களால் வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுதோறும் நால்வரும் ஒரே நிறத்தில் ஆடைகளை அணிய சில மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடத் தொடங்கிவிடுவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் வீட்டில் சிங்க நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டு புது வீட்டில் குடியேறிய பரபரப்பில், முன்கூட்டியே சிங்க நடனக் குழுவுக்கு அழைப்பு விடுத்து ஏற்பாடு செய்யத் தாம் தவறிவிட்டதை நினைத்து வருந்துகிறார் திருமதி உமா.
"விருந்துக்குப் பின், நாங்கள் போட்டி அங்கம் நடத்துவோம். சீனப் புத்தாண்டு தொடர்பான இந்தக் கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்கும் பிள்ளைக்குப் பரிசுகள் வழங்குவோம்," என்றார் திருமதி உமா. இந்த ஆண்டு முயல் ஆண்டு என்பதால் முயல் பொம்மைகளைப் பரிசாக வாங்கியுள்ளார்.
"பல இன சமுதாயத்தில், மற்ற இனத்தவர்களுடன் சேர்ந்து கொண்டாட நினைப்பதே சிறந்தது. பெற்றோராக நான் என் குழந்தைகளுக்கு என் செயல்கள் மூலம் ஒற்றுமையுணர்வைக் காட்டுவது முக்கியம். பின்னாளில் அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள்," என்று மனநல ஆலோசகராகப் பணிபுரியும் திருமதி உமா கூறினார்.
தாயாரின் இந்த ஆர்வத்தை உணர்ந்து அவரின் பிள்ளைகளும் ஒவ்வோர் ஆண்டில் கொண்டாடப்படும் விழாக்களைக் குடும்பத்தோடு கொண்டாட ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

