போதைப்பொருள் விற்பனைக்காகவும் புழக்கத்திற்காகவும் இரண்டாவது முறை சிறை சென்றிருந்த திரு ராமச்சந்திரனை, சிறையின் நான்கு சுவர்களுக்கிடையே வாடகை வீட்டில் தனியே தவிக்கும் இளம் மனைவி, மூன்று பிள்ளைகளின் சித்திரம் சித்திரவதை செய்தது. கூடவே போதை கிடைக்காத தவிப்பு. பைத்தியம் பிடித்துவிடும் மனநிலைக்குத் தள்ளப்பட்டார்.
மனப்போராட்டத்தின் ஒரு கணத்தில் பித்து நிலையிலிருந்து விடுபட்டு, தவிக்கும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி அவருக்குள் உருப்பெற்றது.
"மீண்டும் குடும்பத்தார் முகத்தில் எப்படி விழிப்பேன் என்ற கேள்வி அனுதினமும் என்னை வாட்டியது. சக சிறைவாசி ஒருவர் 'பிரிசன் ஃபெலோஷிப்' அமைப்புக்கு எழுதச் சொன்னார். அவர்களின் ஆதரவு நான் மீண்டு வர பெரிதும் கைகொடுத்தது," என்றார் 45 வயது திரு ராம்.
இரவுநேர கேளிக்கைத் துறையில் உயர்நிலையில் பணிபுரிந்தபோது திரு ராம் குண்டர் கும்பலில் சேர்ந்தார்.
2010ஆம் ஆண்டு முதல் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடத் தொடங்கிய அவர் 2014ல் பிடிபட்டார். ஏறக்குறைய ஆறாண்டு சிறை தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
சிறையிலிருந்து வெளிவந்தபோது, கையில் பத்து வெள்ளி மட்டுமே வைத்திருந்த மனைவியின் நிலை அவரை உருக வைத்தது. சில மாதங்களிலேயே ஓட்டுநர் உரிமம் பெற்று, வாடகை உந்துவண்டி ஓட்டுநராக பணிபுரியத் தொடங்கினார் திரு ராம்.
"முன்னர் கையில் அவ்வளவு பணம் புரண்டது. இப்போது சம்பாதிப்பது மிகக் குறைவுதான். ஆனால், என்னை விட்டுப்போன சொந்தங்களையும் அவர்களின் அன்பையும் சம்பாதித்துவிட்டேன். அதுவே எனக்குப் போதும்," என்றார் அவர்.
படிப்படியாக உயர எண்ணி மூன்றாண்டுகளில் கிளாஸ் 3, 4, 5 ஓட்டுநர் உரிமங்களை திரு ராம் பெற்றார். தற்போது எரிபொருள் வண்டி ஓட்டுநராக பணிபுரியும் அவர், மென்மேலும் உயர்வதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறார்.
"உங்களைப் போலவே நான் ஆக வேண்டும் என்று என் பிள்ளைகள் கூறும்போதெல்லாம், என்னைப்போல் மட்டும் ஆகிவிடாதீர்கள் என்று சொல்வேன்," என்று கண்கலங்கினார்.
சகாயராஜா தொடக்கநிலை ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒருநாள் தந்தை வீட்டைவிட்டுச் சென்றுவிட, சாப்பாட்டுக்கே தவிக்கும் நிலை. பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியாது இவரும் இவருடைய இரட்டை சகோதரரும் சகோதரியும் கல்வியைக் கைவிட்டனர். 11 வயதில் புகைப் பழக்கம், 13 வயதில் மது, 16ல் கானாபிஸ், 17ல் ஹெராயின் என போதை உலகத்திற்குள் தங்களை இழந்தனர் இரட்டையர்.
தேசிய சேவையின்போது சட்டைப்பைக்குள் 0.2 கிராம் போதைப்பொருள் இருந்த குற்றத்திற்காக 1998ல் 18 மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் திரு சகாயராஜா.
இவர்களுடைய 16வது வயதில் மறுமணம் முடித்த தாயாருக்கு இரு பெண் பிள்ளைகள் பிறந்தனர். மாற்றாந்தந்தையின் வருமானத்தில் குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில், தங்களுடைய வாழ்வைச் சீரழித்துக்கொண்டிருந்த சகோதர்களை தாயார் காவல் துறையிடம் பிடித்துக்கொடுத்தார். 23 வயதில் இருவரும் ஓராண்டு சிறையிலும், ஓராண்டு கண்காணிப்புக் காவலிலும் இருந்தனர். அடுத்து வந்த ஆறு ஆண்டுகளையும் போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சிறையிலேயே கழித்தார் சகாயராஜா.
பிறகு மறுவாழ்வு நிலையம் சென்ற அவருக்கு செறிவூட்டல் வகுப்புகளும், மனநல ஆலோசனைகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. வாழ வேண்டும் என்ற உறுதியோடு அங்கிருந்து வெளியே வந்த சகாயராஜாவுக்கு 'தி ஹெல்பிங் ஹாண்ட்' தொண்டு நிறுவனம் வழிகாட்டியது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொண்டு நிறுவனம் வழி நூற்றுக்கணக்கான முன்னாள் கைதிகளுக்கு உதவியுள்ளார். 2013ல் மணம் முடித்து, தற்போது மனநிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் கூறினார் 52 வயதாகும் சகாயராஜா.
இவரின் இரட்டை சகோதரர் தேவசகாயம், போதைப்பொருள் மோகத்திலிருந்து மீள பல ஆண்டுகள் பிடித்தன. தொடர்ந்து போதைப்பொருள் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு 46வது வயதுவரை 12 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலேயே கழித்தார்.
சகோதரரின் அறிவுரையினாலும் உந்துதலினாலும் மனம்திருந்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக மனைவி, 18 வயது மகளுக்காக வாழ்ந்து வருகிறார்.
"எச்சூழலிலும் சில தவறுகளை ஒருமுறைகூட செய்யக்கூடாது. கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் நிறைந்த வாழ்வே மகிழ்ச்சியானது," என்று இளைய தலைமுறையினருக்குக் கூறினர் இச்சகோதரர்கள்.

