மகப்பேறு காலத்தை முழுமையாக்குகின்றன தமிழருக்கே உரிய பாரம்பரிய சடங்குகள். வளைகாப்பு, பெரியாச்சிப் படையல் முதலிய சடங்குகளை முன்னிருந்து நடத்தித் தருகிறார், 60 வயது வான்மதி சோமு. இருபது ஆண்டு களாகச் செய்துவந்த குழந்தைப் பராமரிப்புத் தொழிலிலிருந்து ஓய்வுபெற நினைத்த இவர், இப்பணியை ஐந்தாண்டுகளாக செய்துவருகிறார்.
அதில் தொடங்கி, கருவுற்ற பெண்களுக்கான உடற்பிடிப்பு மற்றும் பராமரிப்புச் சேவைகளைதிருமதி வான்மதி மூன்றாண்டு களாக வழங்கிவருகிறார். புதிய தாய்மாருக்கு மன ஆறுதல் தருவதே இப்பணியின் ஆகச் சவாலான, பொருள் பொதிந்த அம்சமெனக் கூறினார் இவர்.
கருவுற்றபோது உடலில் ஏற்படும் மாற்றங்கள், இயல்பாகவே பெண்களை மனதளவில் பாதிக்கின்றன. காலில் நீர் கோர்த்துக் கொண்டால் சொந்தமாக அமர் வதும் நிற்பதும்கூட சிரமமாகிவிடும். "அப்பிரச்சினைகளைப் போக்கி, அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை தருவது அவசியம்," என்றார் திருமதி வான்மதி.
கம்பத்தில் வளர்ந்த திருமதி வான்மதி, தாம் பிள்ளைபெற்றபோது பல இன அண்டைவீட்டார் அளித்த அறிவுரைகளைக் கொண்டு தமக்கென்று புதிய முறைகளை உருவாக்கியுள்ளார்.
தற்போது சிசுக்களுக்கு மஞ்சள் காமாலை அதிகம் ஏற்படு வதையும் அறுவை சிகிச்சைவழி பிள்ளைப்பேறு அதிகமாக உள்ளதையும் கவனித்த அவர், அடி வயிற்று ரணங்களை ஆற்று வதற்கும் மஞ்சள் காமாலையைப் போக்குவதற்குமான சிகிச்சை முறைகளைத் தேடினார்.
பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படும் 'மெய் குவை ஹுவா' பூக்களுக்கும் தமிழரின் பன்னீர் ரோஜாக்களுக்கும் உள்ள மருத்துவ குணங்களை அறிந்துகொண்ட இவர், அவற்றால் சிசுக்களைக் குளிப்பாட்டுவது மஞ்சள் காமாலைக்கு நல்ல பலன் தருவதாகச் சொன்னார்.
பொமெல்லோ இலைகள் முதலிய மூலிகைகளை உள்ளூரிலும் இந்தியாவிலிருந்தும் சேகரித்து குளியல் பொடி செய்வதும் இவரது தனித்துவங்களில் ஒன்று.

