கீழடி - தமிழர் நாகரிகத்தின் தாய்மடி

சொ.சாந்­த­லிங்­கம்

தொல்­லி­யல் வல்­லு­நர்

 

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வு மக்களிடையே பேரார்வத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட ஊர்களின் தொல்லியல் மேடுகளில் தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் கீழடி பெற்ற முக்கியத்துவத்தை வேறெந்த அகழாய்வு இடமும் பெற்றதில்லை. காரணம், இவ்வாய்வு அறிவியல்ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு என்பதுடன், அது வெளிப்படுத்திய நம் நாகரிகத்தின் தொன்மை எச்சங்களே.

‘கீழடி’ என்­னும் ஊர் இன்­றைய சிவ­கங்கை மாவட்­டத்­தில், மதுரை­யி­லி­ருந்து திருப்­பு­வ­னம் செல்­லும் சாலை­யில் 15 கிலோ­மீட்­டர் தொலை­வில் அமைந்­துள்ள சிற்­றூர். மத்­திய அர­சின் தொல்­லி­யல் பரப்­பாய்­வுத் துறை இவ்­வூ­ரில் முதன்­மு­த­லாக 2014-15ஆம் ஆண்­டில் அக­ழாய்வு மேற்­கொண்­டது.

அக­ழாய்­வா­ளர் அமர்­நாத் இரா­ம­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் அந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதற்­கு­முன் 1981ல் சிலைமான் எனும் ஊரைச் சேர்ந்த தமி­ழா­சிரி­யர் பால­சுப்­பி­ர­ம­ணி­யம் கீழ­டி­யில் சில பழங்­கா­லப் பானை ஓடுகளை ­யும் தொல்­பொ­ருள்­களை­யும் மேற்­ப­ரப்பு ஆய்­வில் சேக­ரித்து, தமிழ்­நாடு அரசு தொல்­லி­யல் துறை அலு­வ­ல­கத்­தில் ஒப்­ப­டைத்­தார்.

அவற்றை ஆய்­வு­செய்த அப்­போ­தைய இயக்­கு­நர் இரா.நாக­சாமி, கீழ­டி­யில் கள­ஆய்வு மேற்­கொண்டு அவ்­வூர் ஏறத்­தாழ 2,000 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான வர­லாற்­றுத் தொன்மை கொண்­டது என்று அறி­வித்­தார். ஆனால், அத்­து­றை­யால் தொடர்ந்து இப்­பகு­தி­யில் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

வைகைக் கரையில் முதல் ஆய்வு

மது­ரையில் பிறந்த திரு அமர்­நாத் இரா­ம­கி­ருஷ்­ணன் மத்­திய அரசு தொல்­லி­யல் பரப்­பாய்­வுத் துறை­யின் அக­ழாய்­வுப் பிரி­வுத் தலை­வ­ராய்ப் பொறுப்­பேற்றதும் வைகை நதி­யின் பிறப்பிடமான வெள்­ளி­மலை தொடங்கி, அது கட­லில் கலக்­கும் அழ­கன்­கு­ளம், ஆற்­றங்­க­ரை­வரை ஒரு நெடிய மேற்­ப­ரப்பு ஆய்வை வைகை­யின் இரு கரை­க­ளி­லும் மேற்­கொண்­டார். அதன்­மூ­லம் வைகைக்கரை ­களில் 293 தொல்­லி­யல் மேடு­கள் நிறைந்­தி­ருப்­ப­தைக் கண்­டார்.

அவற்­றில் ‘கீழடி’ உட­னடி அகழாய்­விற்கு ஏற்ற இட­மா­கத் தேர்வு ­செய்­யப்­பட்­டது. இவ்­வூ­ரில் பள்­ளிச்­சந்­தைத் திடல் என்ற தொல்­லி­யல் மேடு கிட்­டத்­தட்ட 110 ஏக்­கர் பரப்­ப­ள­வில் நீண்டு கிடந்­ தது. மண­லூர், கொந்­தகை என்ற வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க ஊர்களும் கீழ­டி­யைச் சுற்றி இருந்­தன.

மண்சுடுதல், துணிநெய்து, சாயம் ஏற்றி செழித்திருந்த தொழில்கள்

தொன்­மை­யான செங்­கல் கட்டு மா­னம் வெளிப்­பட்­டி­ருந்­த பள்ளிச்­சந்­தைத் திடலில் அகழாய்வுப் பணி­க­ளைத் தொடங்­கி­னர். 2014 இலிருந்து 16 வரை கிட்டத்தட்ட ஈராண்­டு­க­ளுக்கு அக­ழாய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

பல­வி­த­மான மணிக்­கற்­கள், சுடு­மண் உரு­வங்­கள், சது­ரங்­கக் காய்­கள், தந்­தத்­தா­லான பக­டைக்­காய்­கள், மான் கொம்­பு­கள், கீறல் குறி­க­ளு­டன் (graffiti marks) கூடிய பானை ஓடு­கள், சுடு­மண் காத­ணி­கள், தக்­கி­ளி­கள், ஊசி­கள், தங்க அணி­க­லன்­கள் எனப் பல அரிய தொல்­பொருள்களும் கட்­ட­டப் பகு­தி­களும் வெளிக்­கொ­ண­ரப்­பட்­டன.

அவற்­றுள் மிக முக்­கி­ய­மான கண்­டு­பி­டிப்பு, நீண்ட நெடிய செங்­கல் கட்­டு­மா­னங்­கள் ஆகும்.

சுட்ட செங்­கல்­லால் ஆன நெடிய சுவர்­கள், வாய்க்­கால்­கள், செங்­கல்­லால் ஆன வரி­சை­யான தொட்­டி­கள், அவற்­றில் நீர் உள்ளே வரு­வ­தற்­கும் வெளி­யேறு­வ­தற்­கு­மான வழி­கள், கட்டுமானங்­க­ளுக்­குள் பல உறை­க­ளைக் கொண்ட கிண­று­கள் ஆகி­யவை மிக முக்­கி­ய­மான கண்டுபிடிப்புகள்.

இந்த இடி­பாட்­டுக் கட்டுமானங் ­க­ளுக்கிடையே ஊது­உ­லை­கள், சுடு­மண் கிண்­ணங்­கள், முழு­மை­யான பானை­கள் எனப் பல­வும் கிடைத்தன. அவை ஒரு தொழிற்­கூ­டத்­திற்கு உரி­யவை என்­றும் குறிப்­பாக தொட்­டி­கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தன் மூலம் இவை ஒரு சாயப்­பட்­டறை செயல்­பட்ட இட­மாக இருக்­க­லாம் என்­றும் ஆய்வாளர்கள் கருத்துரைத்த­னர். நூற்­புக்­கு­ரிய தக்­கி­ளி­கள் கிடைத் ததால் இங்கு நெசவு ஆலை செயல்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் அதற்கு உறு­து­ணை­யா­கச் சாயப்­பட்­ட­றை­யும் இயங்­கி­யி­ருக்­க­லாம் என்­றும் ஊகித்­த­னர். இக்­கண்­டு­பி­டிப்­பு­கள் மக்­க­ளி­டையே பெரும் எதிர்­பார்ப்­பை­யும் ஆர்­வத்­தை­யும் ஏற்­ப­டுத்­தின.

தமிழ்­நாட்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட அக­ழாய்­வு­களில் இத்­த­கைய நெடிய கட்­டு­மா­னங்­களோ தொழிற்­கூ­டம் செயல்­பட்­ட­மைக்­கான சான்­று­களோ இதற்­கு­முன் வெளிப்­பட்­ட­தில்லை. சங்க இலக்­கி­யங்­களில் பேசப்­பட்ட மது­ரை­யின் அமைப்­பு­கள், தொழில், வணி­கம் போன்ற செய்­தி­க­ளுக்கு நேர­டிச் சான்­று­க­ளாக இந்த அக­ழாய்­வுப் பொருள்­கள் அமைந்­தன.

வைகைக்­க­ரை­யில் ஒரு நகர நாக­ரி­கம் உரு­வா­கிச் செழித்­தி­ருந்து, பின் எக்­கா­ர­ணத்­தாலோ அழிந்­து­விட்­டது என்று அறி­ஞர்­கள் கரு­தி­னர். இன்­றைய நவீன அறி­வி­யல் தொலைத்­தொ­டர்பு வச­தி­கள் மூலம் உல­கெங்­கும் இவ்­வாய்வு முடி­வு­கள் படங்­கள் வாயி­லா­க­வும் கட்­டு­ரை­கள், உரைகள் வாயி­லா­க­வும் சென்­ற­டைந்­தன. மக்­க­ளின் பேரா­த­ர­வும் ஆர்­வ­மும் ஆய்­வா­ளர்­க­ளைத் திக்கு­முக்­கா­டச் செய்­தன.

மக்கள் எழுச்சியின் பயன்

இத­னால், மத்­திய அரசு இந்த அக­ழாய்வை ஈராண்­டு­க­ளோடு முடித்­துக்­கொள்ள நினைத்­தது. ஆனால், மக்­க­ளின் தொடர் முன்­னெ­டுப்­பு­, வற்­பு­றுத்­தல்­களால் தொல்­லி­ய­லா­ளர் திரு இரா­மன் தலை­மை­யில் 2016-17ல் அகழாய்வு தொட­ரப்­பட்டது. அதோடு மத்­தி­ய தொல்­லி­யல் துறை இவ்­வாய்வை முடித்­துக்­கொண்­டது.

எனினும், மக்களின் தொடர் கோரிக்­கை­கள் மூலம் தமிழ்­நாடு அரசு தொல்­லியல் துறை இந்த அக­ழாய்­வைத் தொடர்ந்து 2018 முதல் 2022 வரை மேலும் ஐந்து ஆண்­டு­களுக்கு மேற்­கொண்­டது.

இவ்வாய்­வு­கள் மூலம் கிடைத்த தொல்­பொ­ருள்­களை எல்­லாம் இதே இடத்­தில் காட்­சிப்­ப­டுத்தும் நோக்கில் தற்­போது இவ்­வூ­ரில் கிட்­டத்­தட்ட ரூ.19 கோடி செல­வில் ஓர் அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

எழுத்தறிவு பெற்றிருந்த சமூகம்

இங்கு கிடைத்த தொல்­பொருள்­களில் தமிழி (Tamil Brahmi) எழுத்­து­க­ளைக் கொண்­டுள்­ள நூற்­றுக்­கும் மேற்­பட்ட பானை ஓடு­கள் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தவை. அனைத்­தும் ஆட்­பெ­யர்­க­ளைக் குறிப்­ப­வை­யா­கும். ஆதன், திசன், குவி­ரன் என்­பன போன்ற பெயர்­கள் பல­முறை இடம்­பெற்­றுள்­ளன.

இவற்றின் காலத்தை அறி­வி­யல் முறை­யில் கண்டறிய சில தொல்­பொ­ருள் மாதி­ரி­கள் அமெ­ரிக்­கா­வின் மயாமி நக­ரி­லுள்ள பீட்டா பகுப்­பாய்­வ­கத்­தில் ஆராயப் பட்டது. அதில் ஒரு குறிப்­பிட்ட எழுத்­துப் பொறித்த பானை ஓடு கி.மு. 580ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்­தது என அறி­யப்­பட்டது.

இதன்மூலம் கி.மு.580லேயே தமிழ் நிலத்­தில் மண்­பா­னை­களை வனைந்த அல்­லது அவற்­றைப் பயன்­ப­டுத்­திய எளிய மக்­கள்­கூட எழுத்­த­றிவு பெற்­றி­ருந்­த­னர் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழகத்தில் இதற்கு முன் மேற்­கொள்­ளப்­பட்ட பொருந்­தல், கொடு­ம­ணல் அக­ழாய்­வுகளில் முறையே கி.மு.490, கி.மு.530 காலத்­தைச் சேர்ந்த எழுத்­துப் பொறித்த பானை ஓடு­கள் கண்ட­ றி­யப்­பட்டு, அதே அமெ­ரிக்க ஆய்வு நிறு­வ­னத்­தால் காலக்­கணிப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. கீழடி அக­ழாய்வு அதைக்­காட்­டி­லும் காலத்­தால் முற்­பட்ட எழுத்­து­களைக் கொண்­டுள்­ளது.

கீழடி அக­ழாய்­வு­களில் தங்க அணி­க­லன் பகு­தி­கள், செப்­புப் பொருள்­கள், இரும்­புக் கரு­வி­க­ளின் பாகங்­கள், சுடு­மண் சொக்­கட்­டான் காய்­கள், வட்­டச் சில்­லு­கள், சுடு­மண் காத­ணி­கள், கண்­ணாடி, விலை­யு­யர்ந்த மணிக்­கற்­கள், மட்­பாண்ட ஓடு­கள், ரௌலட்­டடு, அரிட்­டைன் ஓடு­கள் எனப் பல­வும் வெளிக்­கொ­ண­ரப்­பட்­டுள்­ளன.

பெரும்­பா­லான மட்­பாண்­டங்­களில் பானை­க­ளைச் சுடு­வ­தற்கு முன்­பும் பின்­பும் இடப்­பட்ட கீறல்­களும் குறி­யீ­டு­களும் காணப்­ப­டு­கின்­றன.

இப்­பொ­ருள்­கள் வாயி­லாக, கீழ­டிப் பகு­தி­யில் பண்­டைக் காலத்­தில் தமி­ழர் நாக­ரி­கம் வளர்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது என்­ப­தும் இப்­ப­குதி மது­ரை­யின் கிழக்­குத் திசை நீட்­சி­யாக விளங்­கி­யி­ருக்க வேண்­டும் என்­ப­தும் புல­னா­கிறது. மேலும், கி.மு. 6ம் நூற்­றாண்­டுக் காலத்­தி­லேயே வைகைக் கரை­யில் நகர நாகரி­கம் நிலை­பெற்­றி­ருந்­தது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதே கால­கட்­டத்­தில்­தான் வட­இந்­தி­யா­வில் கங்­கைச் சமவெளி ­யும் நக­ர­ம­ய­மா­கத் தொடங்­கி­யது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

விலங்குகள் சொல்லும் கதைகள்

கீழடி அக­ழாய்­வில் கிடைத்த விலங்­கு­க­ளின் 70 எலும்­புத் துண்­டு­க­ளின் மாதி­ரி­கள், அறி­வி­யல் அடிப்­ப­டை­யில் பகுப்­பாய்வு செய்­வ­தற்கு புனே­யி­லுள்ள முது­கலை மற்­றும் ஆராய்ச்சி நிறு­வ­ன­மான டெக்­கான் கல்­லூ­ரிக்கு அனுப்­பப்­பட்­டன. அவை திமில்­ உள்ள காளை, எருமை, வெள்­ளாடு, கலை­மான், காட்­டுப்­பன்றி, மயில் ஆகிய விலங்­கி­னங்­க­ளுக்கு உரி­யன என்று அடை­யா­ளம் காணப்­பட்­டன. அவற்­றுள் காளை, எருமை, வெள்­ளாடு ஆகி­யவை 53%. அவை வேளாண்­மைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. வேளாண்­மை­யும் கால்­நடை வளர்ப்­பும் இப்­ப­கு­தி­யின் முதன்­மைத் தொழில்­களாக இருந்­தி­ருக்­க­லாம் என இதன்­மூ­லம் அறி­யப்­ப­டு­கிறது.

தமிழர் கட்டுமானத் திறன்

இங்கு கிடைத்த செங்­கற்­கள், சுண்­ணாம்­புச் சாந்து, கூரை ஓடு­கள், சுடு­மண்­ணா லான உறை­கி­ணற்­றின் பூச்சு ஆகி­ய­வற்­றின் மாதி­ரி­கள் வேலூர் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் ஆய்வு செய்­யப்­பட்டு, அவற்றில் சிலிக்கா மண், சுண்­ணாம்பு, இரும்பு, அலு­மி­னி­யம். மெக்­னீ­சி­யம் போன்ற கனி­மங்­கள் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது.

செங்­கல், கூரை ஓடு­களில் 80 விழுக்­காட்­டிற்­கும் மேலாக சிலிக்­கா­வும், பிணைப்­புக் கார­ணி­யாக அதிக அள­வாக ஏழு விழுக்­காடு சுண்­ணாம்பு கலந்­துள்­ள­தை­யும், சுண்­ணாம்­புச்­சாந்து 97% சுண்­ணாம்பு கொண்­டி­ருந்­த­தை­யும் கொண்டு அக்­கா­லத்­தில் தர­மிக்க கட்­டு­மா­னப் பொருள்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை அறியலாம்.

இங்கு கண்­ட­றி­யப்­பட்ட கட்டு ­மா­னங்­களில் கிடைத்த செங்­கற்கள் தமிழகத்தின் பிற இடங்­களில் சங்­க­கா­லக் கட்­டு­மா­னங்­களில் கிடைத்த செங்­கற்­க­ளைப் பெரிதும் ஒத்­துள்­ளன.

கிடைத்­துள்ள பானை­யோட்­டுக் கீறல் குறி­கள் பல, சிந்­துச் சம­வெ­ளி­யில் கிடைத்த குறி­களோடு தொடர்­பு­டை­ய­ன­வாக உள்­ளது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கறுப்பு-சிவப்­புப் பானை­யோடு­கள் நிற­மாலை­யி­யல் பகுப்­பாய்­விற்கு (Spectroscopic analysis) உட்­ப­டுத்­தப்­பட்­டதன் மூலம் சிவப்பு நிறத்­திற்கு ‘ஹேம­டைட்’ எனும் இரும்­புத் தாதுப்­பொ­ரு­ளை­யும் கறுப்பு நிறத்­திற்­குக் கரி­யை­யும் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது தெரி­ய­வ­ரு­கிறது. இந்தப் பானை­களை 1,100 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நி­லை­யில் சுட்டு உரு­வாக்­கும் தனித்­தன்மை வாய்ந்த தொழில்­நுட்­பத்தை கி.மு. 6ஆம் நூற்­றாண்டி­லேயே தமி­ழர்­ அறிந்­துள்­ள­னர் என்­பது தெரிகிறது. இத்­தா­லி­யில் செயல்­படும் பைசா பல்­கலைக்­க­ழக ஆய்வு முடி­வின்­படி இவ்­வுண்மை பெறப்­பட்­டுள்­ளது.

வெளிநாட்டு வணிகம் செய்து செழிப்போடு வாழ்ந்த தமிழர்

பெண்­கள் அணி­யும் தங்­க அணி­க­லன் துண்­டு­கள், செப்பு அணி­க­லன்­கள், மதிப்­பு­மிக்க மணி­கள், 4,000க்கும் மேற்­பட்ட கல்­ம­ணி­கள், கண்­ணாடி மணி­கள், சங்கு வளை­யல்­கள், தந்த வளை­யல்­கள், பளிங்­குக் கற்க ளா­லான மணி­கள் ஆகி­யவை யும் கிடைத்­துள்­ளன. இவை தமிழரின் செல்­வச்செழிப்பான வாழ்க்­கையைக் காட்டுகிறது.

இந்­தி­யா­வில் மகா­ராஷ்­டிரா, குஜ­ராத் போன்ற மாநி­லங்­களில் பர­வ­லா­கக் காணப்­படும் அகேட், சூது­ப­வ­ளம் (Cornelian) போன்ற மணிக்­கற்­கள் கீழ­டி­யில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இதன்­மூ­லம் வட­மா­நி­லங்­க­ளு­டன் கொண்­டி­ருந்த வணிக உறவு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அக­ழாய்­வு­கள் மூலம் பெற்ற சான்­று­க­ளைக் கொண்டு இப்­ப­குதி மக்­கள் வேளாண்மை, கால்­நடை வளர்ப்பு, நெச­வுத்­தொ­ழில், வணி­கம் ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்­டி­ருந்­த­னர் என்­ப­தும் வட­இந்­திய மாநி­லங்­க­ளு­ட­னும் ரோம் நக­ரத்­து­ட­னும் வணி­கத் தொடர்பு கொண்­டி­ருந்­த­னர் என்­ப­தும் அறி­யப்­ப­டு­கிறது. மக்­கள் ஒரு வள­மான வாழ்­வைப் பெற்று, நகர நாக­ரி­கத்­தைப் பேணிக்­காத்­த­னர் என்­பது திண்­ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!